Casting : Jey, Anjali, Janani Iyer
Directed By : Sinish
Music By : Yuvan Shankar Raja
Produced By : Dhilip Subbarayan, Arun Balaji, Nandakumar
உதவி இயக்குநரான ஜெய், பேய் படம் ஒன்றை எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போது ஊட்டியில் உள்ள பேய் வீடு ஒன்றை பற்றி அறியும் அவர், அந்த வீட்டை மையப்படுத்தி கதை எழுதுவதற்காக ஊட்டிக்கு சென்று, அந்த வீடு குறித்த விபரங்களை சேககரிக்க முடிவு செய்கிறார். அவருடன் அவரது மனைவி அஞ்சலி, அவரது நண்பர்கள் மற்றும் அவரது அண்ணனின் மகனும் செல்கின்றனர்.
பேய் வீட்டுக்கு அருகே இருக்கும் வீட்டில் ஜெய், அஞ்சலி உள்ளிட்டவர்கள் தங்க, அந்த வீட்டில் சிறுமி ஒருவர் பேயாக சுற்றிக் கொண்டிருக்க, அந்த பேய் ஜெயின் அண்ணன் மகனை பிடித்துக்கொள்வதோடு, ஜெய்யை சார்லி என்றும், அவர் தனது தந்தை என்றும் கூறுகிறது. அதே சமயம், செண்பகவள்ளி என்ற ஆத்மா அஞ்சலியை பிடித்துக்கொண்டு சார்லியை பார்த்தால் தான் அஞ்சலியை விடுவேன், என்று கூறுகிறது. சார்லி மற்றும் செண்பகவள்ளி ஆகியோர் யார்?, அவர்களுக்கும் ஜெய்க்கும் என்ன சம்மந்தம், அவர்கள் எப்படி இறந்தார்கள், என்பதன் பிளாஷ்பேக் தான் ‘பலூன்’ படத்தின் கதை.
நிஜ காதலர்களான ஜெய் - அஞ்சலி மீண்டும் ஜோடி சேர்ந்திருப்பதால் திகில் கலந்த ரொமான்ஸ் இருக்கும் என்ற ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை இயக்குநர் வேறு மாதிரியாக பூர்த்தி செய்திருக்கிறார்.
காதல் படங்களில் நடிக்க வேண்டிய வயதில், பேய் படங்களில் நடிக்க தொடங்கிய ஜெயின் நிலையை நினைத்தால் பாவமாக தான் இருக்கிறது. இருந்தாலும், தனக்கு கொடுத்த வேலையை ரொம்ப சிறப்பாக செய்திருக்கிறார். அஞ்சலியும் ஜெயின் காதல் மனைவியாக அளவான நடிப்போடு, அதிகமான அழகோடும் வலம் வந்து கவர்கிறார்.
ஜெயின் நண்பராக நடித்துள்ள யோகி பாபு, சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை அவமரியாதையாக பேசுவது, முகம் சுழிக்கும் வசனங்களை பேசுவது என்று கடுப்பேற்றுகிறார். செண்பகவள்ளி என்ற வேடத்தில் நடித்திருக்கும் ஜனனி ஐயர் பாவாடை சட்டையில் ரொம்ப ஹோம்லியாக இருக்கிறார்.
எந்த எந்த ஆங்கிலப் படங்களைப் பார்த்து இப்படத்தின் காட்சிகள் உருவப்பட்டிருக்கிறது, என்பதை டைடில் கார்டிலேயே ’இன்ஸ்பயர்’ என்று இயக்குநர் சினிஷ் கவுரமாக தெரிவித்திருந்தாலும், ஜாதி மற்றும் சினிமா படங்களுக்கு அரசியல்வாதிகளால் ஏற்படும் பிரச்சினையை வைத்து திரைக்கதையில் சற்று சுவாரஸ்யத்தை சேர்த்திருக்கிறார்.
ஆர்.சரவணின் ஒளிப்பதிவும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் மேக்கிங் ரீதியாக படத்திற்கு பலம் சேர்த்திருந்தாலும், திகில் படத்திற்காக பிளேவரை மிக குறைவாகவே கொடுத்திருக்கிறது.
சினிமாவில் இயக்குநராக ஜெயிப்பதற்காக ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதே சினிமா துறை அரசியல்வாதிகளால் சந்திக்கும் பிரச்சினைகள் என்று பேய் படமாக மட்டும் இன்றி ஒரு கமர்ஷியல் படமாகவும் இப்படத்தின் திரைகக்தையை சினிஷ் அமைத்திருக்கிறார்.
பலூன் வரும்போதெல்லாம் பேய் வருவது போல காட்டியிருக்கும் இயக்குநர், பேய் வரும் போதெல்லாம் ரசிகர்களை திகிலடையச் செய்ய தவறியிருக்கிறார். வெறும் திகில் படமாக எடுக்காலாமா அல்லது காமெடி கலந்த திகில் படமாக எடுக்கலாமா, என்ற குழப்பத்திலேயே இயக்குநர் காட்சிகளை வடிவமைத்திருப்பதால், பல இடங்களில் இரண்டுமே எடுபடமால் போயிருக்கிறது.
இருந்தாலும், பேயின் பிளாஷ்பேக்கில் ஒரு நல்ல மெசஜை சொல்லியிருப்பதோடு, அதை சினிமாத் துறையோடு சம்மந்தப்படுத்தி இயக்குநர் சினிஷ் சொல்லியிருப்பது ரசிக்கும்படி உள்ளது.
மொத்தத்தில், பயத்தை கொடுக்காத திகில் படமாக உள்ளது இந்த ‘பலூன்’.
ஜெ.சுகுமார்