Casting : Tharshan, Mahima Nambiar, R. S Sivaji, Singam Puli, Arul doss, Inba Ravikumar, Vasantha
Directed By : M.Saravanan
Music By : C.Sathya
Produced By : Chakra Ithayamani, Raj
போதிய போக்குவரத்து வசதி இல்லாத கொல்லிமலையில் பல சிறிய கிராமங்கள் இருக்கிறது. அந்த கிராமங்களுக்கு ஒரு அரசு மருத்துவமனையும் இருக்கிறது. ஆனால், அந்த மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவர்கள் விரும்புவதில்லை. இதனால், அந்த மருத்துவமனைக்கு அரசு நியமிக்கும் மருத்துவர்கள் ஒரு வாரத்தில் பணி மாறுதல் பெற்றுக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். மருத்துவமனை இருந்தும் சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் அந்த கிராமத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கிறது. அப்படி ஒரு சூழலில் தான் அந்த ஊரைச் சேர்ந்த நாயகன் தர்ஷனின் தங்கையும் இறந்து போகிறார்.
இதற்கிடையே, ஊர் மக்களின் போராட்டத்தின் பலனாக, அந்த ஊர் மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவரான மகிமா நம்பியார் வருகிறார். அவரும் வழக்கம் போல் ஒருவாரம் பணியாற்றிய பிறகு பணி மாறுதல் பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றுவிடலாம் என்ற மனநிலையோடு தான் வருகிறார். ஆனால், மகிமாவை எப்படியாவது தங்களது ஊரில் நிரந்தரமாக தங்க வைக்க வேண்டும் என்று முயற்சிக்கும் ஊர் மக்கள் அதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட, இறுதியில் அவர்கள் நினைத்தது நடந்ததா?, இல்லையா? என்பதே ‘நாடு’ படத்தின் கதை.
பல்வேறு இன்னல்களுக்கு நடுவே வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களின் முக்கிய பிரச்சனை மருத்துவம். சரியான போக்குவரத்து இல்லாத அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை என்பது பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகே கிடைக்க கூடியது என்பதால், சிறிய உடல்நிலை பாதிப்பால் கூட உயிர் சேதத்தை சந்திக்கும் அவர்களுடைய வலிகளை சொல்வதோடு, அதற்கு காரணமான சட்டங்களுக்கு சவுக்கடியையும் கொடுத்திருக்கிறது இந்த ‘நாடு’.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பிக் பாஸ்’ புகழ் தர்ஷனை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பொருத்தி பார்ப்பதே சற்று பிரமிப்பான விசயம் தான். அதிலும், அந்த கதாபாத்திரத்தில் அவர் மிக சரியாக நடித்திருப்பது என்பது பிரமிப்பே மிரண்டு போகும் சம்பவம். அப்படி ஒரு சிறப்பான சம்பவத்தை தர்ஷன் நிகழ்த்தி காட்டியிருக்கிறார். பல இடங்களில் அமைதியாக நடித்திப்பவர், அழுகின்ற காட்சிகளில் பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்துவிடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மகிமா நம்பியாருக்கு கதையோடு பயணிக்கும் வேடம் என்றாலும், பெரிய அளவில் பர்பாமன்ஸ் பண்ணும் வேலை இல்லை. இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை மிக நேர்த்தியாக கையாண்டு பாராட்டு பெறுகிறார்.
தர்ஷனின் தந்தையாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சிவாஜி, சிறந்த குணச்சித்திர நடிகருக்கான அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருக்கிறது, என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.
ஊர் தலைவராக நடித்திருக்கும் சிங்கம் புலி, தனது வழக்கமான நகைச்சுவை மூலம் சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், திரைக்கதை போட்ட தடுப்பால் பல இடங்களில் அடக்கி வாசித்து கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக வலம் வந்திருக்கிறார்.
காஃபி டே பணியாளராக நடித்திருக்கும் இன்ப ரவிகுமார் தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை மூலம் கவனம் ஈர்க்கிறார். மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் அருள்தாஸ் மற்றும் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் என படத்தில் இடம்பெறும் அனைத்து நடிகர்களும் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல் கொல்லிமலை அழகையும், அம்மக்களின் வலி நிறைந்த வாழ்க்கையையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக நடிகர்களை அந்த மண்ணின் மக்களாக காட்டிய விதம் படத்திற்கு பலம்.
சி.சத்யா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். மலைவாழ் மக்களின் சோகம் மற்றும் கொண்டாட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் கதையோட்டத்திற்கு ஏற்ப பயணித்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் பி.கே கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், அவர்களுடைய வலி நிறைந்த வாழ்க்கையையும் ரசிகர்களிடத்தில் கடத்தும் வகையில் காட்சிகளை தொகுத்திருப்பதோடு, திரைக்கதையை தொய்வில்லாமல் வேகமாக நகர்த்தி செல்கிறார்.
சாலை விபத்தை மையமாக வைத்துக்கொண்டு ‘எங்கேயும் எப்போதும்’ என்ற ஒரு அழகான காதல் கதையை கொடுத்தவர், ’மருத்துவர் இல்லாத மருத்துவமனை’ என்பதை மையக்கருவாக வைத்துக்கொண்டு மலைவாழ் மக்களின் துயரங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை திரைக்கதையாக்கி, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்.
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மருத்துவர் ஆனால், அவர் தன்னைப் போல் இருப்பவர்களுக்கு சேவை செய்ய விரும்புவார். ஆனால், பணத்தை செலவு செய்து மருத்துவம் படிப்பவர்கள் நிச்சயம் சேவை செய்யும் மனதோடு இருக்க மாட்டார்கள், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் எம்.சரவணன், நீட் தேர்வினால் ஏழைகளின் மருத்துவ படிப்பு கனவு கனவாகவே இருக்கிறது, என்ற உண்மையையும் உரக்க சொல்லியிருக்கிறார்.
சமூக பிரச்சனையை பேசியிருந்தாலும், யாரையும் விமர்சிக்காமல், குறிப்பிட்ட ஒரு தரப்பினரை தாக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்லியிருப்பதோடு, கேட்பவர்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்களை யோசிக்க வைக்கும் விதத்தில், ஒரு இனத்தின் வாழ்வியலையும், அவர்களின் துயரங்களையும் மிக நேர்த்தியாக காட்சிகளாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் எம்.சரவணன், அதை வெறும் சோக கதையாக சொல்லாமல் ஜனரஞ்சகமான முறையில் சொல்லி ரசிக்க வைத்து சிரிக்க வைத்திருப்பதோடு, சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், எளிய மக்களின் எதிர்பார்ப்பை எளிய முறையில் சொல்லியிருக்கும் இந்த ‘நாடு’ படம் சினிமா ரசிகர்கள் மட்டும் அல்ல ஒவ்வொரு மருத்துவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3.5/5