Latest News :

‘மூன்றாம் மனிதன்’ திரைப்பட விமர்சனம்

dd192e2818d9c8d9cd6f7b45d4dd2af1.jpg

Casting : K.Bagyaraj, Soniya Agarwal, Srinath, Ramdev, Prana, Madurai Gnanam, Soodhu Kavvum Sivakumar

Directed By : Ramdev

Music By : Venu Sankar and Dev G

Produced By : Ramdev Pictures - Ramdev

 

மருத்துவமனை ஊழியரான சோனியா அகர்வாலின் கணவர் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை புலன் விசாரணை செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ், பல அதிர்ச்சிகரமான உண்மைகளை கண்டுபிடிக்கிறார். அது என்ன? என்பதை பரபரப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக மட்டும் இன்றி தம்பதிகளுக்கு ஏற்ற நல்ல மெசஜாகவும் சொல்வது தான் ‘மூன்றாம் மனிதன்’ படத்தின் கதை.

 

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜின் அனுபவம் வாய்ந்த நடிப்பு கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. கதையின் மையக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிஷிகாந்த் பிரணா, முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். சோனியா அகர்வால் ஆரம்பத்தில் கவனம் ஈர்த்தாலும், அதன் பிறகு அவரது கதாபாத்திரத்திற்கு பெரிய வேலை இல்லாமல் போகிறது. இருந்தாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட குறைவான பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

பிராணாவின் கணவர் வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ராம்தேவ், மதுவுக்கு அடிமையானவர் வேடத்தில் நடித்திருந்தாலும், அறிவுப்பூர்வமான வசனம் பேசி ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார்.

 

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவனுக்கு ஆட்சியர் பரிசு வழங்குகிறார். அந்த நிகழ்வுக்காக வரும் அந்த மாணவரின் தந்தை, பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்று அங்குள்ளா தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடித்து மது அருந்துகிறார். இப்படி ஒரு அறிமுக காட்சியை வைத்து ரசிகர்களின் கவனத்தை ஆரம்பத்திலேயே ஈர்த்துவிடும் இயக்குநர் ராம்தேவ், அதன் பிறகு கொலை மற்றும் அதன் புலன் விசாரணையை தொடங்கி, படத்தை வேகமாக பயணிக்க வைத்து ரசிகர்களை படத்தோடு ஒன்றிவிட செய்துவிடுகிறார். 

 

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் கதை நகர்ந்தாலும், குடும்பங்களுக்கு ஏற்ற பல விசயங்களை மிக நேர்த்தியாக சொல்லியிருப்பதோடு, ஆண்களின் குறை மற்றும் நிறையோடு, பெண்களின் குறை மற்றும் நிறையை தெளிவாக பேசியிருக்கும் இயக்குநர் கணவன் - மனைவி என்ற இருவர் உறவில் மூன்றாம் மனிதன் எப்படி நுழைகிறான், என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

இயக்குநர் ராம்தேவ் திரைக்கதை மற்றும் காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்தி செல்வதோடு, வசனங்கள் மூலமாகவும் கைதட்டல் பெறுகிறார். குறிப்பாக பெண்களை மையப்படுத்திய வசனங்களும், ஆண்மைத்தன்மை பற்றிய வசனங்களும் கைதட்டல் பெறுகிறது. அதே சமயம், பல இடங்களில் மேலோட்டமாக அல்லது மறைமுகமாக சொல்ல வேண்டிய விசயங்களை வெளிப்படையாக பேசியிருப்பது நெருடலாக இருக்கிறது. 

 

மணிவண்ணனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. வேணு சங்கர் மற்றும் தேவ்.ஜி ஆகியோரது இசையில், ராம்தேவ் வரிகளில் பாடல்கள் கேட்கும்படியும், புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.

 

ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்பது போல், ஒரு குடும்பம் மட்டும் அல்ல அந்த குடும்பத்தின் எதிர்காலமே ஒரு பெண்ணின் கையில் தான் இருக்கிறது என்பதை விட, அவள் வாழும் முறையில் தான் இருக்கிறது, என்ற கருத்தை பாடம் சொல்வது போல் அல்லாமல், நல்ல விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கும் விதத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்தேவ். 

 

மொத்தத்தில், ‘மூன்றாம் மனிதன்’ தவறான பாதையில் செல்லும் மனிதர்களை நல்வழிப்படுத்தும் நல்ல முயற்சி.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery