Latest News :

’நந்திவர்மன்’ திரைப்பட விமர்சனம்

fe41ac594cc19e2ab0cbd0e35a4f84b8.jpg

Casting : Suresh Ravi, Asha Venkatesh, Bose Venkat, Nizhalgal Ravi, Gajaraj, Meesai Rajendar, Aadukalam Murugadoss, Ambani Shankar, Kothandam, JSK Gopi

Directed By : G.V. Perumal Varadhan

Music By : Jerard Felix

Produced By : AK Film Factory - Arunkumar Dhanasekaran

 

1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னர்களில் ஒருவரான நந்திவர்மன், செஞ்சி பகுதியில் கட்டிய மாபெரும் சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருப்பதும், அந்த கோவிலில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது. அதன்படி, தொல்லியல் துறை பேராசிரியர் நிழல்கள் ரவி, தொல்லியல் துறை அதிகாரி போஸ் வெங்கட் தலைமையில் மாணவர் குழு ஒன்றை ஆய்வு மேற்கொள்ள அங்கு அனுப்புகிறார். ஆனால், அந்த கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதால் மக்கள் அந்த இடத்திற்கு செல்வதை தவிர்ப்பதோடு, அந்த இடத்தில் ஆய்வு நடத்தவும் தடையாக நிற்கிறார்கள்.

 

பிறகு மக்களை சமாதானப்படுத்தி அந்த இடத்தில் போஸ் வெங்கட் குழு ஆய்வு மேற்கொள்ளும் போது, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்படுவதோடு, ஆய்வு குழுவில் இருந்த மாணவர் ஒருவரும் கொல்லப்படுகிறார். இந்த கொலைகள் பற்றிய விசாரணையை கையில் எடுக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாயகன் சுரேஷ் ரவி, அந்த ஊரில் நடக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவருக்கு ஆய்வு குழுவைச் சேர்ந்த நாயகி ஆஷா வெங்கடேஷ் உதவி செய்ய, அந்த மர்மத்தின் பின்னணி என்ன?, உண்மையிலேயே அந்த ஊரில் நந்திவர்மன் கட்டிய கோவிலும், புதையலும் புதைந்திருக்கிறதா? என்பதை சொல்வது தான் ‘நந்திவர்மன்’ படத்தின் மீதிக்கதை.

 

‘பாகுபலி’ போல் பிரமாண்டமாக மிகப்பெரிய பொருட்ச் செலவில் சொல்லப்பட வேண்டிய ஒரு கதையை இப்படி ஒரு பட்ஜெட்டில் எடுத்ததே மிகப்பெரிய வியப்பாக இருக்க, பல அறிய தகவல்களுடன், கதையை மிக நேர்த்தியாக சொல்லி இரண்டு மணி நேரம் ரசிகர்களை கட்டிப்போடும் மாயாஜாலத்தை மிக சிறப்பாக செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன்.

 

நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களையும் ஒவ்வொரு ரகம் கொண்டதாக தேர்வு செய்கிறார். அந்த வகையில், கதைக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, மிரட்டலாகவும் நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து, தன்னை முழுமையான நாயகன் என்று நிரூபித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஆஷா வெங்கடேஷ், ஒரு சில முகபாவங்கள் மூலமாகவே தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி விடுகிறார். 

 

இரண்டாவது நாயகன் போல் வலம் வரும் போஸ் வெங்கட்டின் அனுபவமான நடிப்பும், அவரது கதாபாத்திர வடிவமைப்பும் திரைக்கதைக்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது. நிழல்கள் ரவி மற்றும் கஜராஜ் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

 

Nandhivarman

 

மீசை ராஜேந்தர், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், கோதண்டம், ஜே.எஸ்.கே.கோபி என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் சிறிய வேடங்களில் நடித்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சேயோன் முத்து எளிமையான லொக்கேஷன்களை கூட பயங்கரமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். பழங்காலத்து கோவில்களையும், மலைப்பகுதிகளையும் காட்சிப்படுத்திய விதம் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.

 

ஜெரால்டு ஃபிலிக்ஸ் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

கலை இயக்குநர் முனிகிருஷ்ணன் பழங்காலத்து கோவிலை வடிவமைத்த விதம் பாராட்டும்படி இருப்பதோடு, தொல்லியல்துறையினர் ஆய்வு நடத்தும் இடம் மற்றும் சிலைகள் போன்ற அனைத்தும் செயற்கைத்தனம் அற்றதாக இருக்கிறது.

 

ஸ்டண்ட் மாஸ்டர் சுகேஷின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

 

அறிமுக இயக்குநர் பெருமாள் வரதன், ஆழமான கதைக்கு அழகான காட்சி வடிவம் கொடுத்திருக்கிறார். நந்திவர்மனின் கதையை விவரிக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்க வைப்பது போல், கண்ணுக்கு தெரியாத உலோகத்தினால் செய்யப்பட்ட நந்திவர்மனின் மாய வாள், போன்ற விசயங்கள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.

 

தமிழக வரலாற்றை சொல்லும் பல ஆதாரங்கள் இன்னமும் தமிழ்நாட்டில் புதைந்திருக்கிறது, என்ற உண்மையை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பெருமாள் வரதன், அதை வசனங்களாக மட்டும் இன்றி காட்சி மொழி மூலமாக சிறப்பாக சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘நந்திவர்மன்’ நிச்சயம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery