Casting : Trisha, Shabir, Santhosh Pradap, Miya Gorge, Vivek Prasanna, MS Baskar, Vela Ramamoorthy
Directed By : Arun Vasikaran
Music By : Sam.CS
Produced By : AAA Cinema Pvt Ltd.
திரிஷாவின் கணவர் சந்தோஷ் பிரதாப் மற்றும் அவர்களது பிள்ளை இருவரும் காரில் மதுரைக்கு பயணம் செய்யும் போது, விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்கள். கணவன் மற்றும் பிள்ளையின் இறப்பால் தவிக்கும் திரிஷா, விபத்து நடந்த பகுதியை பார்வையிடும் போது அங்கே அவர் கண் முன் ஒரு விபத்து நடக்கிறது. விபத்தில் சிக்கியவரை திரிஷா காப்பாற்ற முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளான கார் மற்றும் அதில் இருந்த நபர் திடீரென்று மாயமாகி விடுகிறார். இது பற்றி திரிஷா காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அந்த இடத்தை போலீஸார் பார்வையிடும் போது விபத்து நடந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் அங்கு தென்படவில்லை. இதனால், அதிர்ச்சியாகும் திரிஷா, அந்த இடத்தில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்வதோடு, அதன் பின்னணியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அங்கு என்ன நடக்கிறது? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.
தேசிய நெடுஞ்சாலையில் தனியாக வாகனத்தில் பயணிப்பவர்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வரும் நிலையில், அது எதிர்பாராமல் நடக்கும் விபத்துகள் அல்ல, திட்டமிட்டு செய்யப்படும் கொலைகள், என்ற உண்மையை சொல்லும் விதமாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
கதையின் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் திரிஷா, 10 வயது சிறுவனுக்கு அம்மா என்றால் நம்ப முடியவில்லை. இன்னும் 10 வருடங்களுக்கு நாயகியாக நடித்தாலும் ரசிகர்கள் அவரை கொண்டாடும் அளவுக்கு அழகான அம்மாவாக வலம் வருகிறார். கணவன் மற்றும் பிள்ளையின் மரணத்தின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் அவரது துணிச்சல் மற்றும் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
படத்தின் மற்றொரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் டான்சிங் ரோஸ் ஷபீர், நடிப்பில் மிரட்டுகிறார். வாழ்க்கையில் மரியாதையுடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், அதனால் அனைத்தையும் இழந்து வருந்தும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
திரிஷாவின் கணவராக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், ஒரு சில காட்சிகள் வந்தாலும் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். திரிஷாவின் தோழியாக நடித்திருக்கும் மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி என அனைத்து நடிகர்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷ் இரவு நேரக் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, விபத்து காட்சிகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை பேர் சொல்லாமலேயே சாம்.சி.எஸ் இசை என்று சொல்லும் அளவுக்கு வழக்கமான சத்தத்துடன் பயணித்திருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்களை மையமாக வைத்து இயக்குநர் அருண் வசீகரன் எழுதியிருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், அதில் இருக்கும் சஸ்பென்ஸை அவர் ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு புரியும் வகையில் காட்சிகளை நகர்த்தியிருப்பது படத்தை தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், சில திருப்பங்களை வைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்த முயற்சித்திருக்கிறார்.
ஒரு பக்கம் திரிஷாவின் கதை, மறுபக்கம் ஷபீரின் கதை என இரண்டு கதைகளை சொல்வது நல்ல யோசனை தான் என்றாலும், ஒரு கட்டத்தில் இரண்டு கதைகளுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? என்பதை ரசிகர்கள் சுலபமாக யூகித்து விடுகிறார்கள். அப்படி அவர்கள் யூகிப்பதை பொய்யாக்கி வேறு விதமாக கதையை சொல்லி எதிர்பார்க்காத திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தால், படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
மொத்தத்தில், இந்த ‘தி ரோட்’ தவறான பயணம்.
ரேட்டிங் 2.5/5