Casting : .Ashok selvan, Karthiga Muralidharan,Chandini, Mega Akash, Arun, Jaiseelan, Sriram, Vivyasanth, Sherlinseth, Aneesh, Michael Thangadurai,
Directed By : CS Karthikeyen
Music By : Leon James
Produced By : Clear Water Films, I cinema, Captain Megavanan Isaivanan
பள்ளி படிக்கும் நாயகன் அசோக் செல்வன், சக மாணவி கார்த்திகா முரளிதரனை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், அந்த காதலை அவரிடம் சொல்லாமலே பள்ளி படிப்பை முடித்துவிடுவதால் அந்த காதல் தோல்வியடைகிறது. கல்லூரியில் படிக்கும் போது ரியாவை காதலிக்கிறார். ரியாவுடனான காதல் ஆரம்பத்தில் அமர்க்களமாக இருந்தாலும், அதன் பிறகு அதுவும் தோல்வியடைகிறது. இறுதியாக மேகா ஆகாஷை காதலிக்கும் அசோக் செல்வனின் காதல் வெற்றி பெற்றதா?, அல்ல வழக்கம் போல் தோல்வியடைந்ததா? என்பதை ஜாலியாக சொல்வது தான் ‘சபா நாயகன்’ படத்தின் கதை.
மூன்று வெவ்வேறு காதல் கதைகள், அதில் மிக அழகாக நடித்திருக்கும் அசோக் செல்வன், நடிப்புடன் நடனம், நகைச்சுவை ஆகியவற்றிலும் அசத்தியிருக்கிறார். தனது காதல் தோல்வி கதைகளை கூட சோகமாக அல்லாமல் நகைச்சுவையாக சொல்லி ரசிகர்களை குஷிப்படுத்துபவர், ஒவ்வொரு காதல் கதைகளில் ஒவ்வொரு விதத்தில் நடித்து தனது நவசர நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ் என மூன்று நாயகிகள், மூன்று பேரும் அழகிலும், நடிப்பும் அசத்துகிறார்கள். ஆனால், மூவரில் கார்த்திகா முரளிதரனுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு தகுதியானவராக அவர் இருப்பதோடு, தனது பணியை சிறப்பாக செய்து முதலிடத்தையும் பிடித்து விடுகிறார். படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மட்டும் வந்தாலும் மேகா ஆகாஷின் வருகை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சாந்தினி சில காதல் காட்சிகள், ஒரு பாடல் என தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
அசோக் செல்வனின் நண்பர்களாக நடித்திருக்கும் அருண், ஜெயசீலன், ஸ்ரீராம், அனீஷ் ஆகியோர் யூடியுப் வீடியோவில் நடிக்கும் அதே பாணியில் நடித்திருப்பதால், அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் யூடியுப் வீடியோவையே நினைவூட்டுகிறது. அசோக் செல்வனின் சகோதரியாக நடித்திருக்கும் பெண், மைக்கல் தங்கதுரை, மயில்சாமி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பும் அளவு.
ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகியோரின் ஒளிப்பதிவு மூன்று காலக்கட்டங்களையும் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பதோடு, காட்சிகளை கலர்புல்லாகவும் படமாக்கியிருக்கிறது.
லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட ரகமாக இருந்தாலும், திரும்ப திரும்ப கேட்கும்படியும், இளசுகளை கவரும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் சி.எஸ்.கார்த்திகேயன், ரசிகர்களின் பல்ஸுக்கு ஏற்றபடி படத்தை கொடுத்திருக்கிறார். காதல் தோல்வியை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு பயணிக்க வேண்டும் என்ற மெசஜை ஜாலியாக சொல்லியிருப்பவர், இளைஞர்கள் கொண்டாடும் விதத்தில் காட்சிகள் மற்றும் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.
குடிபோதையில் போலீஸிடம் சிக்கிக்கொள்ளும் அசோக் செல்வன், தனது காதல் கதைகளை அவர்களிடம் விவரிக்கும்படி தொடங்கும் படம், அவருடைய ஒவ்வொரு காதல் கதையை சொல்லும் போது சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் படத்தின் நீளத்தால் சிறிது தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், இறுதியில் எதிர்ப்பார்க்காத ஒரு திருப்பத்தை வைத்து, இது காதல் தோல்வி கதை அல்ல தோல்வியில் முடிந்த முதல் காதல் மீண்டும் எப்படி கைகூடுகிறது என்று சொல்லும் வெற்றி கதை என்பதை சொல்லிய விதம் ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘சபா நாயகன்’-னை நிச்சயம் இளைஞர்கள் கொண்டாடுவார்கள்.
ரேட்டிங் 3.5/5