Latest News :

’கட்டில்’ திரைப்பட விமர்சனம்

dc03469d21781fed1aad75cbd785251c.jpg

Casting : E.V.Ganesh Babu, Srushti Dange, Geetha Kailasam, Indra Soundar Rajan, Kannika, Mimmo, Kadhal Kandhas, Metti Oli Shanthi, Master Nidhish

Directed By : E.V.Ganesh Babu

Music By : Srikanth Deva

Produced By : E.V.Ganesh Babu

 

நாயகன் கணேஷ் பாபு, தனது மனைவி சிருஷ்டி டாங்கே மற்றும் அம்மா கீதா கைலாசத்துடன் தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். வெளிநாட்டில் குடியேறிவிட்ட அவரது சகோதரனும், சகோதரியும் வீட்டை விற்க முடிவு செய்கிறார்கள். அதில் உடன்பாடில்லை என்றாலும் வேறு வழியின்றி கணேஷ் பாபு சம்மதிக்கிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருக்கும் பழங்காலத்து கட்டிலுடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றிவிட்ட கணேஷ் பாபு, அதை விட்டுச் செல்ல மனமில்லாமல் எடுத்துச் செல்ல முடிவு செய்கிறார். ஆனால், அது அவரது வாழ்க்கையில் சில சிக்கல்களை உண்டு பண்ணுவதோடு, கட்டிலை பிரிய வேண்டிய சூழலையும் உருவாக்க, அந்த கட்டில் உடனான அவரது உணர்வுப்பூர்வமான பயணம் தொடர்ந்ததா?, இல்லையா? என்பதே படம்.

 

நாயகனாக நடித்திருக்கும் கணேஷ் பாபு, கஷ்ட்டப்பட்டு நடிக்காமல் மிகவும் இஷ்ட்டப்பட்டு நடித்திருப்பது படம் முழுவதுமே தெரிகிறது. மூன்று தோற்றங்களில் மகிழ்ச்சி மற்றும் சோகம் என இரண்டு விதமான உணர்வுகளை மிக அழகாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். 

 

கனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சிருஷ்டி டாங்கே, ஒவ்வொரு காட்சியையும் மிக கவனமாக கையாண்டு படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார். அவருடைய இந்த கதாபாத்திரம் படத்திற்கு மட்டும் அல்ல அவருடைய திரை வாழ்க்கைக்கும் நிச்சயம் பலம் சேர்க்கும்.

 

கணேஷ் பாபுவின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் என்ற கோணத்தை தாண்டி, இளைய தலைமுறையினரை சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

 

செம்மலர் அன்னம், சிறுவன் நித்தீஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவருடைய கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக இருப்பதோடு, கதையின் கனத்தை ரசிகர்களுக்குள் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.

 

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக மட்டும் இன்றி வரிகள் புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணத்திருக்கிறது.

 

பி.லெனின் படத்தொகுப்பு படத்தை இலகுவாக்க முயற்சித்திருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் இ.வி.கணேஷ் பாபு எழுதி இயக்கியிருக்கிறார். உயிரற்ற ஒரு பொருளை மையமாக கொண்டு எழுதப்பட்ட கதையாக இருந்தாலும், அதற்கான திரைக்கதையை உயிரோட்டமாக சொல்லியிருக்கிறார். இரண்டாம் பாதியில் சிருஷ்டி டாங்கேவின் காட்சிகள் கண்கலங்க வைக்கிறது.

 

உணர்வுகளை மையப்படுத்திய கதை என்பதால் திரைக்கதை சற்று மெதுவாக நகரும் உணர்வு ஏற்படுகிறது.  ஆனால், அதை குறையாக பார்க்காமல் உணர்வுப்பூர்வமாக பார்க்கும் போது, கதையோடும், கதாபாத்திரங்களோடும் ஒன்றி பயணிக்க முடிகிறது.

 

மொத்தத்தில், ‘கட்டில்’ உயிரோட்டம்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery