Casting : Vijayaprasad, Raja Desingu, Sona, Kanja Karuppu, Bonda Mani, Muththukkalai, Sams, Rajendranath
Directed By : Raja Desingu
Music By : Babu Aravind
Produced By : Sri Vetrivel Film Academy
ஐயப்பனின் தீவிர பக்தரான குருசாமி ராஜா தேசிங்கு, தனது சிஷ்யர்களுக்கு மாலை அணிவித்து சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் ஈடுபடுகிறார். பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பால், சோனா பல பெண்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க இருப்பதாக அறிவிக்கிறார். சோனாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குருசாமி, பெண்கள் சபரிமலைக்கு எதற்காக செல்லக்கூடாது? என்ற காரணத்தை விளக்கமாக சொல்லியும், சோனா தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். அதே சமயம், தனக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குருசாமியை சபரிமலைக்கு செல்ல விடாமல் தடுக்க பல சதிவேலைகளை செய்கிறார். அந்த சதிவேலைகளால் குருசாமிக்கு எத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டது, அதில் இருந்து அவர் மீண்டு, தனது 41 வது ஆண்டு சபரிமலை பயணத்தை வெற்றிகரமாக முடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
குருசாமி சிவநேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் ராஜா தேசிங்கு, கலை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். சிவநேசன் என்ற குருசாமி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஐயப்பன் பெருமைகளையும், 18 படிகளின் சக்திகளையும் விளக்கி சொல்லும் போது சாந்த சொரூபியாக நடித்திருப்பவர், ஐயப்பனுக்கு களங்கும் ஏற்படுத்தும் விதமான சம்பவங்களின் போது ஆக்ரோஷமாக நடித்து அசத்தியிருக்கிறார்.
ஆன்மீக படம் என்றாலும், முழுக்க முழுக்க ஆன்மீகத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தாமல், சமூகத்தில் நடந்த பிரச்சனையை கருவாக எடுத்துக்கொண்டு, அதற்கான விளக்கம் அளித்திருப்பவர் ராஜா தேசிங்கு, 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களை தவிர, மற்றவர்கள் சபரிமலைக்கு ஏன்? செல்லக்கூடாது என்ற காரணத்தை மிக அழுத்தமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பதிவு செய்திருக்கிறார்.
பக்தி படங்களில் மிக முக்கியமானது பாடல்கள் என்பதை உணர்ந்து பாடல்களை எழுதியிருக்கும் இயக்குநர் ராஜா தேசிங்கின் வரிகள் பாடல்களுக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் பாபு அரவிந்த் இசையில், வீரமணி தாசன், சீர்காழி சிவசிதம்பரம், வீரமணி ராஜு, முத்து சிற்பி, ராஜலட்சுமி செந்தில்கணேஷ் ஆகியோரது குரலில் அனைத்து பாடல்களும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. ஐயப்பன் பற்றிய பாடல்கள் மட்டும் இன்றி கருப்பசாமி பற்றிய பாடலும் சிறப்பு. பாடல்களுக்காகவே படத்தை திரும்ப திரும்ப பார்க்கலாம்.
ஒளிப்பதிவாளர் மகேஷ் மகாதேவனின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறது. பாடல்களை படமாக்கிய விதம், கிராபிக்ஸ் காட்சிகளை கையாண்ட விதம் என அனைத்திலும் ஒளிப்பதிவாளரின் பணி பளிச்சிடுகிறது.
கதாநாயகனாக நடித்திருக்கும் விஜயபிரசாத், ஐயப்பன் மாலையோடு படம் முழுவதும் பயணித்தாலும், கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி ரசிகர்களிடம் கவனம் பெறும் விதத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பூஜா நாகருக்கு வேலை குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.
மகா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருக்கும் சோனா, “மகா நினைத்ததை செய்வாள், வெச்சு செய்வாள்” என்ற பஞ்ச் வசனத்தை பேசிக்கொண்டு செய்யும் அலப்பறைகள் அமர்க்களம்.
கஞ்சா கருப்பு மற்றும் போண்டா மணி ஐயப்பன் பற்றி பேசும் குணச்சித்திர நடிகர்களாக ஜொலிப்பதோடு, அவ்வபோது காமெடி செய்து சிரிக்கவும் வைக்கிறார்கள். முத்துக்காளை, சாம்ஸ் கூட்டணி செய்யும் காமெடி ரகளைகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி.
ராஜேந்திரநாத், வடிவேல் கணேஷ், உடுமலை ரவி, மங்கி ரவி, போண்டா மணி, இந்திரன், ராஜாசாமி, விஷ்வகாந்த், சுமதி, சின்னாளப்பட்டி சுகி, லதா, சுவேதா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்து திரைக்கதையின் ஓட்டத்திற்கு பெரும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.
ஐயப்பனின் அதிசயங்கள் பற்றி மட்டுமே சொல்லாமல், பகுத்தறிவு மற்றும் பக்தி அறிவு உள்ளிட்ட அறிவுப்பூர்வமான விசயங்கள் பற்றியும் பேசியிருக்கும் இயக்குநர் ராஜா தேசிங்கு, ஆன்மீக படங்களுக்கு என்று இருக்கும் வழக்கமான பாணியில் இருந்து சற்றி வித்தியாசமான முறையில் திரைக்கதையை நகர்த்தி சென்றிருப்பது, ஆன்மீகவாதிகளை மட்டும் இன்றி அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைக்கிறது.
”வழக்கறிஞர்களின் வாதங்களை வைத்து சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மாலைபோட்டு விரதம் இருந்து பெரியபாதையில் பயணித்து ஐயப்பனை தரிசித்திருந்தால், நிச்சயம் இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்திருக்க மாட்டார்” போன்ற வசனங்கள் கைதட்டல் பெறுகிறது.
அனைத்து விசயங்களையும் அளவாக கையாண்டு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் ராஜா தேசிங்கு படத்தின் நீளத்திலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். அப்படி படத்தின் நீளத்தை சற்று குறைத்து காட்சிகளை சற்று வேகமாக நகர்த்தியிருந்தால் ஐயப்ப பக்தர்களிடம் மட்டும் இன்றி சினிமா ரசிகர்களிடமும் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும்.
மொத்தத்தில், 33 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெளியாகியிருக்கும் ஐயப்பன் திரைப்படமான இந்த ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ படத்தை ஐயப்ப பக்தர்கள் மட்டும் இன்றி அனைவரும் தாராளமாக பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5