Latest News :

’ஹனு-மான்’ திரைப்பட விமர்சனம்

c4ff9ea47ceb38df4f116ddda4eb645b.jpg

Casting : Teja Sajja, Amritha Aiyer, Vinay Rai, Raj Deepak Shetty, Vennela Kishore, Samuthirakani, Varalakshmi Sarathkumar

Directed By : Prasanth Varma

Music By : Anudeep Dev, GowraHari, Krishna Saurabh

Produced By : Primeshow Entertainment - Niranjan Reddy

 

நாயகன் தேஜா சஜ்ஜாவுக்கு ஹனுமானின் ரத்த துளியால் உருவான சக்தி வாய்ந்த கல் ஒன்று கிடைக்கிறது. அதன் மூலம் மாபெரும் பலசாலியாக உருவெடுப்பதோடு, அதன் மூலம் ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறார். தேஜா சஜ்ஜாவின் சக்தி பற்றி தெரிந்துக்கொள்ளும் வில்லன் வினய், அவரிடம் இருக்கும் சக்தியை பறிப்பதற்காக அவரை தேடி வருகிறார். அவர் நினைத்தது நடந்ததா?, தேஜா சஜ்ஜாவிடம் ஹனுமானின் சக்திவாய்ந்த கல் கிடைத்தது ஏன்? போன்ற கேள்விகளுக்கான பதிலை ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி ஜானரில் சொல்வது தான் ‘ஹனு-மான்’.

 

நாயகனாக நடித்திருக்கும் தேஜா சஜ்ஜா, துறுதுறு நடிப்பால் ஹனுமந்த் என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். தனக்கு கிடைத்த திடீர் சக்தி மூலம் அவர் செய்யும் சாகசங்கள் அனைத்தையும் தெலுங்கு ஹீரோக்கள் படங்களில் செய்திருப்பதை சுட்டிக்காட்டுபவர் இறுதியாக பாலய்யா போல் ரயிலை விரலால் நிறுத்துவதற்காக கிளம்பும் காட்சியில் ஒட்டு மொத்த திரையரங்கே சிரிப்பு சத்தத்தால் அதிர்கிறது. காமெடி கலந்த நடிப்பில் சிறுவர்களையும் கவரும் தேஜா, காதல் காட்சி, செண்டிமெண்ட் காட்சி ஆகியவற்றிலும் அளவாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் அமிர்தா ஐயர், ஹீரோ செய்ய வேண்டிய விசயங்களை செய்து அதிரடி காட்டுகிறார். ஹீரோவுக்கு சக்தி வந்ததும் வழக்கம் பாடல் காட்சிகளிலும், சில சண்டைக்காட்சிகளிலும் தலைக்காட்ட தொடங்குகிறார்.

 

நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் நிலை இப்படி ஆகிவிட்டதே!, என்று கவலைப்படும் அளவுக்கு அவரது வேடம் சாதாரனமாக பயணித்தாலும், திடீரென்று தம்பியை காப்பாற்றுவதற்காக அதிரடியில் இறங்கி அமர்க்களப்படுத்துகிறார். ஆனால், அவரது அமர்க்களம் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்கப்படுவது பெரும் சோகம்.

 

வில்லனாக நடித்திருக்கும் வினய் ராய், சூப்பர் மேன் ஆகப்போகிறேன் என்று ஆசைப்பட்டு இறுதியில் சூப்பர் வில்லனாக உருவெடுக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி ஸ்டைலிஷாக இருப்பவர், நடிப்பையும் ஸ்டைலிஷாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

வெண்ணிலா கிஷோரின் காமெடி காட்சிகள் குறைவு என்றாலும் அவர் வரும் காட்சிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. குருவி கூடு போன்ற தலை முடியுடன் வரும் நடிகரின் காட்சிகளும் சிரிக்க வைக்கிறது. சமுத்திரக்கனியின் வேடம் திரைக்கதையின் பலத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் தாசரதி சிவேந்திரனின் ஒளிப்பதிவு காட்சிகளை பிரமாண்டமாகவும், கலர்புல்லாகவும் காட்டியிருக்கிறது. எது கிராபிக்ஸ்,  எது நிஜம் என்று தெரியாவதாறு பல காட்சிகள் கையாளப்பட்டுள்ளது.

 

இசையமைப்பாளர்கள் ஹனுதீப் தேவ், கெளரஹரி, கிருஷ்ணா செளரப் ஆகியோரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளில் இருக்கும் பில்டப்புகளை பல மடங்கு அதிகரித்து ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

 

ஆன்மீகம் பேசும் படம் என்றாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பிரசாந்த் வர்மா மற்றும் ஸ்கிரிப்ட்ஸ்வில்லே கதை எழுதியுள்ளனர்.

 

ஆரம்பத்தில் கமர்ஷியல் படமாக தொடங்கி பிறகு ஃபேண்டஸி படமாக உருமாறி இறுதியில் ஆன்மீகப் படமாக முடிவடையும் விதத்தில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் வர்மா, கமர்ஷியல் பட விரும்பிகளுக்கான அம்சங்களையும், சிறுவர்களுக்கு பிடிக்கும் அம்சங்களையும் அளவாக கையாண்டு, அதை சரியான முறையில் ஆன்மீகத்தோடு சேர்த்து கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஹீரோவுக்கு போட்டியாக குரங்கு ஒன்று பேசிக்கொண்டு வலம் வரும் காட்சிகளை சிறுவர்கள் கொண்டாடி தீர்ப்பது உறுதி.

 

கதை நடக்கும் கிராமத்தை கிராபிக்ஸ் மூலம் வடிவமைத்திருக்கும் விதம், நாயகனுக்கு சக்தி கிடைத்த பிறகு அவர் மூலம் நிகழும் சாகசங்கள், வில்லன் வினயின் சூப்பர் மேன் பவர் மற்றும் அதற்கு அவர் பயன்படுத்தும் அறிவியல்  கண்டுபிடிப்புகள் போன்றவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதோடு, எந்த இடத்திலும் திரைக்கதை தொய்வில்லாமல் நகர்வதற்கு கைகொடுத்திருக்கிறது.

 

ஆன்மீக படமாக இருந்தாலும், அதை கையாண்ட விதம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்தவையாக இருப்பதால் இந்த ‘ஹனு-மான்’-னை அனைவரும் கொண்டாடுவார்கள்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery