Casting : Surya, Keerthi Suresh, Karthik, Ramya Krishnan
Directed By : Vignesh Shivan
Music By : Anirudh
Produced By : Studio Green
1987 ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் என்ற போர்வையில் கும்பல் ஒன்று அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை கொள்ளையடித்தது. இந்தியா முழுவதும் கைவரிசை காட்டிய இந்த கும்பலை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கடந்த 2013 ஆம் ஆண்டு அக்ஷய் குமார் நடிப்பில் ‘ஸ்பெஷல் 26’ என்ற தலைப்பில் இந்தி திரைப்படம் ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதே கதைக்கருவோடு வெளியாகியிருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ எப்படி என்பதை பார்ப்போம்.
சிபிஐ அலுவலகத்தில் பியூனாக பணிபுரியும் தம்பி ராமையாவின் மகன் தான் சூர்யா. தான் பியூனாக இருக்கும் அலுவலகத்தில் தனது மகனை அதிகாரியாக்கி பார்க்க ஆசைப்படும் தம்பி ராமையாவின் கனவை நிஜமாக்குவதற்காக சூர்யாவும் தன்னை தயாரிப்படுத்திக் கொள்கிறார். இருந்தாலும், மேலதிகாரிகளின் ஆதிக்கத்தால் சூர்யாவுக்கு அந்த வேலை கிடைக்காமல் போகிறது. இதனால், வேதனைக்கு ஆளாகும் சூர்யா துவண்டு விடாமல், தனது நண்பர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு சிபிஐ அதிகாரிகள் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை அபகரிப்பதோடு, அந்த பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுக்கிறார்.
சூர்யா செய்யும் தில்லாலங்கடி வேலை ஒன்றில் அவருக்கு உதவி செய்ய வரும் சின்ன சின்ன தில்லாலங்கடி வேலை செய்யும் கீர்த்தி சுரேஷை காதலித்துக் கொண்டே தனது கடமையை செய்து வரும் சூர்யா அண்ட் கோ மீது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட புகார் கொடுக்காததால் அவரை பிடிக்க முடியாமல் சிபிஐ அதிகாரியான சுரேஷ் மேனன் திணறிக்கொண்டிருக்க, அந்த வேலையை செய்ய வரும் அதிரடி சிபிஐ அதிகாரியான கார்த்திக், போலி சிபிஐ அதிகாரியான சூர்யாவின் ஆட்களை வலைப்பதோடு, அவர்களை வைத்தே சூர்யாவை கையும் களவுமாக பிடிக்க திட்டம் போடுகிறார். அந்த திட்டத்தில் சூர்யா சிக்கினாரா அல்லது எஸ்கேப் ஆனாரா என்பது தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் கதை.
உண்மை சம்பவத்தை படமாக எடுத்தால் அதில் குறைந்தது 30 சதவீதமாக ஒரிஜினாலட்டி இருக்க வேண்டும். அதிலும், இந்தியாவையே உலுக்கிய இப்படி ஒரு விஷயத்தை செய்தவர்களை திரையில் காட்டும்போது, அவர்களின் நடவடிக்கையில் துளியாவது சீரியஸ்னஸை காட்டியிருக்கலாம். ஆனால், திரைக்கதையை வேறு விதத்தில் நகர்த்துகிறேன் என்ற பேரில், படு மொக்கையாக மேக்கிங் செய்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
‘நானும் ரவுடி தான்’ படத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவராத விக்னேஷ் சிவன், இந்த படத்தையும் அதே பார்மட்டில் ட்ரீட் செய்திருப்பது படத்திற்கு பெரிய அளவில் பாதகமாக அமைந்துவிட்டது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவை யூத்தாக பார்க்க முடிந்தாலும், நடிப்பில் எந்தவித துள்ளலும் இல்லை. வசனம் பேசுவதற்காகவே பிறந்த நடிகரைப் போல பக்கம் பக்கமாக வசனம் பேசும் சூர்யா, கிளைமாக்ஸ் காட்சியின் போது மட்டும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் இதுவரை நடித்த படங்களிலேயே இந்த படத்தில் தான் டம்மியான வேடத்தில் நடித்திருக்கிறார். இருந்தாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கும் கீர்த்தி சுரேஷ், அப்படியே உடற்பயிற்சியையும் கொஞ்சம் ஒழுங்கா செய்தால், சில ஆண்டுகள் ஹீரோயினாக வலம் வரலாம்.
சூர்யா அண்ட் கோவின் ஊழியர்களாக வருபவர்களில் ரம்யா கிருஷ்ணனும், சத்யனும் மட்டுமே ரசிகர்களை கவர்கிறார்கள். செந்தில், சிவசங்கர் மாஸ்டர் போன்றவர்கள் வெறும் புஷ்பானம் தான். அதிலும் காமெடியே பண்ண தெரியாத செந்திலை வைத்து, பெட்டர் மாஸ் காமெடியை திரும்ப திரும்ப நினைவுப்படுத்துவது செம போரிங்காக உள்ளது. இவர்களைக் காட்டிலும் சில நிமிடங்கள் மட்டுமே வரும் ஆனந்தராஜின் நடிப்பும், டயலாக் டெலிவரியும் எவ்வளவோ மேல். அரசியல்வாதி வேடத்தில் மனுஷன் ரசிகர்களை சிரிக்க வைத்து குஷிப்படுத்திவிடுகிறார்.
பில்டப்போடு வரும் கார்த்திக் சூர்யாவை தனது புத்திசாலித்தனத்தால் பிடித்துவிடுவார் என்று எதிர்ப்பார்த்தால், ஒரே ஒரு போன் கால் மூலம் அவரிடம் சூர்யா அண்ட் கோ சிக்குவது போல வைத்து அவரது வேடத்தை டம்மியாக்கியிருக்கும் இயக்குநர், உத்தமன் என்ற கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனனை நடிக்க வைத்துவிட்டு, அவருக்கு இயக்குநர் கெளதம் மேனனின் வாய்ஸை கொடுத்து அந்த வேடத்தையும் ரசிகர்களிடம் ஒட்டாமல் செய்துவிடுகிறார். (இதற்கு கெளதம் மேனனையே நடிக்க வைத்திருக்கலாம்)
ஸ்பெஷல் 26 படத்தின் கரு தான் படம், ஆனால் அதற்கு வேறு விதத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் திரைக்கதை அமைத்திருக்கிறார், என்று சூர்யா நிகழ்ச்சி ஒன்றில் கூறியது போல, காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை கையாண்டிருக்கும் விக்னேஷ் சிவன், சூர்யா போலியான சிபிஐ அதிகாரியாக வேஷம் போடுவதற்கு காரணமாக, அவருக்கு சிபிஐ துறையில் வேலை கிடைக்கவில்லை, என்பதோடு வேறு ஒரு காரணத்தையும் சொல்லியிருக்கிறார். அது என்ன என்பதை தெரிந்துக்கொள்ள இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ‘ஜெண்டில்மேன்’ மற்றும் ‘ரமணா’ படத்தை பார்த்தாலே போதும்.
ஆம், ஸ்பெஷல் 26 படத்தின் கருவோடு, ஜெண்டில்மேன் மற்றும் ரமணா கருவையும் சேர்த்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன், அழுத்தமாக சொன்னால், காப்படியடித்தது அப்பட்டமாக தெரிந்துவிடும் என்ற காரணத்தால், அதை மோலோட்டமாக சொல்லி, காமெடியை பூசி மழுப்பியிருக்கிறார். பாவம், அவர் என்னத்த மழுப்பினாலும், படத்தின் காட்சிகள் எதுவுமே ரசிகர்களிடம் ஒட்டாமல் போய்விடுகிறது.
படம் தான் இப்படி என்றால், பாடல் அதைவிடவும் மோசமாக உள்ளது. ரசிகர்கள் எதிர்ப்பார்த்த “சொடக்கு மேல சொடக்கு...” பாடல் ஆரம்பத்திலே வந்துவிட, அதன் பிறகு வரும் பாடல்கள், படத்திற்கு ஒரு முறை அல்ல, பல முறை இடைவேளை விடுகிறது. பெரும்பாலும் செட்டுக்குள்ளேயே சுழன்றிருக்கும் கேமரா, காட்சிகளை பலவித வண்ணங்களில் காண்பித்திருந்தாலும், பீரியட் படம் என்ற எண்ணத்தை பதிய வைக்க தவறிவிட்டது.
படத்தில் ரசிக்கும்கும்படியான காட்சி என்றால், கிளைமாக்ஸில் பிடிபடும் சூர்யா, உண்மையான சிபிஐ அதிகாரியான கார்த்திக்கிடம் இருந்து எஸ்கேப் ஆகும் காட்சி மட்டுமே, அதை தவிர படத்தில் வரும் அனைத்துக் காட்சிகளும், ”ரசிகர்களை முடியலடா சாமி...” என்று புலம்ப வைக்கிறது.
இந்த படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியில், “என்னால தனியா புடுங்க முடியாது...நாமெல்லாம் ஒண்ணா சேர்ந்தா எதையாவது புடுங்கலாம்” என்று வசனம் பேசும் சூர்யா அண்ட் கோவை வைத்துக்கொண்டு பெருஷா எதையும் புடுங்காத இயக்குநர் விக்னேஷ் சிவனை, ரசிகர்கள் விரட்டி விரட்டி வெளுக்கும் விதத்தில் தான் இந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளது.
ஜெ.சுகுமார்