Latest News :

’விதி மதி உல்டா’ விமர்சனம்

f2fcbd0332ee7886b95cacd0139a0296.jpg

Casting : Rameez Raja, Janani Iyer, Daniel Balaji, Sendrayan, Karunakaran

Directed By : Vijai Balaji

Music By : Ashwin Vinayagamoorthy

Produced By : Rite Media Works Pvt ltd

 

எதிர்காலத்தில் நடக்கப் போவதை நாம் அறிந்தால், நம் வாழ்க்கை எப்படி இருக்கும், என்ற கற்பனையை காமெடி பிளஸ் சஸ்பென்ஸ் கலந்து அறிமுக இயக்குநர் விஜய் பாலாஜி, கொடுத்திருக்கும் இந்த ‘விதி மதி உல்டா’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

படித்துவிட்டு வேலையில்லாமல் வெட்டியாக இருக்கும் ஹீரோ ரமீஸ் ராஜா, எப்படியாவது ஒரு பெண்ணையாவது காதலித்துவிட வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்கிறார். ஹீரோயின் ஜனனி ஐயரை பார்த்ததும் தனது லட்சியத்தை நோக்கி நகர தொடங்கும் அவர், பல நாட்கள் பாலோவுக்கு பிறகு ஜனனி ஐயரின் நட்பை பெறுவதோடு, காதலிக்கும் அளவுக்கு நெருக்கமாகிவிடுகிறார். இதற்கிடையே, ஹீரோ ரமீஸை ஒரு கும்பல் கடத்த, ஹீரோயின் ஜனனியை பெரிய ரவுடியான டேனியல் பாலாஜியின் தம்பி கடத்துகிறார். இவர்களை அடைத்து வைக்கப்பட்ட இடத்தில், தான் வைத்திருந்த கொள்ளையடிக்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள நகைகளை எடுக்க கருணாகரன் வருகிறார்.

 

அப்போது அங்கிருந்து ரமீஸும், ஜனனியும் தப்பிக்கும் போது ஏற்படும் குளறுபடியால், டேனியல் பாலாஜியின் தம்பி சுடப்பட்டு இறந்து போக, அந்த கோபத்தில் டேனியல் பாலாஜி ரமீஸின் அப்பா, அம்மா, மற்றும் ஜனனி ஐயரை கொலை செய்துவிடுகிறார். ஆனால், இது நிஜத்தில் அல்ல என்பது தான் படத்தின் ட்விஸ்ட். ஆம், இப்படி ஒரு கனவை ஹீரோ ரமீஸ் காணுகிறார்.

 

கனவில் ரமீஸ் ராஜா சந்தித்த மனிதர்கள் நிஜத்திலும் வர, கனவில் நடந்த சம்பவங்களும் அப்படியே நடக்கிறது. இதனால், எங்கே கனவில் கண்டது போல தனது அப்பா, அம்மா கொலை செய்யப்படுவார்களோ என்று அச்சமடையும் ரமீஸ், அதை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். அதன்படி, தன்னையும், ஜனனியையும் கடத்தினால் தானே ரவுடியின் தம்பி கொலை செய்யப்படுவார், அதை தடுத்தி நிறுத்திவிட்டால் அனைத்தும் தடுக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தில், ரமீஸ் ராஜா அதற்கான முயற்சிகளில் ஈடுபடும் போது, அனைத்தும் உல்டாவாக நடக்க, அதனால் ஏற்படும் விளைவுகளும், அவை ரமீஸுக்கு சாதகமாக அமைந்ததா அல்லது பாதகமாக அமைந்ததா என்பது தான் ‘விதி மதி உல்டா’ படத்தின் கதையாகும்.

 

முதல் பாதி முழுவதும் காதல் மற்றும் கடத்தல் என்று படத்தை காமெடியாக நகர்த்திய இயக்குநர், இரண்டாம் பாதியில் ரமீஸின் கனவு நிஜமாகிவிடுமோ! என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக்கொள்ளும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

 

‘டார்லிங் 2’ படத்தில் அறிமுகமான ரமீஸ் ராஜா, இப்படத்தில் சோலா ஹீரோவாக களம் இறங்கியிருந்தாலும், கதைக்கு ஏற்ற ஹீரோவாகவே படம் முழுவதும் வலம் வருகிறார். வசனம் பேசும் போது மட்டும், ஒருவித தயக்கத்துடனே பேசும் ரமீஸ், அந்த இடத்தை கொஞ்சம் சரிப்படுத்திக் கொண்டால் போதும் காதல் கம் ஆக்‌ஷன் படங்களுக்கான ஹீரோ பட்டியலில் இடம்பிடித்துவிடுவார்.

 

வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவரும் ஜனனி, தனது பெரிய கண்ணாலும், அந்த கண் இருக்கும் முகத்தாலும் நம்மை வசிகரிப்பதோடு கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

கடத்தல்காரர்களாக வரும் செண்ட்ராயன் மற்றும் அவர்களது நண்பர்கள் படத்தின் முதல் பாதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதோடு ரசிகர்களையும் ஹாப்பியாக வைத்துக்கொள்கிறார்கள். இரண்டாம் பாதியில் படம் சற்று சீரியஸாக நகர்ந்தாலும், செண்ட்ராயன் மற்றும் அவரது நண்பர்கள் சிரிப்புகாட்டுவதை தொடர்ந்துக்கொண்டே இருப்பது படத்திற்கு கூதல் பலமாக அமைந்துள்ளது.

 

அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையும், ஒளிப்பதிவாளரும் கதையில் இருந்து ரசிகர்கள் விலகாத வகையில் பயணிக்க, எடிட்டரின் கத்திரி எந்தவித சிக்கலும் இன்றி ரசிகர்களுக்கு படத்தை புரிய வைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம்.

 

முதல் பாதியில் இயக்குநர் காட்டிய காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் இரண்டாம் பாதியில் அதே சூழலில் காண்பித்தாலும், அதை வித்தியாசமாக காட்டியவர், ரசிகர்களுக்கு எவ்வித குழப்பமும் ஏற்படாத வகையில் ரொம்ப தெளிவாகவும் காட்டியிருக்கிறார்.

 

முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டுள்ள இயக்குநர் விஜய் பாலாஜி, அதற்கான திரைக்கதை அமைப்பிலும், காட்சிகள் அமைப்பிலும் தனது சாமர்த்தியத்தைக் காட்டி அப்ளாஸ் வாங்குகிறார்.

 

முதல் பாதி சாதாரண காதல் கதை, ஆள் கடத்தல் என்று நகர்வதால் அதில் காமெடி எசன்ஸை கலந்து ரசிகர்களை குஷிப்படுத்தும் இயக்குநர் இரண்டாம் பாதியில், சஸ்பென்ஸான காட்சிகளோடு, அடுத்தது என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்போடு ரசிகர்களை சீட் நுணியில் அமர வைப்பவர், அங்கேயும் அவ்வபோது லேசாக காமெடி எசன்ஸை மிக்ஸி பண்ணி, முழு படத்தையும் பர்பெக்ட்டாக கொடுத்திருக்கிறார். அதிலும், கிளைமாக்ஸ் நெருங்கும் போது கனவு நிஜமாகவிடுவது போன்ற ஒரு சூழலை உருவாக்கி, அதில் இயக்குநர் வைத்த ட்வீஸ்ட் செம.

 

மொத்தத்தில், இந்த ‘விதி மதி உல்டா’ வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களை வியப்படைய வைக்கும் அளவுக்கு ஒரு எண்டர்டெயினராக உள்ளது.

 

ஜெ.சுகுமார்

Recent Gallery