Latest News :

’ஒரு நொடி’ திரைப்பட விமர்சனம்

e9f66d10499a49ffdeafb9388481bc74.jpg

Casting : Thaman Kumar, MS Baskar, Vela Ramamurthy, Pazha Karuppaiah, Sri Ranjani, Nikitha, Vignesh Adidhya, Deepa Shankar

Directed By : B.Manivarman

Music By : Sanjay Manickam

Produced By : Madurai Azhagar Movies & White Lamp Pictures - Azhagar .G & K.G.Ratheesh

 

இப்படியும் நடக்குமா? என்ற கேள்வியை எழுப்பும் பல விசயங்கள் ஒரு நொடியில் நடந்து முடிந்துவிடும், அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை வைத்துக்கொண்டு, பரபரப்பான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதோடு, என்ன நடந்திருக்கும்? என்பதை யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் பி.மணிவர்மன், க்ரைம் சஸ்பென் திரில்லர் ஜானர் கதையை பல திருப்பங்களோடு சொல்லியிருப்பதோடு, உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்.

 

தனது கணவர் எம்.எஸ்.பாஸ்கார் காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கும் ஸ்ரீ ரஞ்சனி, கந்து வட்டி தொழில் செய்யும் வேல ராமமூர்த்தி மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக சொல்கிறார். வழக்கை விசாரிக்க தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் தமன் குமார், நேரடியாக வேல ராமமூர்த்தியை ரவுண்டப் செய்ய, அங்கு தொடங்கும் பரபரப்பு படம் முடியும் வரை தொடர்கிறது.

 

காணாமல் போன எம்.எஸ்.பாஸ்கரை தமன் குமார் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது ஒரு பக்கம் இருக்க, திடீரென்று நிகழும் இளம் பெண் நிகிதாவின் கொலை, அந்த வழக்கையும் கையில் எடுக்கும் தமன் குமாரின் அதிரடி நடவடிக்கைகள் என இரண்டு மணி நேரத்திற்கு ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடுவது தான் ‘ஒரு நொடி’.

 

மிடுக்கான தோற்றம், பக்குவமான நடிப்பு என்று பரிதி இளம்மாறன் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக இருக்கிறார் தமன் குமார். கடத்தல் மற்றும் கொலை வழக்குகளை அவர் எதிர்கொள்ளும் விதம் மற்றும் எம்.எல்.ஏ, கந்து வட்டி ரவுடி போன்றவர்களை கையாளும் விதங்களை தனது அளவான நடிப்பு மூலம் ரசிக்க வைக்கிறார். தன்னை நிரூபிப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பை தமன் சரியாக பயன்படுத்தியிருக்கிறார், நிச்சயம் இந்த படம் அவரது சினிமா பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

 

Oru Nodi Movie Review

 

கந்து வட்டி தொழில் நடத்துபவராக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, வழக்கமான முறைப்போடு நடித்தாலும், காவல்துறை அதிகாரியிடம் தனது கோபத்தையும், திமிரையும் வெளிப்படுத்தும் விதம் மிரட்டல். 

 

எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் பழ.கருப்பையாவின் அறிமுகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், திரைக்கதையோட்டத்திற்கு பயன்படும் ஒரு வேடமாக வந்து போகிறார்.

 

சேகரன் என்ற வேடத்தில் கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், காணாமல் போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பிளாஸ்பேக்கில் அவ்வபோது தலைகாட்டுபவர் தனது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

நகை கடையில் வேலை செய்யும் இளம் பெண்ணாக நடித்திருக்கும் நிகிதா, அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் இயல்பு. எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனி உணர்ச்சிகரமாக நடித்து கவனம் ஈர்க்கிறார். 

 

நிகிதாவின் தந்தையாக நடித்திருப்பவரின் நடிப்பு அளவாக இருந்தாலும், அம்மாவாக நடித்திருக்கும் தீபா சங்கர் கொஞ்சம் அதிகமாகவே நடித்திருக்கிறார். 

 

சலூன் கடைக்காரராக நடித்திருக்கும் விக்னேஷ் ஆதித்யாவின் நடிப்பு சிறப்பு.

 

Oru Nodi Movie Review

 

ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரத்தீஷ் தனது கேமரா மூலம் காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்திருக்கிறார். குறிப்பாக ஒரே விசயத்தை பல கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தும் காட்சிகளை வித்தியாசமான கோணங்களில் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

சஞ்சய் மாணிக்கம் இசையில், சிவசங்கர், ஜெகன் கவிராஜ், உதயா அன்பழகன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் உணர்வுப்பூர்வமாக அமைந்திருக்கிறது. அளவான பின்னணி இசை காட்சிகளின் பரபரப்பையும், பதற்றத்தையும் ரசிகர்களிடம் சரியான முறையில் கடத்தியிருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் எஸ்.குரு சூர்யா, படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே ரசிகர்களை கதைக்குள் அழைத்துச் சென்று விடுவதோடு, அடுத்தடுத்த காட்சிகளை வேகமாக நகர்த்தி சென்றாலும், திரைகக்தையில் இருக்கும் எமோஷ்னலான விசயங்களை மிக அழகாக தொகுத்து படத்தை சுவாரஸ்யமாக பயணிக்க வைத்திருக்கிறார்.

 

எளிமையான விசயம் என்றாலும், ஒரு நொடியில் இப்படிப்பட்ட விசயங்கள் நடந்துவிடும் என்ற உண்மையை சுவாரஸ்யமான க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதையாக சொல்லியிருக்கும் பி.மணிவர்மன், அதை உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்.

 

ஒரு குற்ற வழக்கில் பயணிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த வழக்கை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பல திருப்பங்களோடு சொல்வதோடு, இது தான் நடந்திருக்கும், இவர் தான் செய்திருப்பார், என்று ரசிகர்களை யூகிக்க வைத்தாலும், இறுதியில் அத்தனை யூகங்களையும் உடைத்தெறிந்து, யூகிக்க முடியாத ஒரு விசயத்தை சொல்லி படத்தை முடித்திருப்பது பாராட்டத்தக்கது.

 

க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படங்களுக்கு என்று ஒரு ஃபார்மட் இருக்கும், அத்தகைய ஃபார்மட் இந்த படத்திலும் இருக்கிறது, ஆனால் அதை இயக்குநர் கையாண்ட விதம் தான் படத்தை ரசிக்க வைக்கிறது. அதேபோல், இதுபோன்ற படங்களில் லாஜிக் ஓட்டைகளை கண்டுபிடிப்பது சுலம் என்றாலும், அவற்றை எல்லாம் பார்க்காமல் இந்த படத்தை பார்த்தால் காட்சிக்கு காட்சிக்கு ரசிப்பது உறுதி.

 

மொத்தத்தில், ‘ஒரு நொடி’ நெத்தியடி.

 

ரேட்டிங் 3.8/5

Recent Gallery