Latest News :

’மறக்குமா நெஞ்சம்’ திரைப்பட விமர்சனம்

e1be189bcaf13498a439110942eaae09.jpg

Casting : Rakshan, Malina, Dheena, Rahul, Swetha Venugopal, Muthazhagan, Melvin Dennies, Munishkanth,Arun Kurian, Akila, Ashika Kader, Natalie Lourds, Vishvath

Directed By : Raako.Yoagandran

Music By : Sachin Warrier

Produced By : Raghu Yelluru - Ramesh Panchagnula - Janardhan Chowdary - Raako.Yoagandran

 

கன்னியாகுமரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரக்‌ஷன், தனது வகுப்பு மாணவி மலினாவை காதலிக்கிறார். கடைசிவரை தனது காதலை சொல்லாமல் பள்ளி படிப்பை முடிப்பவர், தன் முதல் காதல் நினைவுகளோடு வாழ்வதோடு, தன் காதலியை மீண்டும் பார்க்கும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அந்த பள்ளிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், 2008 ஆம் ஆண்டு அந்த பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி செல்லாது என்றும், அப்போது தேர்வு எழுதிய மாணவர்கள் தற்போது மீண்டும் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும், என்றும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

 

10 வருடங்களுக்கு முன்னாள் எழுதிய 12ம் வகுப்பு தேர்வை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் மாணவர்கள், வேறு வழி இல்லாமல் வருத்தத்தோடு மீண்டும் அந்த பள்ளிக்கு வர, ரக்‌ஷன் தனது காதலை புதுப்பிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு என்ற மகிழ்ச்சியில் மீண்டும் பள்ளிக்கு வருகிறார். இந்த முறை எப்படியாவது தனது காதலை மலினாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கும் ரக்‌ஷன் சொன்னாரா?, அவரது காதலை மலினா ஏற்றுக்கொண்டாரா?, இல்லையா? என்பதை பள்ளி பருவ முதல் காதலை நினைவுப்படுத்தும் விதமாக சொல்வது தான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

 

நாயகனாக நடித்திருக்கும் ரக்‌ஷன் பள்ளி பருவத்திலும், இளைஞர் பருவத்திலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார். பள்ளி பருவத்தில் வரும் காதல், பயம், வெட்கம் என அனைத்துவிதமான உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் மலினாவுக்கு அதிகம் வேலை இல்லை என்றாலும், பார்ப்பதற்கு அழகாக இருப்பவர், தனக்கு கொடுத்த வேலையை மிக அழகாக செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.

 

பள்ளி பருவ நகைச்சுவைக் காட்சிகளை மிக இயல்பாக செய்து படம் கலகலப்பாக நகர்வதற்கு பக்கபலமாக தீனாவின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் காமெடி வேடமாக தெரிந்தாலும், படம் முடியும் பாராட்டும்படியான குணச்சித்திர நடிகராக உருவெடுக்கும் பிராங் ஸ்டார் ராகுலின் வேடம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது.

 

பள்ளி மாணவ, மாணவிகளாக நடித்திருக்கும் ஸ்வேதா, முத்தழகன், மெல்வின் டெனிஸ், அருண் குரியன், அஷிகா காதர், விஷ்வாத், நட்டாலியா ஆகியோர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.

 

பி.டி மாஸ்டராக நடித்திருக்கும் முனீஷ்காந்த் மற்றும் ஆசிரியையாக நடித்திருக்கும் அகிலா வரும் காட்சிகள் குறைவு என்றாலும் மனதில் நிற்கும்படி இருக்கிறது.

 

கன்னியாகுமரியின் அழகை தனது கேமரா கண்கள் மூலம் பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமி, அழகான லொக்கேஷன்களுக்காக அதிகம் மெனக்கெட்டிருப்பது படம் முழுவதும் தெரிகிறது. 

 

இசையமைப்பாளர் சச்சின் வாரியரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசையும் அதிகம் சத்தம் இல்லாமல் பயணித்திருப்பது படத்திற்கு பலம்.

 

காதல் என்றால் என்ன? என்று தெரியாத பள்ளி பருவத்தில் வரும் முதல் காதல், நம் மூச்சு உள்ளவரை நம் நினைவில் இருக்கும், என்பதை அனைவருடைய முதல் காதல் நினைவுகளை தட்டி எழுப்பும் வகையில் கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் ராகோ யோகேந்திரன், 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

பள்ளி பருவ கதையில் சொல்லப்படும் அத்தனை விசயங்களையும் மிக தெளிவாக சொல்லியிருப்பவர் காதல் மட்டும் இன்றி மாணவர்களின் வாழ்க்கையை, படம் பார்க்கும் 90ஸ் கிட்ஸ்கள் தங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் காட்சிகளை கையாண்டிருப்பது படத்திற்கு பலம்.

 

மொத்தத்தில், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ நிறைவு.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery