Latest News :

‘ரூல் நம்பர் 4’ திரைப்பட விமர்சனம்

6d048a2fdf072c19003ae4601c7a5a04.jpg

Casting : AK Pradeep Krishna, SriGopika, Mohan Vaidya, Birla Bose

Directed By : Basar

Music By : Deeraj Sukumaran

Produced By : Simy Z

 

ஏடிஎம் மையங்களுக்கு பணம் விநியோகம் செய்யும் வேன் ஓட்டுநரான நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா, நாயகி ஸ்ரீகோபிகாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், நாயகனின் காதலை நாயகி ஏற்க மறுக்க, அவரை துரத்தி துரத்தி காதலிப்பவர், ஒரு கட்டத்தில் தனது காதலியின் தந்தையிடமே தனது காதல் பற்றி சொல்லி சம்மதம் வாங்க முடிவு செய்கிறார். இதற்காக வனப்பகுதியில் இருக்கும் ஏடிஎம் மையத்திற்கு பணம் நிறப்ப செல்லும் போது, நாயகியையும் அந்த வேனில் ஏற்றிக்கொண்டு பயணிக்கிறார். இடையில் கர்ப்பிணி பெண் ஒருவர் வேனில் ஏறிக்கொள்ள, ஏடிஎம் மையத்தை நெருங்கும் போது, பணத்தை கொள்ளையடிக்க கும்பல் ஒன்று திட்டம் போட்டு, வேனில் உள்ளவர்களை கொடூரமாக தாக்குகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பணத்தை அபகரிக்க வனத்துறை அதிகாரி திட்டமிட்ட, இறுதியில் பணம் காப்பாற்றப்பட்டதா?, நாயகியின் காதல் திட்டம் நிறைவேறியதா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் ஏ.கே.பிரதீப் கிருஷ்ணா இளமையாகவும், துடிப்புடனும் நடித்திருக்கிறார். நாயகியை துரத்தி துரத்தி காதலிப்பவர், தனது காதலி விதவிதமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார். முதல் பாதியில் காதல் நாயகனாக கவனம் பெறும் பிரதீப் கிருஷ்ணா, இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல், நல்ல வேடங்களில் நடித்தால் பிரதீப் கிருஷ்ணாவுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு.

 

நாயகி ஸ்ரீகோபிகா அழகாகவும், அம்சமாகவும் இருக்கிறார். காதல் காட்சிகளில் அவருடைய அழகு ரசிகர்களை ஆட்கொள்வதோடு, நடிப்பிலும் எந்த குறையும் இல்லாமல் பயணித்திருக்கிறார். ஆரம்பத்தில் வழக்கமான நாயகியாக வலம் வந்தாலும், படத்தின் க்ளைமாக்ஸ் நெருங்கும் போது எதிர்பார்க்காத திருப்பத்தில் அவர் எடுக்கும் அவதாரம்  படத்திற்கு பலம் சேர்க்கிறது.

 

நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் மோகன் வைத்யா, மகளின் காதல் விவகாரம் தெரிந்து கொதிப்பது, உயிருக்கு ஆபத்தான சூழலில் மனம் கலங்கித் தவிப்பது என நேர்த்தியான நடிப்பைத் தந்திருக்கிறார்.

 

வனத்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் பிர்பா போஸ் தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்ப்பதோடு, வில்லத்தனத்தை மிக நேர்த்தியாக வெளிக்காட்டி கவனம் ஈர்க்கிறார்.

 

ஜீவா ரவி, வேனில் பயணிக்கும் கர்ப்பிணி பெண், கொள்ளையர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் தங்களது பணியை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

கேரளாவின் வனப்பகுதியின் பசுமையை கொள்ளை அழகோடு காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் டேவிட் ஜான், காதல் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் தீரஜ் சுகுமாரனின் இசையில் பாடல்கல் அனைத்தும் கேட்கும் ரகம். “என்ன கொன்னுபுட்டியே...வச்சு செஞ்சுபுட்டியே...” மற்றும் “சஸ்பென்ஸ் ஓப்பன் ஆனதே..” பாடல்கள் முனுமுனுக்க வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்துள்ளது.

 

‘என்ன கொன்னுபுட்டியே வெச்சு செஞ்சுபுட்டியே', ‘சஸ்பென்ஸு ஓப்பன் ஆனதே' பாடல்களில் தென்றலின் குளுமையைத் தந்திருக்கிற தீரஜ் சுகுமாறன், பின்னணி இசையில் காட்சிகளின் எதிர்பார்ப்பை முடிந்தவரை பூர்த்தி செய்திருக்கிறார். 

 

கதை எழுதி இயக்கியிருக்கும் பாஸர், காதல் கதையை க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரோடு சேர்த்து சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். காதல் காட்சிகள் ரசிக்க வைத்தாலும், வேனில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க நடக்கும் முயற்சிகள் படத்தை தொய்வடைய செய்கிறது.

 

வேன் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டு, உடன் வந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னரும், நாயகன் எதையும் செய்யாமல் வேனில் அமர்ந்தபடியே திருதிருவென விழித்துக் கொண்டிருப்பதை, கையில் துப்பாக்கி இருந்தும் அதை பயன்படுத்தாமல் பயந்து சாகிற செக்யூரிட்டியின் நிலைப்பாட்டை இயல்பாக காட்சிப்படுத்திய விதம் பாராட்டும்படி உள்ளது.

 

படத்தின் உருவாக்கத்தில் சில குறைகள் இருந்தாலும், க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் அழகான காதல் கதையோடு, சில எதிர்பார்க்காத திருப்பங்கள் படத்தை ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘ரூல் நம்பர் 4’ எதிர்ப்பார்ப்பில்லாமல் பார்த்தால் நிச்சயம் ஏமாற்றம் அளிக்காது.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery