Casting : Syed Majeed, Meghana Ellen, Viji Sekar, John Glady, Saranya Ravichandran, Ramesh Arumugam, Vinu Lawrence, Anand Kumar
Directed By : John Glady
Music By : Arun Raj
Produced By : V.Durai Raj
நாயகன் சையத் மஜித், படித்துவிட்டு வேலைக்கு போகாமல் புறா வளர்ப்பதில் ஈடுபாடு காட்டுவதோடு, புறா பந்தயமும் நடத்தி வருகிறார். ஊரில் பெரிய ரவுடியாக வலம் வரும் வினு லாரன்ஸும் புறா பந்தயம் நடத்துகிறார். புறா பந்தயத்தில் வினு லாரன்ஸ் செய்யும் மோசடியை சையத் மஜித் கண்டுபிடித்து தட்டிக்கேட்கிறார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட, அதனால் நாயகன் எப்படிப்பட்ட சிக்கல்களை எதிர்கொள்கிறார், என்பதை நாகர்கோவில் மக்களின் வாழ்வியலோடு சொல்வது தான் ‘பைரி’.
நாகர்கோவில் மக்களின் வாழ்வியலை, எந்தவித மாற்றமும் இன்றி மிக எதார்த்தமாக சொல்லியிருப்பதோடு, புறா பந்தயத்தின் பின்னனியை மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறது இந்த பைரி. பைரி என்றால் புறாக்களை வேட்டையாடும் ஒருவகை கழுகு இனமாம்.
நாயகனாக நடித்திருக்கும் சையத் மஜித்தின் நடிப்பில் குறையில்லை என்றாலும், சில காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சேகர், மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதம் மிரட்டலாக இருப்பதோடு, கவனம் ஈர்க்கும் வகையிலும் இருக்கிறது.
நாயகனின் நண்பர் வேடம் அசத்தல், அந்த வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ஜான் கிளாடி டிகராகவும் கவனிக்க வைத்திருக்கிறார். சுயம்பு என்ற வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வினு லாரன்ஸ், நாயகிகளாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன் என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும்படி இருக்கிறது.
ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவு நாகர்கோவில் அழகையும், அம்மக்களின் வாழ்வியலையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது. அருண் ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
இயக்குநர் ஜான் கிளாடி, தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு கச்சிதமாக திரைக்கதை அமைத்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். குறிப்பாக புறா பந்தயத்தை காட்சிப்படுத்திய விதம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. கிராபிக்ஸ் உதவியோடு புறா பந்தயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் மேக்கிங் வியக்க வைக்கிறது. அதேபோல், நடிகர்களில் பெரும்பாலனவர்கள் புதுமுகங்களாக இருந்தாலும், அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்வதுபோல் கையாண்டிருக்கிறார்.
நாகர்கோவில் மக்களை நடிக்க வைத்திருப்பது, அம்மக்களின் பேச்சு மற்றும் உடல் மொழி என அனைத்தும் படத்திற்கு பலமாக இருந்தாலும், சில வசனங்கள் புரியாதபடி இருக்கிறது. அந்த இடங்களில் இயக்குநர் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி, புறா பந்தயம் என்ற புதிய களத்தை, புதிய கோணத்தில், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் இயக்கியிருக்கும் இயக்குநர் ஜான் கிளாடிக்கு கோடம்பாக்கத்தில் பெரிய எதிர்காலம் உண்டு.
மொத்தத்தில், இந்த ‘பைரி’-யை பார்த்தவர்கள் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.
ரேட்டிங் 3.5/5