Latest News :

’லோக்கல் சரக்கு’ திரைப்பட விமர்சனம்

7d4cc2b7fcf0d631d65234db10831a0f.jpg

Casting : Dinesh Master, Upasana RC, Yogi Babu, Sendrayan, Imman Annachi, Vinodhini, Singam Puli

Directed By : SP Rajkumar

Music By : VR Swaminathan Rajesh

Produced By : K.Vinod Kumar

 

மதுவுக்கு அடிமையான நாயகன் தினேஷ், வேலை ஏதும் செய்யாமல் எந்த நேரமும் மது குடிப்பதையே வேலையாக வைத்திருக்கிறார். சினிமாவில் துணை நடிகையாக பணியாற்றும் நாயகி உபாசனா தினேஷ் வீட்டுக்கு எதிரே குடிவருகிறார். குடிப்பதற்காக உபாசனாவிடம் தினேஷ் அடிக்கடி பணம் கேட்க, அவரும் கொடுப்பதோடு, மது பழக்கத்தை விட்டு விடுமாறு அட்வைஸ் செய்கிறார்.

 

இந்த நிலையில், தினேஷுக்கும், உபாசனாவுக்கு திருமணான உண்மை தெரிய வருகிறது. ஆனால், எந்த நேரமும் மது போதையில் இருக்கும் தினேஷுக்கு தனது திருமணம் பற்றி எதுவும் நினைவில் இல்லாத நிலையில், அவர்களின் திருமணம் எப்படி நடந்தது? என்று நாயகி உபாசனா சொல்வதோடு, மது பழக்கத்தில் இருந்து தினேஷ் திருந்திவிடுவார் என்ற நம்பிக்கையில் அவருடன் சேர்ந்து வாழ தொடங்குகிறார்.  தினேஷ் மது பழக்கத்தை தொடர்வதோடு, மதுவுக்காக எதையும் செய்யும் நிலைக்கு ஆளாக, இதனால் அவர்களின் இல்லற வாழ்வில் மிகப்பெரிய பிரச்சனை வருகிறது. அது என்ன?, அதில் இருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா?, என்பதை நகைச்சுவையாகவும், எச்சரிக்கையாகவும் சொல்வது தான் ‘லோக்கல் சரக்கு’.

 

நாயகனாக நடித்திருக்கும் பிரபல நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருக்கு நடிப்பு புதிதல்ல என்றாலும், பல இடங்களில் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன்கள் கொடுத்து சொதப்பியிருக்கிறார். மது குடிக்கும் பாணியில் நேர்த்தியை காட்டியிருப்பவர், தனக்கு திருமணமான விசயத்தை கேட்டு எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருப்பது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்கிறது. அப்பாவியான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துபவர், இறுதிக் காட்சியின் போது தனது மனைவிக்காக வில்லனிடம் கெஞ்சும் காட்சியில் மட்டும் நடிப்பில் கவனம் ஈர்த்திருக்கிறார்.

 

பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் நாயகி உபாசனா ஆர்.சி, பல இடங்களில் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவர்களுக்கு தைரியம் கொடுக்கும் வகையிலும் நடித்திருக்கிறார். அதிலும், கிளைமாக்ஸ் காட்சியில் பிரச்சனையை அவர் எதிர்கொள்ளும் விதம் கைதட்டல் பெறுகிறது.

 

தினேஷின் நண்பராக நடித்திருக்கும் யோகி பாபு, நாயகியை ஒருதலையாக காதலிக்கும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. 

 

யோகி பாபு இல்லாத இடங்களை மிக சிறப்பாக நிரப்பியிருக்கும் சாம்ஸ், தனது காமெடி மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். அதிலும், தினேஷ் வைத்திருந்த ராவான சரக்கை குடித்துவிட்டு அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள் சிரிப்பு சத்தத்தில் திரையரங்கையே அதிர செய்கிறது.

 

தினேஷுக்கு தங்கையாக நடித்திருக்கும் நடிகை, செண்ட்ராயன், இமான் அண்ணாச்சி, வினோதினி, சிங்கம் புலி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் திரைக்கதைக்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கே.எஸ்.பழநினியின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு, காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறது. 

 

இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதனின் இசையில், விவேகாவின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். காதல் பாடலை திரும்ப திரும்ப கேட்கும் மெலோடியாக கொடுத்திருப்பவர், குத்து பாடலை ஆட்டம் போட வைக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார். பின்னணி இசை காட்சிகளின் உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார், தற்போதைய சமூகத்தில் சொல்லப்பட வேண்டிய ஒரு கருத்தை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படியான கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார்.

 

’குடி குடியை கெடுக்கும்’ என்ற வாசகம் மது பாட்டில்களில் இடம் பெற்றிருந்தாலும்அதை குடிப்பவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், அந்த வாசகம் ஒருநாள் நிச்சயம் உண்மையாகும் என்பதை மது பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு எச்சரிக்கையாக சொல்லியிருக்கும் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாட்டையடியும் கொடுத்திருக்கிறார்.

 

குடும்பத்தோடு பார்க்க கூடிய விதத்தில் காட்சிகள் மற்றும் வசனங்களை கையாண்டிருக்கும் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார், முழுக்க முழுக்க கமர்ஷியல் பாணியில் கதையை நகர்த்தி சென்றாலும், சமூக கருத்துள்ள திரைப்படமாக மட்டும் இன்றி, பாலியல் ரீதியிலான மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் பெண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை கொடுத்ததற்காக, படத்தில் இருக்கும் சில குறைகளை மறந்து படத்தை தாராளமாக பாராட்டலாம்.

 

மொத்தத்தில், இந்த ‘லோக்கல் சரக்கு’ டாப் கிளாஸ்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery