Latest News :

’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ திரைப்பட விமர்சனம்

345632d815e80024940f26a185748a81.jpg

Casting : Sathymurthi, Vijaya Kumar Rajendran, Gopi Aravind, Sudhakar Jayaraman, Munishkaanth, George Maryan, Riythvika, Harija, Yashika Anand

Directed By : Ramesh Venkat

Music By : Kaushik Krish

Produced By : Akshaya Pictures - Rajan

 

திரைப்படம் இயக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் நாயகன் சத்யமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் கோபி, சுதாகர், விஜய் ஆகியோர் திரைப்படம் பார்ப்பதற்காக பழைய திரையரங்கும் ஒன்றுக்கு செல்கிறார்கள். அதே திரையரங்கிற்கு யாஷிகா ஆனந்தும், அவரது தோழி ஹரிஜாவும் வருகிறார்கள். அவர்களைப் போல் மேலும் சிலர் அந்த திரையரங்கிற்குள் படம் பார்க்க வர, திரையில் அவர்கள் பார்க்க நினைத்த படம் அல்லாமல் ஒரு பேய் பேடம் திரையிடப்படுகிறது. அந்த படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அந்த திரையரங்கில் சில அமானுஷ்ய விசயங்கள் நடக்கிறது. இதனால், திரையரங்கில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற நினைக்கும் போது அவர்களால் முடியவில்லை. எத்தனை முறை முயற்சித்தாலும், அவர்கள் திரும்ப...திரும்ப...அந்த திரையரங்கிற்குள் சிக்கிக்கொள்ள, இறுதியில் அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா?, அந்த திரையரங்கில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களின் பின்னணி என்ன? என்பதே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் மீதிக்கதை.

 

கோபி, சுதாகர், விஜய், சாரா, அப்துல், சந்தோஷ், அகஸ்டின், ஜெயசீலன் என யுடியுப் பிரபலங்களும், சத்யமூர்த்தி, யாஷிகா ஆனந்த், கிரேன் மனோகர், முனீஷ்காந்த் போன்ற திரை பிரபலங்களும் என சுமார் 12 பேர் படம் முழுவதும் வருகிறார்கள். கிளைமாக்ஸ் நெருங்கும் போது இந்த கூட்டத்துடன் ஜாங்கிரி மதுமித்தாவும், விஜே ஆஷிக்கும் இணைந்துக் கொள்கிறார்கள். இப்படி பெரும் கூட்டம் செய்யும் காமெடி அலப்பறைகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. 

 

கோபி மற்றும் சுதாகர் இருவரும் காமெடி என்ற பெயரில் ரசிகர்களை கொல்ல முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், முனீஷ்காந்த், ஜாங்கிரி மதுமித்தா, கிரேன் மனோகர், சாரா, அப்துல்  ஆகியோர் அவர்களிடம் இருந்து ரசிகர்களை காப்பற்றி சிரிக்க வைத்திருக்கிறார்கள். சத்யமூர்த்தி, ஆர்.எஸ்.கார்த்திகேயன், ரித்விகா, ஜார்ஜ் மரியன் ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். 

 

ஜோஸ்வா ஜே.பெரஷின் ஒளிப்பதிவும், கெளசிக் கிரிஸின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

திரையரங்கிற்குள் நடக்கும் ஒரு திகில் கதையை முடிந்த அளவு திகிலாக சொல்லியிருக்கும் இயக்குநர் ரமேஷ் வெங்கட், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். 

 

திகில் கதை என்றாலே குறிப்பிட்ட ஒரே இடத்தில் கதை நகர்வது வழக்கமான பாணி தான் என்றாலும், அதை ஒரு பழைய திரையரங்கின் பின்னணியில் சொல்லியிருப்பது புதிதாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. 

 

மொத்தத்தில், புது முயற்சியாக சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ சிறிய பட்ஜெட்டில் நிறைவான திகில் மற்றும் நகைச்சுவை படம் என்பதை மறுக்க முடியாது.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery