Latest News :

’லியோ’ திரைப்பட விமர்சனம்

044bd55f4980d3129c9dd8627d174b38.jpg

Casting : Vijay, Trisha, Sanjay Dutt, Arjun, Mansoor Alikhan, Goutham Menon, Priya Anand, Myskin, Sandy, Gorge Mariyan

Directed By : Logesh Kanagaraj

Music By : Aniruth

Produced By : SS Lalit Kumar

 

மனைவி திரிஷா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இமாச்சல பிரதேசத்தில் வசித்து வரும் விஜய், அங்கு உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையே அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தால் பாராட்டப்படும் விஜய், அரசின் வீரதீர விருதுக்கும் பரிந்துரைகப்படுகிறார். இதனால், அவருடைய புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாக அதை பார்த்து ஆந்திர மாநிலத்தில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் தங்களது கூட்டத்தோடு விஜயை தேடி இமாச்சல பிரதேசத்துக்கு வருகிறார்கள். அங்கு விஜயை சந்திக்கும் அவர்கள், “நீ லியோ தானே” என்று கேட்கிறார்கள். ஆனால், விஜய் ”தான் பார்த்திபன், நீங்கள் ஆள் மாற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சொல்ல, நீ லியோ என்று ஒப்புக்கொள்ளும் வரை உன்னையும், உன் குடும்பத்தையும் விட மாட்டோம் என்று கூறி அந்த கும்பல் விஜய்க்கு தொல்லைகள் கொடுக்கிறது. அவர்களிடம் இருந்து தன்னையும், தனது குடும்பத்தையும் விஜய் எப்படி காப்பாற்றுகிறார், லியோ யார்?, அவருக்கும் அந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் விஜய் அனைத்து ஏரியாக்களிலும் நிறைவாக செயல்பட்டிருக்கிறார். குடும்பம், குழந்தைகள், நடனம், அரசியல் வசனங்கள் என அனைத்தையும் அளவாகவும், நிறைவாகவும் செய்து ரசிகர்களை கொண்டாட வைக்கும் விஜய், ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார்.

 

விஜயின் மனைவியாக நடித்திருக்கும் திரிஷா, கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருப்பதோடு, மனைவி கதாபாத்திரத்தை தத்ரூபமாக செய்திருக்கிறார். விஜய் - திரிஷா இருவருக்குமான கணவன் - மனைவி கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் வெளிப்பட்டிருக்கிறது.

 

வில்லன்களாக நடித்திருக்கும் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் இருவரும் அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். இருவரும் வரும் காட்சிகள் திரைக்கதையின் வேகத்தை அதிகரித்திருப்பதோடு, காட்சிகளுக்கு விறுவிறுப்பையும் கொடுத்திருக்கிறது.

 

கெளதம் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின், சாண்டி, பிரியா ஆனந்த், ஜார்ஜ் மரியன், மடோனா செபஸ்டியன் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

மனோஜ் பரம்ஹம்சாவின் ஒளிப்பதிவில் இமாச்சல பிரதேசத்தின் அழகு கண்களுக்கு விருந்து படைக்க, ஆக்‌ஷன் காட்சிகள் பதற வைக்கும் விதத்தில் இருக்கிறது.

 

அனிருத்தின் இசையில் ஒரே ஒரு பாடல் என்றாலும் மொத்த திரையரங்கையும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் அனிருத்தின் அக்மார்க் இல்லாமல் போனது ஏமாற்றம்.

 

’கைதி’ படத்தில் கைகொடுத்த போதைப்பொருள் கடத்தல் சார்ந்த கதையை வைத்துக்கொண்டு தொடர் வெற்றி கொடுக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த முறையும் அதே கருவை வைத்துக்கொண்டு விஜய்க்கு ஏற்ற படத்தை கொடுத்திருக்கிறார்.

 

இந்த முறை போதைப்பொருளுடன், மூட நம்பிக்கைக்கு எதிராகவும் பேசியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் ரசிகர்களை மட்டும் இன்றி சினிமா ரசிகர்களையும் கொண்டாடும் வகையில், அனைத்து விசயங்களையும் சேர்த்து அதிரடியான ஆக்‌ஷன் படமாக இயக்கியிருக்கிறார்.

 

ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாமல், சில குறைகளுடன் இருந்தாலும், விஜய் ரசிகர்களை கொண்டாட வைக்கும் விதத்தில் இருக்கிறது இந்த ‘லியோ’.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery