Casting : Jeyam Ravi, Keerthy Suresh, Anupama Barameshwaran, Samuthirakani, Azhagam Perumal, Ajay, Thulasi, Santhini
Directed By : Antony Bagyaraj
Music By : GV Prakash Kumar and Sham CS
Produced By : Sujatha Vijayakumar
கொலை குற்றவாளியான ஜெயம் ரவி, பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு இரண்டு வாரம் பரோலில் வெளியே வருகிறார். தாய் இல்லாத அவரது மகள் அவர் மீது கடும்போகத்தில் இருப்பதோடு, அவரை பார்க்கவே விரும்பாமல் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிடுகிறார்.
இதற்கிடையே, ஜெயம் ரவி சந்திக்கும் சில பெரும்புள்ளிகள் கொலை செய்யப்பட, அதற்கு அவர் தான் காரணம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி சுரேஷ் அவரை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த கொலைகளை தான் செய்யவில்லை என்று கூறும் ஜெயம் ரவி, அதற்கான சரியான ஆதரங்களை நீதிபதி முன்பு சமர்ப்பித்து தப்பித்துவிடுகிறார்.
ஜெயம் ரவி தான் கொலையாளி என்பதில் உறுதியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறார். இறுதியில் வெற்றி பெற்றது ஜெயம் ரவியா? அல்லது கீர்த்தி சுரேஷா?, ஜெயம் ரவி கொலை குற்றவாளியானது எப்படி?, அவரது மகள் அவரை வெறுப்பது ஏன்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை சுவாரஸ்யமாக சொல்வது தான் ‘சைரன்’.
பெப்பர் சால்ட் ஹேர் ஸ்டைல் மூலம் லுக்கில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் ஜெயம் ரவி, தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். அதிகம் பேசாமல் அமைதியாக வலம் வந்தாலும், பெரிய சம்பவம் இருக்கிறது, என்ற எதிர்பார்ப்பை படம் முழுவதும் கொடுத்திருக்கும் ஜெயம் ரவி, மகள் செண்டிமெண்ட் காட்சிகளில் ரசிகர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார். வசன உச்சரிப்பு மற்றும் நடிப்பு இரண்டிலும் புதிதாக தெரியும் ஜெயம் ரவி, பல வருட சிறை தண்டனை அனுபவிக்கும் கைதியின் மனநிலையை அனைத்து விசயங்களிலும் மிக இயல்பாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
பலம் வாய்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், கம்பீரத்தையும், திமிரையும் நடிப்பில் கொண்டு வர அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். அவருடைய பேச்சு, உடல் மொழி என அனைத்திலும் வித்தியாசத்தைக் காட்ட முயற்சித்திருந்தாலும் சில இடங்களில் அவர் குழந்தை முகம் அவரது திமிரையும், கம்பீரத்தையும் மறைத்துவிடுகிறது.
ஜெயம் ரவியின் மனைவியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், வரும் காட்சிகள் குறைவு என்றாலும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரி வேடம் சமுத்திரக்கனிக்கு புதிதல்ல என்றாலும், இதுவரை பேசாத வசனங்களை பேசி நடித்திருக்கிறார். காக்கி சட்டைப் போட்டுக்கொண்டு கருத்து பேசிய சமுத்திரக்கனி இதில், பேசும் வசனங்கள் அத்தனையும் தீயாக இருக்கிறது.
ஜெயம் ரவிக்கு நிழல் காவலராக வரும் யோகி பாபு, படம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கும் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஜெயம் ரவியுடனான அவரது புதிய கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.
வில்லன்களாக நடித்திருக்கும் அழகம்பெருமாள், அஜய், ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்த துளசி, தங்கையாக நடித்த சாந்தினி, மகளாக நடித்த சிறுமி என அனைத்து நட்சத்திரங்களும் அளவாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், திரைக்கதையோட்டத்திற்கும் பெரும் பலமாக பயணித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையை அதிகம் சத்தமின்றி அளவாக கையாண்டிருக்கும் ஷாம்.சி.எஸ், திரைக்கதையின் பரபரப்புக்கு எந்தவித பாதகம் இன்றி பணியாற்றி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் செல்வகுமார். எஸ்.கே காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். படத்தொகுப்பாளர் ரூபன் திரைக்கதையில் உள்ள திருப்பங்களை சரியான முறையில் தொகுத்து, படத்தை இறுதிவரை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.
பழிவாங்கும் கதை என்றாலும் அதை அப்பா - மகள் செண்டிமெண்ட், சமூக நீதி, சிறை கைதிகளின் மனப்போராட்டம் ஆகியவற்றை திரைக்கதையில் புகுத்தி, அதை கமர்ஷியலாக கையாண்டிருக்கும் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, பல திருப்பங்களை வைத்து சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார்.
படம் தொடங்கிய உடனே நம்மை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ், அடுத்தடுத்த காட்சிகளை திருப்பங்களோடு நகர்த்தி சென்று, இது வழக்கமான கதை என்பதையும் மறந்து படத்தை ஆர்வத்துடன் பார்க்க வைப்பதோடு, “ஒரு நல்லவனை நல்லவனாக நடிக்க வச்சிட்டீங்களே”, “சாதி இல்லனு சொல்றவன் என்ன சாதி என்று தேடாதீங்க” போன்ற வசனங்கள் மூலம் கவனம் ஈர்க்கிறார்.
கதை எதுவாக இருந்தாலும், திரைக்கதை மற்றும் காட்சிகளை விவரிக்கும் முறை தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதை மிக சரியாக புரிந்துக்கொண்டு கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ், ஜெயம் ரவி ரசிகர்களை மட்டும் இன்றி, குடும்ப ரசிகர்களையும் ஈர்ப்பதற்கான அம்சங்களை அளவாக கையாண்டு படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘சைரன்’ சத்தம் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும்.
ரேட்டிங் 4/5