Casting : Prabhas, Prithviraj Sukumaran, Shruthi Hassan, Jagapathi Babu, Boby Simha, Eshwari Rao, Shreya Reddy, Mime Gopi, John Vijay
Directed By : Prashan Neel
Music By : Ravi Basrur
Produced By : Hombale Films - Vijay Kiragandur
கர்ணன் - துரியோதனன் இடையிலான நட்பை கருவாக வைத்துக்கொண்டு நடத்தப்பட்டிருக்கும் மாபெரும் ஆக்ஷன் திருவிழா தான் ‘சலார்’ படத்தின் கதை.
மூன்று பழங்குடி சமூகத்தினர் சேர்ந்து ஆட்சி நடத்தும் பகுதியான கான்சார், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்திய சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாமல், தனியாக சட்டம் வகுத்துக்கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த தேசத்தின் அதிபர் சிவம் மன்னார் இறப்புக்கு பிறகு அரியணையில் ஏற வேண்டிய மற்றொரு பழங்குடி சமூகத்தின் தலைவரை மட்டும் இன்றி அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒட்டு மொத்த மக்களையும் கொன்று விட்டு அரியணையில் அமர்கிறார் சிவம் மன்னாரின் மகன் ராஜம் மன்னார். அவர் உயிரோடு இருக்கும் போதே மீண்டும் கான்சாரில் பதவி போட்டி ஏற்படுகிறது. ராஜம் மன்னாருக்கு பிறகு அவரது அரியணையில் அமர்வது யார்? என்ற போட்டியில், அவருடைய இரண்டாம் மனைவியின் மகனான பிரித்விராஜ் சுகுமாரனுக்கு உரிமை மறுக்கப்படுவதோடு, அனைவரும் ஒன்று சேர்ந்து அவரையும், அவருடைய ஆட்களையும் அழிக்க முடிவு செய்கிறார்கள். இதற்காக ஒவ்வொருவரும் தங்களது படைகளை தயார் செய்ய, பிரித்விராஜ் சுகுமாரன் மட்டும் எந்தவித படையையும் தயார் செய்யாமல், தனது நண்பன் பிரபாஸை உதவிக்கு அழைக்கிறார்.
நண்பனுக்காக எதையும் செய்யும் பிரபாஸ், தனிமனித ராணுவமாக நின்று தனது நண்பனுக்காக கான்சாரின் அதிகாரத்தை கைப்பற்றும் போரில் தீவிரம் காட்டும் போது, அவரைப் பற்றிய ஒரு உண்மை தெரிய வருகிறது. அது என்ன? அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது, என்பது தான் இரண்டாம் பாகம்.
கான்சார் தேசம் பற்றிய வரலாறு, பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் சுகுமார் இடையிலான நட்பு இவற்றை சுற்றி நகரும் கதை, நண்பனுக்காக கான்சார் தேசத்தின் அதிகாரத்தை பிரபாஸ் கைப்பற்றுவதோடு முடிந்தாலும், பிரபாஸ் - பிருத்விராஜ் சுகுமாரன் இடையிலான நட்பு எப்படி பகையாக மாறியது?, நண்பனுக்காக எதையும் செய்யும் பிரபாஸ், ஸ்ருதி ஹாசனை காப்பாற்றுவதற்காக அதே நண்பனுக்கு எதிராக எதற்காக சண்டைப்போடுகிறார்?, ஸ்ருதி ஹாசனை பழிவாங்க நினைப்பவர்கள் யார்? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் தான் இரண்டாம் பாகம்.
இயக்குநர் பிரசாந்த் நீல், வழக்கம் போல் தனது மேக்கிங்கில் மிரட்ட முயற்சித்திருந்தாலும், ஆரம்பக்கட்ட கதை நகர்த்தல் பார்வையாளர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, “ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது” என்று புலம்ப வைக்கவும் செய்கிறது. இருந்தாலும் மனுஷன் காட்சிக்கு காட்சி பில்டப்பை அதிகரிக்கச் செய்தே படத்தை நகர்த்தி செல்கிறார்.
கான்சார் என்ற தேசத்தை இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடு போல் காட்டியிருக்கும் இயக்குநர், அங்கு வாழும் மனிதர்களை மட்டும் அழுக்குபடிந்தவர்களாகவும், கருப்பு உடை அணிந்தவர்களாகவும் காட்சிப்படுத்திருப்பது சினிமாத்தனமாக இருக்கிறது. அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தும் கான்சார் படைகள், ஓட்டு போடுவதில் மட்டும் தராசு முறையையும், நேரம் காட்டியாக பழைய மணல் நேரக்காட்டியை பயன்படுத்துவதும், காதில் வாழைப்பூ வைப்பது போல் இருக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் பிரபாஸுக்கு கொடுக்கப்படும் பில்டப்புக்கு அவர் நூறு சதவீதம் பொருந்துகிறார். ஆறடி உயரத்தில், வாட்டசாட்டமாக இருக்கும் அவருடைய ஒரு அடியே இடி போல் விழுவதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அமைதியாகவே இருக்கும் பிரபாஸ் வசனம் பேசுவதும், நடிப்பதும் மிக மிக குறைவு தான், காரணம் அவரை நிக்க வைத்தும், மற்றவர்களை அடிக்க வைத்துமே பல காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவருடைய நடிப்பை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
வில்லனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு தான் நடிக்க அதிகம் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் மனைவியின் மகன் என்பதால் சிறுவயதில் இருந்தே நிராகரிக்கப்பட்டு வரும், அவரை கான்சார் அதிகார வர்க்கத்தினர் ஒன்று சேர்ந்து அவமானப்படுத்தும் காட்சிகளின் போது தனது உணர்ச்சிகரமான நடிப்பை மிக இயல்பாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி ஹாசன், முகத்தில் பெரிய மாற்றம் தெரிவதோடு அவர் மீது ஒளிப்பதிவாளரும், மேக்கப் மேனும் அதிகம் கவனம் செலுத்தவில்லை என்பதும் தெரிகிறது. கான்சார் மற்றும் பிரபாஸ் பற்றிய கதையை கேட்பது தான் அவருடைய வேலை என்பதால் அவருக்கு நடிக்க வாய்ப்பே கொடுக்கப்படவில்லை.
ராஜம் மன்னார் வேடத்தில் நடித்திருக்கும் ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, பிரபாஸின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், ராஜம் மன்னாரின் மகளாக நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
பவுன் கவுடாவின் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளையும், பில்டப் காட்சிகளையும் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் படமாக்கியிருக்கிறது.
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். அதிலும், பிரபாஸுக்கு கொடுப்படும் பில்டப்புக்கே பில்டப் கொடுக்கும் விதத்தில் அவருடைய பீஜியம் அமைந்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னி, படத்தின் துவக்கத்தில் சற்று தடுமாறியிருப்பதோடு, பார்வையாளர்களுக்கு தலைவலி கொடுக்கும் விதத்தில் கதையை நகர்த்தினாலும், க்ளைமாக்ஸ் நெருங்கும் போது கதையை தெளிவாக விவரித்து ஆறுதல் அளித்திருக்கிறார்.
கலை இயக்குநர் அதிகம் மெனக்கெட்டிருப்பது படம் முழுவதும் தெரிந்தாலும், அவரை விட அதிகம் மெனக்கெட்டிருப்பது கிராபிஸ் பணியாளர்கள் தான் என்பதும் தெரிகிறது.
கதை எதுவாக இருந்தாலும், அதை கொடுக்கும் விதம் தான் முக்கியம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் நீல், தனது முந்தைய வெற்றி படத்தின் சாயலில் பயணித்திருப்பது ரசிகர்களை சலிப்படைய செய்கிறது. அதிலும் கதை நடக்கும்ம் களம், கதாபாத்திரங்கள் ஆகியவை ரசிகர்களை படத்துடன் ஒன்றவிடாமல் செய்வது படத்தின் பெரும் குறை. ஆனால், இந்த குறைகளை மறைக்கும் விதத்தில் படத்தின் ஆக்ஷன் காட்சிகளும், பிரமாண்டமும் அமைந்திருக்கிறது.
மொத்தத்தில், எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், ஆக்ஷன் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தியிருக்கிறது இந்த ‘சலார்’.
ரேட்டிங் 3/5