Casting : Yogi Babu, Motta Rajendran, Mahesh, Bala Saravanan, Sendraayan, Marimuthu, Namo Narayanan, Ashwin, Sathya, Seeniyamma, Vinoth Thangaraju, Sinthalapatti Sugi, Raja Vetri Prabhu
Directed By : Dennis Manjunath
Music By : K.S. Manoj
Produced By : Aravind Vellaipandian, Anburasu Ganesan
விலை மதிப்பில்லாத கிரீடம் ஒன்றை ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்டிப்பாட்டில் வைத்து தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வருகிறார்கள். நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஊர் கோவில் திருவிழாவில் மட்டும் அந்த கிரீடம் மக்களிடம் காண்பிக்கப்படும். அந்த வகையில், ராஜ குடும்பத்தின் தற்போதையை தலைமுறையான மாரிமுத்து அந்த கிரீடத்தை பாதுகாத்து வருகிறார்.
இந்த நிலையில், மாரிமுத்துவிடம் இருக்கும் கிரீடம் போலியானது என்றும், ஒரிஜினல் கிரீடம் அந்த ஊரில் உள்ள பழைய கிணற்றில் இருப்பதும், தெரிய வருகிறது. ஆனால், அந்த உண்மை தெரிந்த பிறகும், ராஜ குடும்பம் மற்றும் அந்த ஊர் மக்கள் கிணற்றில் இறங்கி கிரீடத்தை எடுக்க பயப்படுகிறார்கள். அந்த கிரீடம் எப்படி கிணற்றுக்குள் போனது?, கிணற்றின் மீதான ஊர் மக்களின் பயத்துக்கு என்ன காரணம்?, கிணற்றில் இருக்கும் கிரீடம் எடுக்கப்பட்டதா? இல்லையா?, என்பது தான் ‘தூக்குதுரை’ படத்தின் மீதிக்கதை.
குறைவான காட்சிகளில் வந்தாலும் யோகி பாபுவை மையக்கதாபாத்திரமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதற்காகவே அவருக்கு இனியாவை ஜோடியாக போட்டு அவரையும் ஒரு சில காட்சிகளில் தலைகாட்ட வைத்திருக்கிறார்கள்.
யோகி பாபு வழக்கமான தனது நக்கலான வசனங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார். ஆனால், அவர் சில காட்சிகளில் மட்டுமே வருவதால் மற்ற காட்சிகள் கடுப்படிக்க செய்கிறது. யோகி பாபு இல்லாத குறை மக்களுக்கு தெரிய கூடாது என்பதற்காக, பாலசரவணன், மகேஷ், செண்ட்ராயன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் கூட்டணி கடுமையாக உழைத்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.
ரவிவர்மாவின் ஒளிப்பதிவும், கே.எஸ்.மனோஜின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் தீபக் எஸ்.துவாரகனாத், நகைச்சுவையான சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படத்தை எப்படி நகர்த்தி செல்வது என்று தெரியாமல் திணறியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் டெனிஸ் மஞ்சுநாத், முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை வடிவமைத்திருந்தாலும், படத்தின் இறுதியில் குட்டி மெசஜை நகைச்சுவை பாணியில் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.
யோகி பாபுவின் தேதிகள் குறைவாக கிடைத்தாலும், அவரை முதன்மைப்படுத்தி ஒரு படத்தை இயக்க முயற்சித்திருக்கும் இக்குநர் டெனிஸ் மஞ்சுநாத், அதற்கு ஏற்ப எழுதிய கதை மற்றும் திரைக்கதைக்காக அவரை பாராட்டினாலும், யோகி பாபுவுக்கு கொடுத்த முக்கியத்துவம் போல், திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் படமும் பாராட்டு பெற்றிருக்கும்.
மொத்தத்தில், இந்த ‘தூக்குதுரை’ ரசிகர்களிடம் ஒட்டவில்லை.
ரேட்டிங் 2.5/5