Casting : Vishal, Samuthirakani, Priya Bhvani Shankar, Yogi Babu, Murali Sharma, Harish Peradi, Muththukumar, Vijayakumar, Jayaprakash, Thulasi, Kumki Ashwin
Directed By : Hari
Music By : Devi Sri Prasad
Produced By : Stone Bench Films & Zee Studios - Kaarthekeyen Santhanam
வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகிறார். இதற்கிடையே நாயகி பிரியா பவானி சங்கரை முதல் முறையாக பார்க்கும் விஷால், அவரை பின் தொடர்கிறார். அப்போது ஒரு கும்பல் பிரியா பவானி சங்கரை கொலை செய்ய முயற்சிக்கிறது. அவர்களிடம் இருந்து அவரை காப்பாற்றும் விஷால், அந்த கும்பல் யார்?, எதற்காக கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்?, என்பதை தெரிந்துக்கொள்கிறார். பிறகு என்ன, பிரியா பவானி சங்கரின் பிரச்சனையை தனது பிரச்சனையாக கையில் எடுத்து, எதிரிகளை வீழ்த்த கிளம்புகிறார். அதன் பிறகு நடப்பதை தனது வழக்கமான வேகமான காட்சிகளைக் கொண்டு கதை சொல்லியிருக்கும் இயக்குநர் ஹரி, திருப்புமுனை ஒன்றின் மூலம் கூடுதல் சுவாரஸ்யத்தோடு படத்தை நகர்த்தி செல்வது தான் ‘ரத்னம்’.
முழு படத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கும் விஷால், ரத்னமாக இரத்த குளத்தில் நீந்தி இருக்கிறார். புயலை விட வேகமாக பயணித்திருக்கும் விஷால் கடுமையாக உழைத்திருப்பது அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது. அம்மா செண்டிமெண்ட் மூலம் ரசிகர்களை கலங்கடிக்கச் செய்யும் விஷால், ஆக்ஷன் காட்சிகளில் ஏகப்பட்ட ரிஸ்க் எடுத்திருக்கிறார்.
வழக்கமான கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் திரைக்கதையோடு பயணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், தோற்றத்திலும் நடிப்பிலும் எளிமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனி வழக்கம் போல் தனது நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார்.
யோகி பாபு வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அவரை தொடர்ந்து வரும் நான் கடவுள் ராஜேந்திரன், விடிவி கணேஷ் போன்றவர்களின் நகைச்சுவை கடுப்பேற்றுகிறது.
முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார் ஆகியோரின் வில்லத்தனம் வழக்கம் போல் மிரட்டுகிறது.
விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், துளசி, கஜராஜ், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், ஒய்.ஜி.மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராமன், கும்கி அஸ்வின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் படத்தில் இருந்தாலும், அனைவரும் திரையை மட்டுமே நிரப்பியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஆக்ஷன் காட்சிகளை ஆக்ரோஷமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் வருவதால், ஒன்றை மட்டும் ஒரே ஷாட்டில் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டு அதன் மூலம் ரசிகர்களை வியக்கவும் வைத்திருக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு.
இயக்குநரை விட ஸ்டண்ட் இயக்குநர் கனல் கண்ணனுக்கு தான் அதிகம் வேலை செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளும், வாகனங்கள் மூலம் விரட்டும் காட்சிகள் எக்கச்சக்கம் என்றாலும் அவற்றை அவர் வடிவமைத்த விதம் ரசிகர்களை எரிச்சலடைய செய்கிறது.
இயக்குநர் ஹரி தனது வழக்கமான பாணியிலான கதையை, அதே வழக்கமான கமர்ஷியலோடும், வேகத்தோடும் சொல்லியிருந்தாலும், நாயகன் - நாயகி இடையில் வித்தியாசமான திருப்பத்தை வைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். அதே சமயம், படத்தில் அளவுக்கு அதிகமானஆக்ஷன் காட்சிகளை வைத்து ரசிகர்களை சோதிக்கவும் செய்திருக்கிறார்.
திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, அம்மா செண்டிமெண்ட், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தையும் அளவாக கையாண்டு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக இயக்கியிருக்கும் இயக்குநர் ஹரி, ஆக்ஷன் காட்சிகளையும், படத்தின் நீளத்தையும் சற்று குறைத்தால் ரசிகர்கள் ரசிக்கும் படமாக மட்டும் இன்றி கொண்டாடும் படமாகவும் இருக்கும்.
மொத்தத்தில், இந்த ‘ரத்னம்’ ஜொலிப்பதற்கு பதில், இரத்தத்தில் குளித்திருக்கிறார்.
ரேட்டிங் 3/5