Latest News :

’திரையின் மறுபக்கம்’ திரைப்பட விமர்சனம்

795a190df94202c8d6541d36286d32f0.jpg

Casting : Mohammed Ghouse, Natarajan Manigandan, Hema Genelia, Nitin Samson

Directed By : Nitin Samson

Music By : Anil Nalan Chakravarthy

Produced By : 360 Degrees - Nitin Samson

 

தீவிர சினிமா ரசிகரான விவசாயி சத்யமூர்த்தி, ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட, அவரது ஆசையை பயன்படுத்தி வேலை தெரியாத உதவி இயக்குநர் செந்தில், அவரை தயாரிப்பாளராக்கி திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். படம் முடிந்து வியாபார பணியை தொடங்கும் போது, படம் சரியில்லாததால் விலை போகாது என்று சொல்வதோடு, படத்தில் மேலும் பல விசயங்களை சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே, நிலத்தை விற்றுவிட்டு, சொந்த வீட்டை அடமானம் வைத்து படம் தயாரித்திருக்கும் சத்யமூர்த்தியால் தொடர்ந்து பணம் செலவு செய்ய முடியாமல் திணறுகிறார். இருந்தாலும், படத்தில் கூடுதலாக சில காட்சிகளை சேர்த்தால் மட்டுமே படம் வியாபாரமாகும் என்ற இக்கட்டான நிலை ஏற்படுகிறது.

 

இதற்கிடையே, கடன் கொடுத்த பைனான்சியர் மிரட்ட, எப்படியாவது படத்தை வெளியிட வேண்டும் என்று போராடும் சத்யமூர்த்தி மீண்டும் பல லட்சங்கள் கடன் வாங்கி படப்பிடிப்பை நடத்தி படத்தை முடிக்கிறார். அதன் பிறகும் வியாபாரத்தில் பல சிக்கல்களை சந்திக்கும் சத்தியமூர்த்தி இறுதியில் படத்தை வெளியிட்டாரா?, இல்லையா? என்பதை திரையுலகில் நடக்கும் மோசடிகளை வெளி உலகத்திற்கு காட்டும் வகையில் சொல்வது தான் ‘திரையின் மறுபக்கம்’.

 

கதையின் நாயகனாக திரைப்பட தயாரிப்பாளர் சத்யமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மொஹமத் கவுஸ் மிக இயல்பாக நடித்திருக்கிறார். சில இடங்களில் தடுமாறியிருந்தாலும் முதல் படம் என்பதால் அதை மறந்துவிட்டு பார்த்தால், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி கச்சிதமாக நடித்து கவர்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 

 

வேலை தெரியவில்லை என்றாலும், பொய் மூலமாக வாழ்க்கை என்ற வண்டியை ஓட்டும் இயக்குநர் செந்தில் வேடத்தில் நடித்திருக்கும் நடராஜன் மணிகண்டன், கதபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருப்பதோடு, பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். ஆஸ்கார் குட்டி என்ற பெயருடன் ஆங்கிலப் படங்களை காப்பியடித்து கதை எழுதும், அவருடைய குறும்பட உருவாக்கம் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

 

நடிப்பதற்காக வாய்ப்பு தேடி வாழ்க்கையை தொலைக்கும் பெண்களை எச்சரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹேமா ஜெனிலியா, எளிமையாக இருந்தாலும் இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார்.

 

மொஹமத் கவுஸ், நடராஜன் மணிகண்டன் மற்றும் ஹேமா ஜெனிலியா ஆகியோரை தவிர்த்து சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பதோடு, சினிமாவில் உலா வரும் ஏமாற்றுக்காரர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

 

சிறு வேடத்தில் நடித்து, கதை எழுதி இயக்கியிருப்பதோடு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பணிகளோடு படத்தை தயாரிக்கவும் செய்திருக்கும் நிதின் சாம்சன், இதுவரை சொல்லப்படாத திரையுலகின் இருட்டு பக்கங்களை இப்படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் அனில் நலன் சக்கரவர்த்தியின் இசையும், நிதின் சாம்சனின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

சினிமாவை பற்றி சரியாக தெரியாமல், வெறும் ஆசையோடு அத்துறையில் தயாரிப்பாளர்களாக நுழைபவர்கள், எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திப்பார்கள், அவர்களை யார் யார், எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை மிக விவரமாக சொல்லி எச்சரித்திருக்கும் இயக்குநர் நிதின் சாம்சன், அதை நகைச்சுவையாக சொல்லி நம்மை சிரித்து ரசிக்கவும் வைத்திருக்கிறார்.

 

தற்போதைய டிஜிட்டல் உலகில் சினிமா தொழில் என்பது எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது, அதில் எப்படிப்பட்ட மோசடிகள் நடக்கிறது என்பதை மிக இயல்பாகவும், கமர்ஷியலாகவும் சொல்லப்பட்டிருக்கும் இந்த படம் பட்ஜெட்டில் சிறிய படமாக இருந்தாலும், சொல்லப்பட்டிருக்கும் விசயம் மிகபெரியதாகவும், சினிமா ஆசைக்கொண்டவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாகவும் இருக்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘திரையின் மறுபக்கம்’ சினிமா ஆசை உள்ளவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery