Casting : Ashwini Chandrasekar, Manimaran, Thara Kirish, Ram Bharathan,
Directed By : Mayon Siva Thorapadi
Music By : Sebastian Sathish
Produced By : Sun Life Creations - M.Selvaraj
நாயகி அஷ்வினி சந்திரசேகர், குழந்தை மற்றும் இளம் பெண் ஒருவருடன், மனித நடமாட்டம் இல்லாத மலைப்பாதையை கடந்த தனது தாத்தா இருக்கும் கிராமத்திற்கு செல்கிறார். மக்கள் குறைவாக இருக்கும் அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் பல சிதிலமடைந்து, பராமரிப்பு இன்றி இருக்கிறது. இதற்கிடையே, அந்த கிராமத்திற்கு வரும் சில இளைஞர்கள் குறும்படம் எடுக்கப் போவதாக சொல்லி, அந்த வீடுகளை வீடியோ எடுக்கிறார்கள். அவர்களுக்கு நாயகியின் தாத்த உதவி செய்கிறார்.
இந்த நிலையில், நாயகியுடன் வந்த இளம் பெண் திடீரென்று மாயமாக, அவரை தேடும் போது, குறும்படம் எடுப்பதாக சொன்ன இளைஞர்களில் ஒருவர் அந்த இளம் பெண்ணை தாக்க, அவரிடம் இருந்து இளம் பெண்னை காப்பாற்றும் நாயகி அவரை கொலை செய்துவிடுகிறார். மாயமான இளைஞரை தேடி மேலும் பலர் அந்த கிராமத்திற்கு வருவதோடு, நாயகி அஷ்வினியை தேடி அலைகிறார்கள். அவர்களுக்கும் நாயகிக்கும் என்ன தொடர்பு, அவர்கள் அஸ்வினியை பிடிக்க முயற்சிப்பது ஏன்? என்பது தான் ‘கன்னி’ படத்தின் மீதிக்கதை.
சேம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்வினி சந்திரசேகர், தோற்றம், நடிப்பு , உடை, உடல் மொழி என்று மலைவாழ் பெண் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் .கொஞ்சம் கூட நடிப்பு என்று தெரியாமல் சேம்பியாகவே வாழ்ந்துள்ளார்.
அதேபோல வேடனாக வரும் மணிமாறன், அவரது மனைவி நீலிமாவாக வரும் தாரா கிரிஷ் இருவரும் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.எதிர்மறைக் கதாபாத்திரத்தில் வரும் ராம் பரதனும் மலைவாசி மனிதராகவே மாறியுள்ளார்.
இவர்கள் தவிர படத்தில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் கூட நடிப்பில் யதார்த்தம் காட்டி அந்த மலைக் கிராமத்தில் வாழும் மனிதர்களாகவே நடித்துள்ளார்கள்.
படத்தின் பிரதான அம்சமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று கதையின் நிகழ்விடங்கள் தான்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே புள்ளஹள்ளி ,மற்றும் ஜவ்வாது மலைப்பகுதிகளில் காட்சிகள் வருகின்றன. மலைப்பகுதியில் காடு, பாறைகள் நிறைந்த கரடுமுரடான இடங்களில் பல்வேறு கோணங்களில் படமாக்கி கண்முன்னே அழகான ஓவியங்களாகக் காட்சிகளைப் படப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராஜ்குமார்.முழுக்க முழுக்க இயற்கை வெளிச்சத்திலேயே படமாக்கி உள்ளார். யதார்த்தமாக மட்டுமல்ல அழகியலும் நிறைந்த காட்சிகள் படத்தின் பெரும் பலம்.
படத்தில் வரும் பாத்திரங்கள் அதிகம் பேசுவதில்லை ஆனால் நறுக்கெனப் பேசுகின்றன.தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னட மொழி வாசனை வீசும் அவர்கள் பேசும் மொழியே படத்திற்கு வேறு நிறத்தினைக் கொடுத்து விடுகிறது.
நீளமாகப் பேசாத கதாபாத்திரங்கள் வலம் வரும் இந்தப் படத்தில் அவர்களின் உணர்வுகளைத் தனது பின்னணி இசையால் பேச வைத்துள்ளார் இசையமைப்பாளர் செபாஸ்டியன் சதீஷ்.குறிப்பாக உச்சகட்ட காட்சியில் வசனங்களே இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன. அவரது பின்னணி இசை தான் பேசுகிறது. பாடல் இசையிலும் குறையில்லை . குறிப்பாக 'சாய்ந்தாடும் ஆகாயமே தோள் சேரும் பூலோகமே ' மனித நல்லுணர்வுகளின் குரலாக ஒலிக்கிறது.பாடல்கள் உமாதேவி.
படத்தில் சித்த மருத்துவத்தின் மகிமை பற்றிப் பேச முயன்றுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனம் நம் பாரம்பரியத்தை வணிகப்படுத்தும் முயற்சியில் இருப்பதும் சொல்லப்படுகிறது. ஆனால், படத்தில் சொல்லப்படும் சித்த மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த விசயங்களை தெளிவாக சொல்லாததும், செம்பியின் தாத்தா கிராமத்தில் வலம் வரும் ஆவிகள் மற்றும் வித்தியாசமான மனிதர்களைப் பற்றியும் தெளிவாக சொல்லாதது படத்திற்கு பலவீனம்.
படக் குழுவினர் எளிதில் நுழையாத லொக்கேஷன்களில் தேடிப் போய் படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம், கிராம மக்களை நடிக்க வைத்திருப்பது, ஆபாசக் காட்சிகள் இல்லாமல், கதைக்களத்தின் இயல்பு தன்மை மாறாமல் இருப்பதற்காகவே, கிராம மக்களை அவர்களாகவே நடிக்க வைத்திருப்பதோடு, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளை பேச வைத்திருப்பது போன்றவற்றின் மூலம் படம் தனித்து நிற்கிறது.
மொத்தத்தில், இந்த ‘கன்னி’ மக்களின் கவனத்தை ஈர்க்கும்.
ரேட்டிங் 2.5/5