Latest News :

’சைத்ரா’ திரைப்பட விமர்சனம்

6d21cbdb4ee83b8c46d13e266aa6d8b0.jpg

Casting : Yashika Anand, Avitej, Sakthi Mahendra, Pooja, Kannan, Ramanan, Luis, Mosakkutty

Directed By : M.Jenith Kumar

Music By : Prabhakaran Meyyappan

Produced By : Mars Productions - K.Manoharan

 

விபத்தில் சிக்கி இறந்த தனது தோழி மற்றும் அவரது கணவர் மரணத்தை நேரில் பார்க்கும் நாயகி யாஷிகா ஆனந்த், அன்று முதல் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதோடு, விபத்தில் இறந்த அந்த இருவரும் தன்னை தேடி வருவதாகவும், அவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்றும் புலம்பிக் கொண்டிருக்கிறார். இதனால் தனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைக்கும் அவரது கணவர் அவிதேஜ், மனநல மருத்துவர் ஆலோசனைப்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். இதற்கிடையே, தனது நண்பருக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் அவிதேஜ், தனது மனைவிக்கு போன் செய்யும் போது அந்த போனை அவர் எடுக்காமல், அவரை தேடி வரும் இறந்துபோன அவரது தோழி எடுக்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் யாஷிகா ஆனந்தின் கணவர் தனது மனைவி சொல்வது போல் இறந்தவர்கள் அவரை தேடி வருவது உண்மை தான் என்று நம்புவதோடு, அந்த பேய்களை விரட்ட தனது நண்பரிடம் சொல்லி சாமியார் ஒருவரை அழைத்து வர சொல்கிறார்.

 

அதன்படி, அந்த வீட்டுக்கு சாமியாரை அழைத்துச் செல்லும் அந்த நண்பர் திடீரென்று தனது காதலி திவ்யாவுக்கு போன் செய்து தான் ஆபத்தில் இருப்பதாக சொல்ல, அவரை தேடி செல்லும் திவ்யா, யாஷிகா ஆனந்தை தேடி வரும் இறந்த தம்பதி என்று சொல்லப்படுகிறவர்களை சந்திப்பதோடு, அவர்களிடம் பேசவும் செய்கிறார். இதற்கிடையே வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது அங்கே சாமியார், யாஷிகா ஆனந்த் அவரது கணவர் என்று அங்கு யாருமே இல்லாத நிலையில், அவரது காதலன் மட்டும் தலையில் அடிபட்ட நிலையில் இருப்பதோடு, யாஷிகா ஆனந்த் சொல்வது போலவே, “அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள், நான் சாக வேண்டும்” என்று புலம்புகிறவர், திடீரென்று மயக்க நிலைக்கு சென்றுவிடுகிறார்.

 

அந்த வீட்டில் என்ன நடந்தது? என்ற உண்மையை கண்டறியும் முயற்சியில் ஈடுபடும் திவ்யா மூலம், அங்கிருந்தவர்கள் திடீரென்று மாயமானது ஏன்?, இறந்தவர்கள் என்று சொல்லக்கூடிய கணவன் - மனைவி ஏன் அந்த வீட்டுக்கு திரும்ப திரும்ப வருகிறார்கள்?, அவர்கள் அனைவருடைய கண்களுக்கும் சாதாரண மனிதர்களாக தெரிவது எப்படி?, உண்மையிலேயே அவர்கள் தான் இறந்தார்களா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் ‘சைத்ரா’ படத்தின் கதை.

 

பேய் படங்கள் என்றாலே ஒரு வீடு, அதில் இருக்கும் பேய்க்கு ஒரு பிளாஷ்பேக், அங்கே வருபவர்கள் அந்த பேயின் பிளாஷ்பேக்கை கேட்டு, அதற்கு உதவி செய்வார்கள் அல்லது அவர்களையே அந்த பேய் பழிவாங்கும், பிறகு ஏன் அவர்களை பழிவாங்கியது என்ற காரணத்தை, இந்து சாமியார், கிறிஸ்தவ பாதிரியர், இஸ்லாம் இமாம் ஆகிய மூவரில் யாராவது ஒருவர் மூலம் சொல்வார்கள். பெரிய பட்ஜெட் படம் என்றால் இந்த மூவர் மூலமாக கூட சொல்வார்கள்.

 

ஆனால், இந்த படத்தின் கதைப்படி அதே பெரிய வீடு அதில் பேய்க்கு பயந்து நடக்கும் நாயகி என்ற ரீதியில் கதை தொடங்கினாலும், அந்த பேய் யார்? என்ற கேள்வியும், அதனை மையப்படுத்திய திருப்பங்களும் இடைவேளை வரை நம்மை எதிபார்ப்புடன் படம் பார்க்க வைக்கிறது. பெரிய அளவில் மிரட்டும் காட்சிகள் இல்லை என்றாலும், யாஷிகா ஆனந்தை சுற்றி என்ன நடக்கிறது?, அவர் சொல்வதில் எது உண்மை? என்ற கேள்விகள் நம்மையும் கதையோடு பயணிக்க வைப்பதோடு, சீட் நுணியில் உட்கார்ந்து படத்தை பார்க்க வைக்கிறது.

 

இடைவேளை முடிந்து இரண்டாம் பாதி தொடங்கும் போது ஒருவழியாக இவர்கள் தான் பேய் என்ற முடிவுக்கு நாம் வந்தாலும், அங்கேயும் ஒரு திருப்பத்தை வைத்து மீண்டும் படத்தை எதிர்பார்ப்புடன் பயணிக்க வைக்கும் இயக்குநர் எம்.ஜெனித்குமார்,  ஒரு வீடு, 10 கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு முழு படத்தையும் விறுவிறுப்பாக நகர்த்தி சென்று நம் முழு கவனத்தையும் தன் வசமாக்கி விடுகிறார்.

 

அடடா... பரவாயில்லையே புதுசா ஏதோ சொல்ல வருகிறார்களே, என்று நாம் நினைக்கும்படி பேய் குறித்த ஒரு விசயத்தையும் சொல்லி, லாஜிக்கோடு திரைக்கதையை நகர்த்தி செல்லும் இயக்குநர் ஜெனித்குமார், படத்தின் க்ளைமாக்ஸையும், அதற்கு முந்தைய காட்சிகளையும் பொறுப்புடன் கையாண்டிருந்தால் நிச்சயம் இந்த படம் வித்தியாசமான திகில் படமாக கொண்டாடப்பட்டு இருக்கும். ஆனால், அவர் சொல்லும் பேய் கதைக்காக, க்ளைமாக்ஸில் அனைத்து கதாபாத்திரங்களையும் கொன்று, ரசிகர்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தி விடுகிறார்.

 

இருந்தாலும், ஒரு லொக்கேஷனையும், சில கதாபாத்திரங்களையும் வைத்துக்கொண்டு முழு படத்தையும் யூகிக்க முடியாதபடியும், விறுவிறுப்பாக நகர்த்தி சென்றதற்காக இயக்குநர் எம்.ஜெனித்குமாரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

 

நாயகியாக நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் ஒரு கதாபாத்திரமாக கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். அவரது கணவராக நடித்திருக்கும் அவிதேஜ், அவிதேஜின் நண்பரின் காதலியாக நடித்திருக்கும் திவ்யா, இறந்துபோன தோழியாக நடித்திருக்கும் பூஜா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கண்ணன், ரமணன், லூயிஸ், மொசக்குட்டி என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

சதீஷ் குமாரின் ஒளிப்பதிவும், பிரபாகரன் மெய்யப்பனின் இசையும் திகில் படங்களுக்கு ஏற்றபடி இல்லை என்றாலும், கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

 

சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு லான்லீனர் முறையில் ஒரு திகில் கதையை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநருக்கு படத்தொகுப்பாளர் எலிஷாவின் பணி மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. இயக்குநர் சொல்ல வருவது என்ன? என்பதை ரசிகர்களுக்கு சரியான முறையில் புரிய வைத்திருக்கும் படத்தொகுப்பாளர் எலிஷா அதிகம் மெனக்கெட்டிருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

 

மேக்கிங் மற்றும் கதாபாத்திரங்களிடம் வேலை வாங்கிய விதம், காட்சிகளின் வடிவமைப்பு மற்றும் அதன் பின்னணி போன்றவற்றில் பட்ஜெட் காரணமாக சில குறைகள் இருந்தாலும், ஒரு படமாக பார்க்கும் போது ஒரு எளிமையான கதையை சுவாரஸ்யமான திகில் படமாக கொடுத்ததில் இந்த குழுவினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

 

மொத்தத்தில், இந்த ‘சைத்ரா’ சாதாரண சாத்தான் அல்ல.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery