Casting : Naga Anvesh, Heba Patel, Suman, Sapthagiri
Directed By : K.Pazhani
Music By : Bheems
Produced By : Krishna Reddy
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் ‘பாகுபலி’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கே.பழனி இயக்கத்தில், சரஸ்வதி பிலிம்ஸ் சார்பில் ‘செந்தூரப்பூவு’ கிருஷ்ணாரெட்டி தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்’ படம் எப்படி என்பதை பார்ப்போம்.
தெலுங்கானாவின் தலைநகரான கோதாவரி உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் பள்ளம் தோண்டும் போது அதில் பெண் உருவச்சிலை ஒன்று கிடைக்கிறது. விலை உயர்ந்த அந்த சிலையை விற்பதற்காக பல கோடி பேரம் பேசும், ஷாயாஜி ஷிண்டே, அந்த சிலையை சென்னைக்கு எடுத்துச் செல்லும் பொருப்பை ஹீரோ நாக அன்வேஷிடம் ஒப்படைக்கிறார். வேன் மூலம் அந்த சிலையை சென்னைக்கு எடுத்துச் செல்லும் ஹீரோ போலீஸிடம் இருந்து தப்பிக்க காட்டு பாதையில் செல்ல, எதிர்ப்பாராதவிதமாக வாகனம் பழுதாகி அங்கே சிக்கிக்கொள்கிறார். அப்போது அந்த சிலை பெண்ணாக மாறிவிடுகிறது.
சிலை பெண்ணாக மாறியது தெரியாத ஹீரோ, சிலையை தேடிக்கொண்டிருக்க, அந்த சிலை பெண் அவரிடம் லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏறிக்கொள்கிறார். சிலை கிடைக்காததால் போலியான ஒரு பெண் சிலையை பேக் செய்து ஷாயாஜி ஷிண்டேவிடம் ஒப்படைக்கும் ஹீரோ, அந்த சிலை பெண்ணை தன்னுடனே தங்க வைத்துக்கொள்கிறார்.
இதற்கிடையே, சிலைக்காக ஷாயாஜி ஷிண்டே ஹீரோவை துறத்த, அவரிடம் இருந்து தப்பிக்க அந்த சிலை பெண்ணுடன் ஓட்டம் பிடிக்கும் ஹீரோ கிராமம் ஒன்றில் தஞ்சம் அடைய, அந்த கிராமத்து தலைவர் மகாதேவனின் மகள், தான் அந்த சிலை பெண் என்று ஊர் மக்கள் கூறுவதோடு, அவர்களை மகாதேவனிடமும் ஒப்படைத்து விடுகிறார்கள். இருந்தாலும், மகாதேவனின் மகள் தான் இல்லை என்று அந்த பெண் ஹீரோவிடம் கூறினாலும், ஷாயாஜி ஷிண்டேவிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த ஊரிலேயே ஹீரோவும், அந்த பெண்ணும் தங்க, அவர்களுக்குள் காதல் ஏற்படுகிறது.
இதற்கிடையே, தான் ஒரு சிலை என்பதையும், தான் ஏன் சிலையாக மாறினேன், எங்கிருந்து வந்திருக்கிறேன், என்ற உண்மைகளை அந்த பெண் ஹீரோவிடம் சொல்ல, ஹீரோவோ அதை கேட்டு நம்பாமல் அந்த பெண்ணை கேலி செய்வதோடு, அந்த பெண் பொய் சொல்வதாக கூறி அவரை திட்ட, அந்த பெண் திடீரென்று சிலையாக மாறிவிடுகிறார். சிலையாக மாறிய பெண் மீண்டும் பெண்ணாக மாறினாரா?, ஹீரோவின் காதல் வெற்றி பெற்றதா இல்லையா?, அந்த சிலை பெண்ணின் ரகசியம் என்ன?, யார் அவர்? ஆகிய கேள்விகளுக்கான பதிலை பேண்டஷி கலந்த கமர்ஷியல் படமாக சொல்லியிருக்கிறார்கள்.
பாகுபலியில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள இப்படத்தின் இயக்குநர் கே.பழனி, கமர்ஷியல் படத்தை எளிமையான பேண்டஷிப் படமாக திரைக்கதை அமைத்தவிதம் சபாஷ் சொல்ல வைக்கிறது.
ஹீரோ நாக அன்வேஷ் அறிமுகம் என்றாலும், அதை வெளிக்காட்டாத வகையில் நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று அனைத்திலும் நடிப்பால் ஸ்கோர் செய்திருப்பவர் நடனத்திலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
சிலையாக இருந்து பெண்ணாக மாறிய ஏஞ்சலாக நடித்துள்ள ஹேபா படேல், ஏஞ்சலுக்கான அனைத்து தகுதிகளுடன் இருப்பதோடு, தனது கதாபாத்திரத்திற்கான நடிப்பை கொடுத்து குட் வாங்குகிறார்.
ஹீரோவின் நண்பராக வரும் சப்தகிரி தமிழுக்கு புதியவராக இருந்தாலும் பல இடங்களில் சிரிக்க வைக்க, வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் ஷாயாஜி ஷிண்டேவும், பிரதீப்ராவத்தும் போனஸாக ரசிகர்களை குளுங்க குளுங்க சிரிக்க வைக்கிறார்கள்.
நேர்த்தியான திரைக்கதையோடு பர்பக்ட் கமர்ஷியல் படமாக இருந்தாலும், ஹீரோ, ஹீரோவின் நண்பர் ஆகியோரது டயலாக் டெலிவரி சில இடங்களில் சிங் ஆகாமல் இருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது. இருந்தாலும், கச்சிதமான திரைக்கதையும், அவ்வபோது வரும் காமெடிக் காட்சிகளும் அதை பேலன்ஸ் செய்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச்செல்கிறது.
நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் புதியவர்களாக இருந்தாலும், படத்தில் அது எங்கேயும் தெரியாமல் இருப்பது இப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இசையமைப்பாளர் பீம்ஸ், ஒளிப்பதிவாளர் குணா ஆகியோரது பணி தொழில்நுட்ப ரீதியாக படத்தை தரமானதாக கொடுக்க, கிருஷ்ணரெட்டியின் திரைக்கதையும், இயக்குநர் கே.பழனியின் காட்சி அமைப்பும் முழு படத்தையும் நல்ல பொழுதுபோக்கு படமாக உருவாக்கியிருக்கிறது.
கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்வை மையமாக வைத்து, உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்’ பொழுதுபோக்குக்கான முழு உத்ரவாதம் கொடுக்கும் கமர்ஷியல் படமாக உள்ளது.
ஜெ.சுகுமார்