Casting : Vidaarth, Saravanan, Arundhathi Nair, Hello Kandasamy, George Mariyan, Bharathi Kannan, Vetrivel Raja, Pawan Raj, Jintha, Karnaraja, Jintha Gopi, Semmalar Annam, Rinthu Ravi, Tamil Selvi
Directed By : Ravi Murugaiya
Music By : Johan Shivanesh
Produced By : Ramalingam
நாயகன் விதார்த்தும், சரவணனும் இணைந்து கழிப்பறை கட்டுவதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்டுகிறார்கள். அந்த குழியில் சோழர் காலத்து பொற்காசுகள் கிடைக்கிறது. அரசிடம் ஒப்படைக்க வேண்டிய புதையலை யாருக்கும் தெரியாமல் பிரித்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அந்த தகவலை ஊரில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக தெரிந்துக்கொண்டு அவர்களும் புதையலில் பங்கு கேட்கிறார்கள். இப்படி பங்குதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போக இறுதியில் அந்த பொற்காசுகள் யாருக்கு கிடைத்தது? என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்வது தான் ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் கதை.
படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை நகைச்சுவையை தவிர வேறு ஒன்றுமில்லை, என்று சொல்லும் அளவுக்கு படம் படு காமெடியாக நகர்கிறது. அதிலும், படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கதையோடு பயணித்து, காட்சிக்கு காட்சி நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.
நாயகனாக விதார்த் நடித்திருந்தாலும், அவரும் படத்தில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம் போல தான் நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் நாயகன் என்ற இமேஜ் இல்லாமல் கதைக்கு ஏற்ற ஒரு நடிகராக வழக்கம் இயல்பாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
விதார்த்தின் தாய்மாமன் வேடத்தில் நடித்திருக்கும் பருத்திவீரன் சரவணன், மயானத்தில் குழி தோண்டும் பணி செய்யும் ஜார்ஜ் மரியன், அவருடன் பயணிக்கும் பவன்ராஜ், மீன் வியாபாரியாக நடித்திருக்கும் ஹெலோ கந்தசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாரதி கண்ணன், ஊராட்சிமன்ற தலைவராக நடித்திருக்கும் கர்ணராஜா, பொற்கொல்லர் வேடத்தில் நடித்திருக்கும் வெற்றிவேல் ராஜா, பாம்பு பிடிப்பவராக நடித்திருக்கும் ஜிந்தா, மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கும் ஜிந்தா கோபி, நாயகியாக நடித்திருக்கும் அருந்ததி நாயர், அவருடைய அம்மாவாக நடித்திருக்கும் தமிழ் செல்வி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கைதட்டல் பெறும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.
புதையலை பங்கிட்டுக் கொள்வதை மையமாக வைத்து நகரும் கதை என்றாலும், அதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகர்த்தி செல்வது நடிகர்களின் நடிப்பு தான். படத்தில் நடித்த அத்தனை பேரும் இயல்பான நகைச்சுவை மூலம் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். பெரும்பாலும் சோகமான வேடங்களில் நடிக்கும் நடிகை செம்மலர் அன்னம், கூட இந்த படத்தில் ஜாலியான வேடத்தில் நடித்து சிரிக்க வைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பானு முருகன் எளிமையான கிராமத்தை அழகாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, கதபாத்திரங்களின் நடிப்பு திறமையை மிக நேர்த்தியாக ரசிகர்களிடம் கடத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.
படத்தொகுப்பாளர்கள் ராம் மற்றும் சதீஷ் எந்த இடத்திலும் சிறு தொய்வு ஏற்படாத வகையில் காட்சிகளை வேகமாக நகர்த்தி சென்றாலும், கதபாத்திரங்களின் உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம் உருவாகும் நகைச்சுவை காட்சிகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி காட்சிகளை தொகுத்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் ரவி முருகையா எழுதி இயக்கியிருக்கிறார். புதையல் மற்றும் அதை பங்கு போட்டுக்கொள்வது, என்ற சிறு விசயத்தை வைத்துக்கொண்டு மிகப்பெரிய நகைச்சுவை படத்தை கொடுத்திருக்கிறார். பெரிய காமெடி நடிகர்கள் இல்லை என்றாலும், பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர்களை வைத்துக்கொண்டு காமெடி அணுகுண்டை வெடிக்கச் செய்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை திரையரங்கில் சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்படி திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் நாயகன் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து, ஒரு கதை அதில் பயணிக்கும் கதாபாத்திரங்கள் என்ற ரீதியில், அத்தனை நடிகர்களையும் கையாண்டிருப்பது பாராட்டத்தக்கது. அதை ஏற்றுக்கொண்டு நடித்து கதைக்கு பலமாக பயணித்திருக்கும் விதார்த்தையும் பாராட்டியாக வேண்டும்.
மொத்தத்தில், இந்த ‘ஆயிரம் பொற்காசுகள்’ சிரிப்பு புதையல்.
ரேட்டிங் 4/5