Latest News :

’முடக்கறுத்தான்’ திரைப்பட விமர்சனம்

4019fd40165fc017569f67d04866654f.jpg

Casting : Dr.K.Veerababu, Mahana, Super Subbarayan, Mayilsamy, Kadhal Sukumar, Sams, Ambani Sankar, Venkal Rao

Directed By : Dr.K.Veerababu

Music By : Sirpi

Produced By : Vayal Movies

 

நாயகன் டாக்டர் வீரபாபு, மூலிகை வியாபாரம் செய்து வருவதோடு, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பராமரித்து வருகிறார். அவருக்கும் நாயகி மஹானாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்காக புத்தாடை வாங்குவற்கு சென்னை செல்லும் டாக்டர் வீரபாபு, காணாமல் போன தனது உறவினரின் குழந்தையை தேடும் முயற்சியில் இறங்குகிறார். அப்போது குழந்தை கடத்தல் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பதை கண்டுபிடிக்கும் டாக்டர் வீரபாபு, அவர்களை அழித்து அவர்களிடம் இருக்கும் குழந்தைகளை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். அதை அவர் எப்படி செய்கிறார், குழந்தை கடத்தல் பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் எப்படி இயங்குகிறது?, கடத்தப்படும் குழந்தைகளின் நில்லை என்ன? என்பதை கமர்ஷியலாக சொல்வது தான் ‘முடக்கறுத்தான்’ படத்தின் கதை.

 

கொரோனா பரவலின் போது மூலிகை வைத்தியம் மூலம் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றி ரியல் ஹீரோவான டாக்டர் கே.வீரபாபுக்கு, ரீல் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வந்தது தப்பில்லை. ஆனால், நிஜ வாழ்க்கையில் இருக்கும் அவரது ஹீரோ இமேஜை கெடுத்துக்கொள்ளும் வகையில், சினிமா ஹீரோவாக நடித்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்தது தவறில்லை, தனக்கு எது வரும், தான் எப்படி இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள், என்பதை அறிந்து அதற்கு ஏற்ற ஒரு வேடத்தில் ஹீரோவாக நடித்திருந்தால் வீரபாபுவை ரீல் ஹீரோவாகவும் மக்கள் கொண்டாடியிருப்பார்கள். 

 

நாயகியாக நடித்திருக்கும் மஹானா ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைக்காட்டுகிறார். வில்லனாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன், இந்த வயதில் ஒரு ஸ்டண்ட் கலைஞரைப் போல் டூப் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடித்திருப்பது வியக்க வைக்கிறது. சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மயில்சாமி வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது.

 

சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் ஆகியோரது கூட்டணி காமெடி சில கடியாக இருந்தாலும், சில சிரிப்பு வெடியாகவும் இருக்கிறது.

 

அருள் செல்வனின் ஒளிப்பதிவு மிக சாதாரணமாக இருக்கிறது. படத்திற்கு டிஐ செய்தார்களா? என்ற கேள்வி எழும் அளவுக்கு காட்சிகளின் தரம் இருக்கிறது. சிற்பியின் இசையில் பழநி பாரதியின் வரிகளில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் கே.வீரபாபு தான் எழுதி இயக்கியிருக்கிறார். குழந்தை கடத்தல் என்பது காவல்துறைக்கு மிக சவாலான ஒன்றாகும். 7 நிமிடத்திற்கு ஒரு குழந்தை நம் நாட்டில் கடத்தப்பட்டு வருகிறது, என்று புள்ளி விவரம் சொல்கிறது. அப்படி கடத்தப்படும் குழந்தைகளின் நிலை என்ன?, கடத்தப்படும் குழந்தைகள் மீட்கப்படுகிறார்களா?, போன்ற விசயங்களை காட்சி மொழியில் அல்லாமல் வசனம் மூலமாக சொல்லியிருக்கும் இயக்குநர் டாக்டர் கே.வீரபாபு, சொல்லப்பட வேண்டிய ஒரு விசயத்தை கமர்ஷியலாக சொல்ல முயற்சி அதில் பெரிய சறுக்கலை சந்தித்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ”அறுவை சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி மரணமடைந்து விட்டார்”, என்பது போல் ”நல்ல மெசஜ், ஆனால் அதை சொல்கிற விதம் மக்களை கொலையா கொள்ளுதே”, என்று புலம்ப வைத்துவிட்டது இந்த ‘முடக்கறுத்தான்’.

 

ரேட்டிங் 2/5

Recent Gallery