Casting : Deepika Padukone, Ranveer Singh, Shahid Kapoor, Aditi Rao Hydari
Directed By : Sanjay Leela Bhansali
Music By : Sanjay Leela Bhansali, Sanchit Balhara (score)
Produced By : Sanjay Leela Bhansali
13 ஆம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ’பத்மாவத்’ என்ற இந்தி படத்தின் தமிழ் டப்பிங்கான இந்த ‘பத்மாவதி’ எப்படி என்பதை பார்ப்போம்.
டெல்லியை ஆட்சி புரியும் இஸ்லாமிய மன்னரான ரன்வீர் சிங், ராஜாஸ்தான் பகுதிகளை ஆட்சி செய்யும் இந்து மன்னரான ஷாகீத் கபூரின் இரண்டாம் மனைவியான தீபிகா படுகோனின் அழகு பற்றி கேள்விப்பட்டு அவரை அபகரிக்க நினைக்கிறார். முதலில், ஷாகீத்தையும் அவரது மனைவியையும் விருந்துக்கு டெல்லிக்கு அழைக்க, அதற்கு ஷாகீத் மறுப்பு தெரிவிப்பதால், அவரது நாட்டு மீது போர் தொடுக்க படையெடுக்கிறார். ஆனால், அந்நாட்டு மதில் சுவர்களை தகர்க்க முடியாமலும், முன்னேறிச் செல்ல முடியாமலும் அப்பகுதியிலேயே பல மாதங்கள் அவரது படைகள் தங்க நேரிடுகிறது. இதனால் படை வீரர்கள் சோர்வடைந்து போய்விடுகிறார்கள்.
இதனால், சமாதானம் என்ற போர்வையில் ஷாகீத்தின் கோட்டைக்குள் நுழையும் ரன்வீர் சிங், தீபிகா படுகோனை சந்திக்க எடுக்கும் முயற்சி தோல்வியில் முடிய, சதி செய்து ஷாகீத் கபூரை கைது செய்து டெல்லி அழைத்துச் சென்றுவிடுகிறார். தீபிகா டெல்லி வந்தால் தான், ஷாகீத் விடுதலை செய்யப்படுவார் என்று ரன்வீர் கூறுகிறார். தனது படை வீரர்களின் கத்தியைக் காட்டிலும், புத்தியால் தான் ரன்வீர் சிங்கை வீழ்த்த முடியும் என்ற எண்ணத்தில், டெல்லி செல்லும் தீபிகா, தனது கணவரை மீட்டாரா இல்லையா, என்பது ஒரு பக்கம் ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த, மறுபக்கம் தீபிகாவின் அழகு மற்றும் ஆற்றல் பற்றி கேள்விப்பட்டு, அவர் மீது வெறித்தனமான காதலை வளர்த்துக்கொள்ளும் ரன்வீர் சிங், அவரை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும்போது, அது நிறைவேறியதா இல்லையா என்பதும், தனது நாட்டுக்காகவும் அதே சமயம் மானத்திற்காகவும் பத்மாவதி எத்தகைய முடிவை மேற்கொள்கிறார் என்பதும் தான் இப்படத்தின் க்ளைமாக்ஸ்.
இஸ்லாமிய மன்னனாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் நடிப்பில் மட்டும் அல்ல, அவரது கண்களிலும், முகத்திலும் எத்தகைய வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். நடனம் ஆடும்போது கூட தன்னிடம் உள்ள வெறித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கும் ரன்வீர் சிங், தீபிகா படுகோனை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று தவிக்கும் காட்சியில் பல முறை ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தாலும், தனது கோட்டைக்குள் வந்த தீபீகா, தனது கண்ணில் படமால் எஸ்கேப் ஆகும் காட்சியில், “என் கையில் காதல் ரேகை என்ற ஒன்று இருக்கிறதா...இல்லையா...” என்று தனது உதவியாளரிடம் கேட்கும் காட்சியில், ரசிகர்களை உருக வைத்துவிடுகிறார்.
ரன்வீர் சிங்கின் அளவுக்கு ஷாகீத் கபூர் தனது தோற்றத்தால் மிரட்டவில்லை என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கான கம்பீரத்தை சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். இருந்தாலும், அவரது குள்ளமான தோற்றம் அவரை ரன்வீர் சிங்கிற்கு இணையாக வைத்துப் பார்க்க முடியவில்லை. குறிப்பாக இருவருக்கும் இடையே நடைபெறும் ஆக்ரோஷமான வாள் சண்டையில் ரன்வீர் சிங், சின்ன பையன் போல தோன்றுகிறார். அந்த காஷ்ட்யூம் மட்டும் இல்லை என்றால், அவரை ராஜாவாக ஒருவர் கூட்ட ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்.
பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபிகா படுகோனே, நடிப்பால் தன்னை பத்மாவதியாக நிரூபித்தாலும், அழகில் எந்த இடத்திலும் அவர் பத்மாவதியாக தெரியவில்லை. படத்தில் அவரை பேரழகி என்று அடிக்கடி சொல்கிறார்கள். ஆனால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அப்படி எந்த உணர்வும் தோன்றவில்லை.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை இடம்பெறும் அனைத்துக் காட்சிகளிலும் பிரம்மாண்டம் தலை தூக்கி நிற்கிறது. எது செட், எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் படத்தின் தொழில்நுட்பம் படு ஜோராக உள்ளது.
ஷாகித் கபூரின் பொருந்தாத மன்னர் வேடம் உள்ளிட்ட சில குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் நடிப்பால் மிரட்டியிருக்கிறார்கள்.
போர் காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிகர் நடிகைகளின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, கதாபாத்திரங்களின் உணர்வை ரொம்ப சிறப்பாகவே வெளிப்படுத்தியிருந்தாலும், திரைக்கதை என்னவோ ஆமை வேகத்தில் நகர்கிறது.
இசை, ஓளிப்பதிவு, படத்தொகுப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் அனைத்தும் மிரட்டியிருக்கின்றன. குறிப்பாக ஷாகீத்தின் கோட்டை படு பிரம்மாண்டமாக உள்ளது.
பரபரப்பான காட்சிகளும், எதிர்ப்பார்ப்பு மிக்க இடங்களும் படத்தில் இருந்தாலும், அங்கேயும் ஆர்டிஸ்டின் நடிப்பையே மோலோங்க செய்திருருக்கும் இயக்குநர் காட்சிகளில் பரபரப்பை காட்டவில்லை என்றாலும், நம்மை பிரமிக்க வைத்துவிடுகிறார்.
மொத்தத்தில், இந்த ‘பத்மாவதி’ யில் விறுவிறுப்பு இல்லை என்றாலும், வியப்பு இருக்கிறது.
ஜெ.சுகுமார்