Latest News :

’கூச முனிசாமி வீரப்பன்’ இணையத் தொடர் விமர்சனம்

6f9af464358f946d7b266490e7f0e936.jpg

Casting : Veerappan

Directed By : Sharath Jothi

Music By : Satish Raghunathan

Produced By : Dheeran Productions - Prabbhavathi RV

 

தமிழ்நாடு மற்றும் கர்நாடக காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த குற்றவாளி சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை சொல்லும் ஆவணப்படம் வடிவத்தில் உருவாக்கப்பட்ட இணையத் தொடர் ‘கூச முனிசாமி வீரப்பன்’. 

 

இதுவரை வெளியான வீரப்பன் வாழ்க்கை பற்றிய சில திரைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியான செய்திகள், பேட்டிகள் மற்றும் காவல்துறை தெரிவித்த தகவல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டவை. ஆனால், இந்த ஆவணப்பட இணையத் தொடர் 1996 ஆம் ஆண்டு வீரப்பன் நேரடியாக தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதோடு, அந்த நேர்காணல் வீடியோவின்  சில பகுதிகளையும், சில சம்பவங்களை நடிகர்கள் மூலம் சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, வீரப்பனை சந்தித்து நேர்காணல் செய்த பத்திரிகையாளர்கள், அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், காவல்துறையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

 

6 பகுதிகளை கொண்ட இந்த இணையத் தொடர், ஆவணப்பட பாணியில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அந்த உணர்வே ஏற்படாத வகையில், ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் தொடரை பார்க்கும் அனுபவத்தை கொடுத்திருப்பது இத்தொடரின் தனி சிறப்பு. அதிலும், தான் செய்த கொலைகள் பற்றியும், அந்த கொலைகளை எதற்காக?, எப்படி? கொலை செய்தேன் என்பதையும் வீரப்பன் பேட்டியில் சொல்லும் பகுதிகள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதா பற்றியும், ரஜினிகாந்தின் அரசியல் பற்றியும் பேசியிருப்பது மற்றும் அவருடைய பேச்சு பாணி திரையரங்கையே அதிர வைக்கும் விதத்தில் இருக்கிறது. இந்த காட்சிகளை நடிகர்களை வைத்து படமாக்கி இருந்தால் கூட இத்தகைய வரவேற்பு கிடைத்திருக்காது. வீரப்பன் பேசிய அந்த வீடியோ தொகுப்பை அப்படியே இணைத்திருப்பது தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.

 

தொடரில் பேசும் பத்திரிகையாளர்கள், நக்கீரன் ஆசியர் கோபால், சீமான் போன்றவர்கள் வீரப்பனுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி அலெக்ஸாண்டர் எப்படி இருந்தாலும் வீரப்பன் ஒரு கொடூரமான குற்றவாளி என்ற கருத்தை பதிவு செய்கிறார். அதே சமயம், வீரப்பனால் இறந்த காவலரின் மகள், ”என்னதான் இருந்தாலும், யாரையும் கொலை செய்திருக்க கூடாது” என்று சொல்வதும், தன்னுடைய அப்பா செய்த தவறால் பச்சிளம் குழந்தையாக இருக்கும் போதே தனது தகப்பனை இழந்த அந்த பெண்ணிடம்  வீரப்பன் மகள் மன்னிப்பு கேட்கும் இடமும் கலங்க வைக்கிறது.

 

வீரப்பன் - காவல்துறை என இரண்டு தரப்பினருக்கும் மோதல் நடப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த இரண்டு தரப்பினராலும் எந்த தவறும் செய்யாத அப்பாவி மக்கள் பலர் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருப்பதையும் இத்தொடர் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக, வீரப்பனுக்கு உதவி செய்வதாக காவல்துறை அப்பாவி மக்களுக்கு இழத்த கொடுமைகளை கேட்கும் போதே மனம் பதறுகிறது என்றால், அந்த கொடுமைகளை அனுபவித்தவர்களின் வலி எப்படி இருக்கும், என்பதை விவரித்த முறை மற்றும் அதை காட்சிப்படுத்திய விதம் மிக நேர்த்தி.

 

வீரப்பன் கதாபாத்திரத்திலும், அவருடன் இருந்தவர்கள் வேடங்களிலும் சில நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் முகத்தை கூட சரியாக காட்டாமல் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் சரத் ஜோதி அதனுடன் வீரப்பனின் நேர்காணல் காட்சிகளை இணைத்து 6 தொடர்களையும் மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

 

ஜெயசந்திர ஹஷ்மி, சரத் ஜோதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் எழுத்தும், ஜெயசந்திர ஹஷ்மி, பிரபாவதி.ஆர்.வி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கமும் 6 பகுதிகளையும் ஒரே நேரத்தில் பார்த்தாலும், நேரம் போவதே தெரியாதவாறு அனைத்து பகுதிகளையும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறது.

 

சதிஷ் ரகுநாதனின் பின்னணி இசை, ராஜ்குமார் .பி.என்-னின் ஒளிப்பதிவு, ராம் பாண்டியனின் படத்தொகுப்பு தொடருக்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக படத்தொகுப்பாளர் ராம் பாண்டியன் காட்சிகளை தொகுத்த விதம் தொடருக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

 

வயிற்று பசிக்காக வேட்டையாட தொடங்கிய வீரப்பன், பிறகு பணத்திற்காக யானைகளை வேட்டையாட, அதன் பிறகு அவர் எப்படி கொலை குற்றவாளியாக உருவெடுக்கிறார் என்பதை மிக தெளிவாக சொல்லியிருக்கும் இந்த தொடரின் இறுதியில், வீரப்பன் நல்லவனா?, கெட்டவனா? என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. இந்த கேள்விக்கு அவரைச் சார்ந்தவர்கள், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காவல்துறையினர் சொல்லும் பதிகள் ஒரு பக்கம் இருந்தாலும், வீரப்பன் என்ற சாதாரண மனிதர் இத்தகைய குற்றவாளியாக உருவெடுக்க காரணம் அதிகாரிகள் தான் என்பதை சாட்டையடியாக சொல்லியிருக்கிறார்கள்.

 

மொத்தத்தில், உண்மைக்கு மிக நெருக்கத்தில் இருப்பதால் பார்வையாளர்களின் கண்களை கடந்து மனதில் இறங்கி விடுகிறது இந்த ‘கூச முனிசாமி வீரப்பன்’.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery