Casting : Shilpa Manjunath, Aarthi, Sendrayan, A.Venkatesh, Prem, Deepak Nambiar
Directed By : JSB Sathish
Music By : Kumaran Sivamani
Produced By : JSB Film Studios
நீச்சல் வீராங்கனையாக சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் நாயகி ஷில்பா மஞ்சுநாத்தால் அது முடியாமல் போகிறது. அதனால், சென்னையில் நீச்சல் பயிர்சியாளராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே அவர் தனது சொந்த ஊரான தென்காசிக்கு பெற்றோரை சந்திக்க செல்கிறார். அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஆர்த்தி, நீச்சல், வேகமாக சைக்கிள் ஓட்டுவது மற்றும் ஓடுவது என்று அனைத்திலும் திறமையானவராக இருக்கிறார்.
இதற்கிடையே, பெற்றோர் இல்லாத ஆர்த்திக்கு ஆதரவாக இருந்த அவரது பாட்டி காலமாகி விடுகிறார். இதனால், ஆர்த்தியை தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லும் ஷில்பா மஞ்சுநாத், அவருக்கு முறையாக நீச்சல், சைக்கிள் மற்றும் ஓட்டப்பந்தய பயிற்சியை அளித்து அவரை விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்த முடிவு செய்கிறார். அதன்படி, பயிற்சியில் ஈடுபடும் ஆர்த்தி, மாவட்ட கலெக்டரின் மகளை விட அதிவேகமாக ஓடுவதோடு, தேசிய அளவிலான சாதனை நேரத்தை எளிதில் கடந்து விடுகிறார்.
பயிற்சியின் போதே இப்படி இருப்பவர், போட்டியில் கலந்துக்கொண்டால் தனது மகள் நிச்சயம் பின்னுக்கு தள்ளப்படுவார் என்று நினைக்கும் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியை போட்டியில் பங்கேற்க விடாமல் தடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சியை முறியடித்து ஆர்த்தியை எப்படியாவது போட்டியில் பங்கேற்க வைக்க போராடும் ஷில்பா மஞ்சுநாத், அதில் வெற்றி பெற்றாரா?, அவர் நினைத்தது போல் ஆர்த்தியை விளையாட்டுத்துறையில் சாதனையாளராக மாற்றினாரா? என்பதை சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.
விளையாட்டு போட்டியை மையமாக கொண்ட திரைப்படங்களுக்கு என்று ஒரு பாணி இருக்கிறது. அந்த பாணியை துளிகூட மாற்றாமல் அப்படியே பின்பற்றி பழைய பாணியில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தாலும், ’ட்ரைஹத்லான்’ (Triathlon) என்ற விளையாட்டை மையமாக கொண்டு உருவான முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
ட்ரைஹத்லான் விளையாட்டில் தேசிய அளவில் பல முறை வெற்றி பெற்றிருக்கும் வீராங்கனை ஆர்த்தி, இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஆர்த்தி விளையாட்டில் மட்டும் அல்ல நடிப்பிலும் வெற்றி பெற கடினமாக உழைத்திருக்கிறார்.
பயிற்சியாளராக நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத், அந்த வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் தோற்றத்தில் பிட்டாக இருக்கிறார். நீச்சல் உடையிலும் எடுப்பாக இருப்பதோடு, விளையாட்டு பயிற்சியாளருக்கான மிடுக்கோடு நடித்து கவனம் ஈர்க்கிறார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் பிரேம், பயிற்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் தீபக் நம்பியார், பசங்க சிவகுமார், ஷில்பா மஞ்சுநாத்தின் தந்தையாக நடித்திருக்கும் ஏ.வெங்கட்கேஷ், ஆர்த்தியின் முறை மாமனாக நடித்திருக்கும் செண்ட்ராயன் என அனைவரும் கதாபாத்திரத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் தனது கேமரா மூலம் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் தேசிய அளவிலான ட்ரைஹத்லான் போட்டியை காட்சிப்படுத்திய விதம் வியக்க வைக்கிறது. நிஜமாக நடந்த ஒரு போட்டியை மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் குமரன் சிவமணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை விளையாட்டு போட்டிகளில் இருக்கும் பரபரப்பை குறையவிடாமல் பயணித்திருக்கிறது.
இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் ஜெ.எஸ்.பி.சதீஷ், சிறந்த முயற்சியை முன்னெடுத்ததற்காக பாராட்டு பெற்றாலும், ஒரு கதையை எந்தவித திருப்பமும் இன்றி, யூகிக்கும்படி சொல்லியிருப்பது ரசிகர்களை சலிப்படைய செய்கிறது.
ட்ரைஹத்லான் என்ற விளையாட்டு பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் மிக தெளிவாக விவரித்திருப்பவர், திரைக்கதை மற்றும் காட்சிகளை பழைய பாணியில் நகர்த்தி சென்று படத்தை தொய்வடைய வைத்து விடுகிறார். இருந்தாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் நிஜமான தேசிய அளவிலான போட்டியை திரைப்பட காட்சிக்காக படமாக்கிய விதம், நிஜமான விளையாட்டு வீராங்கனையை அவராகவே நடிக்க வைத்தது போன்றவற்றின் மூலம் ஜெ.எஸ்.பி.சதீஷின் முயற்சியை மனதாரா பாராட்டலாம்.
மொத்தத்தில், இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் நல்ல சிந்தனையோடு உருவாகியிருக்கும் இந்த ‘சிங்கப்பெண்ணே’ படத்தில் சொல்லப்பட்ட விசயம் பாராட்டும்படி இருந்தாலும், திரைப்படமாக ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
ரேட்டிங் 2/5