Casting : Rajinikanth, Vishnu Vishal, Vikranth, Anandhika Sanilkumar, Senthil, Thambi Ramaiah, Jeevitha, Moonar Ramesh
Directed By : Aishwarya Rajinikanth
Music By : AR Rahman
Produced By : Lyca Productions - Subaskaran
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மூரார்பாத் என்ற கிராமத்தில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இவர்களை பிளவுப்படுத்த நினைப்பவர்கள், அதற்காக அந்த ஊர் இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு பிடித்த கிரிக்கெட் விளையாட்டை பயன்படுத்தி ஊரில் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனால், இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டு பிரிந்துபோக, பிறகு அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா?, என்பதே படத்தின் மீதிக்கதை.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ரஜினிகாந்த், தனது மகளுக்காக தான் இந்த படத்தில் நடித்தார் என்பது அனைவரும் அறிந்தது தான், அதற்காக தனது மேக்கப்பில் கூட கவனம் செலுத்தாமல் நடித்திருக்கிறார். அவர் நாயகனாக நடிக்கும் படங்களில், தந்தை வேடத்தில் நடித்திருந்தாலும், அவரை திரையில் சிறப்பாக காட்டுவதற்காக படக்குழு அதிகம் மெனக்கெடும். ஆனால், இந்த படத்தில் ரஜினிக்கு என்ன ஆச்சு? என்று பார்வையாளர்கள் கவலைக்கொள்ளும் விதத்தில் அவருடைய தோற்றம் இருக்கிறது. இருந்தாலும், அவர் வரும் காட்சிகளை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள். மதத்தின் மூலம் மக்களிடம் பிரிவிணையை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் ரஜினிகாந்த் பேசும் வசனங்கள் கைதட்டல் பெறுகிறது.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். இருவம் கிரிக்கெட் விளையாடக் கூடியவர்கள் என்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டை தாண்டி இருவருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும், விக்ராந்தின் உணர்வுப்பூர்வமான நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது. விஷ்ணு விஷாலுக்கு அதிக வாய்ப்புகள் இருந்தாலும், சில இடங்களில் சரியாக நடிக்க தெரியாமல் தடுமாறியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனந்திகா சனில்குமாருக்கு பெரிய வேலை இல்லை, ஒரு பாடலுக்கும் சில காட்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். விஷ்ணு விஷாலின் அம்மாவாக நடித்திருக்கும் ஜீவிதா, செந்தில், தம்பி ராமையா, மூணார் ரமேஷ், விவேக் பிரசன்னா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார், என்று நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு மிக சாதாரணமாக இசை பயணிக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே மிக மிக சுமார் ரகம்.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி கிராமத்தையும், அங்கு நடக்கும் கோவில் திருவிழாவையும் இயல்பாக படமாக்கியிருப்பதோடு, விஷ்ணு விஷாலின் சண்டைக்காட்சியை வித்தியாசமாக படமாக்கியிருப்பது ரசிக்க வைக்கிறது.
தேவையில்லாத சில கதாபாத்திரங்களின் எக்ஸ்பிரஷன்களை அடிக்கடி காட்டி காட்சிகளின் நீளத்தை அதிகரித்திருப்பதை படத்தொகுப்பாளர் பி.பிரவின் பாஸ்கர் தவிர்த்திருக்கலாம்.
மதத்தை வைத்து மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் கூட்டத்தின் சூட்சியில் சிக்காமல் எப்போதுமே ஒற்றுமையாக இருக்க வேண்டும், என்ற கருத்தை வலியுறுத்தும் கதையில் சாதிய ஆதிக்கம் பற்றியும் பேசியிருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனை, இரண்டு தரப்பினருக்குமான மத கலவரமாக உருவெடுப்பது எப்படி? என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.
விஷ்ணு விஷால் - விக்ராந்த் இருவரின் அணிகளுக்கும் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியை காட்சிப்படுத்திய அளவுக்கு கூட, இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே நடக்கும் கலவரத்திற்கான காரணங்களை காட்சிப்படுத்தவில்லை. இதனால், பிளவுவாத அரசியல் என்பது வெறும் பேச்சாகவே இருக்கிறதே தவிர, பார்வையாளர்களின் மனதை தொடும் காட்சிகளாக இல்லை.
நடிகர்களின் தேர்வு படத்திற்கு பலமாக இருந்தாலும், தம்பி ராமையாவின் நடிப்புக்கு அளவுகோல் வைக்காமல் நடிக்க வைத்தது ரசிகர்களை எரிச்சலடைய வைக்கிறது. 1993-ல் நடக்கும் கதை என்பதால் அதற்கு ஏற்ப காட்சிகளை வடிவமைப்பதில் அதிகம் மெனக்கெட்டிருப்பதோடு, கதாபாத்திரங்களின் உடை உள்ளிட்ட விசயங்களை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்கள்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகிறவர்கள் மற்றும் பேசுபவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கும் வசனங்கள் கைதட்டல் பெறுவதோடு, மத அரசியல், சாதிய ஆதிக்கம் போன்றவற்றுக்கு சாட்டையடியாக அமைந்திருக்கிறது. ஆனால், இதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், பிரமாண்டமாகவும் காட்சி மொழியில் சொல்லியிருந்தால், படம் இந்திய சினிமாவில் மட்டும் இன்றி இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
மொத்தத்தில், ‘லால் சலாம்’ சாதிக்கவில்லை என்றாலும், ரசிகர்களை சோதிக்கவில்லை.
ரேட்டிங் 2.8/5