Latest News :

‘சாவி’ விமர்சனம்

77a0625b6b600378cc6177a8a1bc361d.jpg

Casting : Prakash Chandra, Sunulakshmi, Rajalingam, Udhaya banu Maheshwaran,

Directed By : R.Subramanian

Music By : Satish Thaianban

Produced By : The Sparkland

 

படம் தொடங்கியதுமே, ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளாக, அடுத்த காட்சியில் ஒருவர் தற்கொலை செய்துக்கொள்கிறார். பிறகு போலீஸ் ஒருவர் பற்றி அவரது தந்தையிடம் விசாரிக்க, அடுத்த காட்சியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கொலை செய்யப்பட, கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவரின் சடலத்தை பார்க்க வரும் ஹீரோ பிரகாஷ் சந்திராவை போலீஸ் துறத்துகிறது. ஆரம்பத்தில் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தமில்லாதபடி தெரிந்தாலும், போலீஸ் விசாரணையில் இவை அனைத்தும் ஒரே சம்பவத்தை சுற்றி தான் நிகழ்கிறது என்பதை ரொம்ப நேர்த்தியான திரைக்கதையோடு சொல்லியிருப்பதும், அது என்ன சம்பவம் என்பதும் தான் ‘சாவி’ படத்தின் கதை.

 

கதையாக பார்த்தால், சாதாரண, நாம் ஏற்கனவே பார்த்த ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் ஜானர் படமாக இப்படம் இருந்தாலும், இயக்குநர் ஆர்.சுப்பிரமணியன் அமைத்திருக்கும் திரைக்கதை படத்தை கவனிக்க வைத்திருக்கிறது.

 

சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பவர்கள், இதில் முக்கியமான வேடங்களில் நடித்திருப்பதோடு, தங்களது நடிப்பால் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்கள். ஹீரோ பிரகாஷ் சந்திரா ரொம்ப எளிமையான தோற்றத்தோடு, எளிமையாக நடித்திருக்கிறார். தனது அண்ணனை கொலை செய்தவரை விரட்டி பிடித்தாலும், அவரிடம் ஆக்ரோஷமாக வசனம் பேசாமல், ரொம்ப அமைதியாக பேசும் இடம் ரொம்ப எதார்த்தமாக இருக்கிறது. ஹீரோவின் நண்பர் வேடத்தில் நடித்திருக்கும் ராஜலிங்கம், இரண்டாம் பாதியில் வில்லனாக மாறும்போது நடிப்பில் காட்டும் வித்தியாசமும், இறுதியில் ஹீரோவிடம் பிடிபடும்போது காட்டும் வெகுளித்தனமும் அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் கம் போட்டு ஒட்ட வைத்துவிடுகிறது.

 

ஹீரோயின் சுனுலட்சுமிக்கு டூயட், ரொமான்ஸ் போன்றவைகள் பெரிய அளவில் இல்லை என்றாலும், ஒரு கதாபாத்திரமாக அவரும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். அவரைக் காட்டிலும் அவருக்கு அப்பாவாக நடித்திருக்கும் அந்த நடிகரும், அவரது மதுபோதை பர்பாமன்ஸும், சஸ்பெண்ஸ் திரைக்கதையில் பெரிய ரிலாக்ஸ்சேசனாக அமைந்திருக்கிறது. 

 

பேச்சிலும், நடிப்பிலும் அப்படி ஒரு நல்லத்தனத்தைக் காட்டும் கவிஞர் நந்தலாலா, ஹீரோவின் அண்ணனாக நடித்தவர் என்று படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் சதீஷ் தாயன்பனின் இசையில் இடம்பெற்ற ஒரு பாடல் திரைக்கதைக்கு வேகத்தடையாக இருந்தாலும், அவரது பின்னணி இசை படத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கான கியராக இருக்கிறது. ஷேகர் ராமின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் இயல்பாக இருப்பதோடு, காட்சிகள் அனைத்தும் லைவ் லொக்கேஷனில் படமாக்கப்பட்டிருக்கிறது. இயக்குநரின் சுவாரஸ்யமான திரைக்கதைக்கு விறுவிறுப்பையும், எதிர்ப்பார்ப்பையும் கொடுத்து படத்தை கச்சிதமாக செதுக்கியிருக்கிறது எடிட்டர் சுரேஷ் அர்ஸின் கத்திரி.

 

ஒரு வீட்டில் பணம் திருடு போகிறது. அதனை மையமாக வைத்து இயக்குநர் ஆர்.சுப்பிரமணியன் அமைத்திருக்கும் திரைக்கதையும், காட்சிகளை வடிவமைத்த விதமும் ‘சாவி’ யை சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் க்ரைம் படமாக மாற்றியிருப்பதோடு, அதை எப்படி கொடுத்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதில் இயக்குநர் ரொம்ப தெளிவாக இருந்திருக்கிறார். நடிகர்களின் அளவான நடிப்பு, சுருக்கமான காட்சிகள் என்று தான் சொல்ல வந்ததை ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், திரைக்கதையால் ரசிகர்களிடம் சபாஷ் வாங்கி, திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த சின்ன படங்களின் பட்டியலில் இந்த ‘சாவி’ க்கும் ஒரு இடம் உண்டு.

 

ஜெ.சுகுமார்

Recent Gallery