Casting : Rio Raj, Malavika Manoj, Bhavya Trikha, Charlie, Anbuthasan, Aegan, Jayakumar, VJ Rakesh, Elango Kumaran, MJ Shriram
Directed By : Hariharan Ram.S
Music By : Sidhu Kumar
Produced By : Dr.S.Arulanandhu, Mathewo Arulanandhu
ஒரே கல்லூயிரில் படிக்கும் நாயகன் ரியோ ராஜும், நாயகி மாளவிகா மானோஜும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இவர்களின் காதலுக்கு மாளவிகா மனோஜின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் காதலர்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. காதல் தோல்வியால் தன்னை தானே அழித்துக்கொள்ள நினைக்கும் ரியோ ராஜ், தனது பெற்றோர் மற்றும் நண்பர்களின் அறிவுரையால் புதிய வாழ்க்கையை தொடங்குகிறார். அதன்படி, மற்றொரு நாயகியான பவ்யா ட்ரிகாவை அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
ஆனால், பவ்யாவுக்கு விருப்பம் இல்லாமல் நடந்த திருமணம் என்பதால், அவர் ரியோவை கணவராக ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, அவரை பார்த்தாலே கோபமடைகிறார். பவ்யாவின் பிரச்சனை என்ன? என்பதை அறிந்துக்கொள்ளும் ரியோ ராஜ், அவரது பிரச்சனையை தீர்த்து வைக்கும் முயற்சியில் இறங்க, அதன் பிறகு என்ன நடந்தது, காதல் போல் கல்யாணமும் ரியோவுக்கு தோல்வியில் முடிந்ததா?, பவ்யாவின் பிரச்சனை என்ன? என்பது தான் மீதிக்கதை.
கல்லூரி மாணவராக உருகி உருகி காதலிக்கும் ரியோ ராஜ், காதல் தோல்வியால் தன் சோகத்தை வெளிப்படுத்த பெரிய தாடி, முடி என்று கதாபாத்திரத்திற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். இரண்டு கெட்டப்புகளிலும் இயல்பாக நடித்திருப்பவர், காதல் மற்றும் சோகம் இரண்டிலுமே அடக்கி வாசித்திருப்பது திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை மாளவிகா மனோஜ், எளிமையாக இருந்தாலும் அழகில் பிரமாண்டமாக இருக்கிறார். ரியோவுடன் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பவர், காதல் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பு மூலம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பதோடு, தனது கோபத்தை கண்களினால் சிறப்பாக வெளிப்படுத்தி அசத்துகிறார். அதிலும், தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை தெரியப்படுத்திய பிறகும் ரியோ அவருக்கு தாலி கட்டும் போது, அவர் பார்க்கும் பார்வை மிரட்டல்.
சார்லி, ரியோவின் நண்பர்களாக நடித்திருக்கும் அன்புதாசன், ஏகன், விஜே ராகேஷ், ஜெயகுமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, திரைக்கதையின் ஓட்டத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராகுல் கே.ஜி.விக்னேஷ் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, கதையில் இருக்கும் மென்மையை காட்சிகளிலும் கொண்டு வந்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சித்து குமாரின் இசை படத்தின் மற்றொரு நாயகனாக பயணித்திருக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையுமே அளவாக கையாண்டிருப்பவர், காதலர்களுடன் நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார்.
கல்லூரியில் துவங்கும் கதை, காதல், காதலர்களின் ஊடல் மற்றும் கூடல் காட்சிகள் மூலம் ரசிக்க வைத்தாலும், ரசிகர்களின் பழைய நினைவுகளை தட்டி எழுப்புவதில் சற்று தடுமாறியிருக்கிறது. படத்தில் கல்லூரி காட்சிகள் இருந்தாலும் அதன் கொண்டாட்டம் குறைவாக இருக்கிறது. அதே போல் காதல் காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள் அதர பழசாக இருப்பதோடு, காதல் தோல்வின் வலியை அழுத்தமாக சொல்லாமல், அடுத்த நாயகிக்கு நகர்ந்து செல்வதும் படத்தை சற்று தொய்வடைய செய்கிறது.
இருந்தாலும், காதல் தோல்விக்காக, வாழ்வை தொலைத்துக் கொள்வதோடு நம்மை சார்ந்தவர்களுக்கு வலியை கொடுக்காமல், அதை கடந்து சென்றால் நமக்கான ஒரு காதல் நிச்சயம் காத்திருக்கும் என்ற மெசஜை மிக அழகாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஹரிஹரன் ராம்.எஸ், இரண்டு காதல் கதைகளை நாகரீகமான முறையில் சொல்லி அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைக்க கூடிய படமாக கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘ஜோ’ படு ஜோராக இல்லை என்றாலும் போரடிக்கவில்லை.
ரேட்டிங் 2.8/5