Casting : Santhanam, Priyalaya, Thambi Ramaiya, Vivek Prasanna, Maran, Bala Saravanan, Sesu, Swaminathan, Mano Bala, Cool Suresh, Munishkanth
Directed By : Anand Narayan
Music By : D.Imman
Produced By : GN Anbuchezhiyan, Sushmitha Amnuchezhiyan
திருமணம் ஆகாத சந்தானம், சொந்த வீடு இருந்தால் தான் பெண் தருவார்கள் என்று நினைத்து, ரூ.25 லட்சம் கடன் வாங்கி ஒரு வீடு வாங்குகிறார். அப்படியும் அவருக்கு பெண் கிடைக்காததால், திருமண தகவல் மையத்தில் வேலைக்கு சேர்ந்து பெண் தேடுபவர், தனது கடன் தொகையான ரூ.25 லட்சத்தை வரதட்சணையாக பெற முயற்சிக்கிறார். இதற்கிடையே, ஜமீன் குடும்பம் ஒன்று சந்தானத்திற்கு பெண் கொடுக்க முன்வருகிறது. ஜமீன் என்பதால் தனது கடனான ரூ.25 லட்சம் தனக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், ஜமீனான தம்பி ராமையாவின் மகள் நாயகி பிரியலயாவை சந்தானம் திருமணம் செய்துக் கொள்கிறார். திருமணம் முடிந்த பிறகு தான் ஜமீன் குடும்பத்துக்கு ரூ.10 கோடி கடன் இருக்கும் உண்மை சந்தானத்திற்கு தெரிய வருகிறது. கடனுக்காக ஜமீன் வீடு, அதில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் பிரித்துக் கொடுப்பதோடு, தனது மருமகன் சந்தானத்துடன் சென்னைக்கு வருகிறார்.
ரூ.25 லட்சம் கடனை எப்படி கட்டுவது என்ற குழப்பத்தில் இருக்கும் சந்தானம் கூடவே மாமனார் தம்பி ராமையா மற்றும் மச்சான் பால சரவணனையும் பராமரிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார். இந்த நிலையில், வெடிகுண்டு வைப்பதற்காக தீவிரவாத கும்பல் ஒன்று சென்னைக்குள் நுழைகிறது. அவர்கள் மூலம் சந்தானத்திற்கு ரூ.50 லட்சம் கிடைக்க கூடிய வாய்ப்பு கிடைக்க, அது என்ன?, 50 லட்ச ரூபாய் அவருக்கு கிடைத்ததா? என்பதை கொஞ்சம் காமெடியாகவும், நிறைய கடியாகவும் சொல்வது தான் ‘இங்க நான் தான் கிங்கு’.
சந்தானம் வழக்கம் போல் காமெடி நாயகனாக வலம் வந்தாலும், கலர்புல்லான ஆடைகள், அட்டகாசமான நடனம், காதல் பாடல் காட்சியில் நாயகியுடன் நெருக்கம் என்று கமர்ஷியல் நாயகனாக கவனம் ஈர்க்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரியலயாவுக்கு வழக்கமான கமர்ஷியல் நாயகி வேடம் என்றாலும் அதை நிறைவாக செய்திருப்பவர், நடனம் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார்.
தம்பி ராமையாவுக்கு படம் முழுவதும் வருகின்ற வேடம் என்பதால், வழக்கமான ஓவர் ஆக்டிங்கை விட சற்று கூடுதலாகவே நடித்திருந்தாலும், அது பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கும்படி இருப்பது ஆறுதல்.
பாலசரவணன், விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த் ஆகியோருடன் சந்தானம் & கம்பெனி நடிகர்களான மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து கொஞ்சமாக சிரிக்க வைத்து, அதிகமாக கடுப்பேற்றுகிறார்கள்.
டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்துமே ஏற்கனவே அவரது இசையில் வெளியான பாடல்கள் சாயல்களில் இருந்தாலும் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை அளவு.
ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண் படம் முழுவதையும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணம் மற்றும் பின்னணி படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு, காமெடி படத்தையும் தாண்டி ஒளிப்பதிவை ரசிக்க வைக்கிறது.
எழுச்சூர் அரவிந்தனின் கதை அதர பழசாகவே இருக்கிறது. அதிலும், சுந்தர்.சி உள்ளிட்ட கமர்ஷியல் இயக்குநர்களின் படங்களின் பார்மெட்டில் காட்சிகளும், வசனமும் அமைந்திருப்பது படத்திற்கு பலவீனமாக இருந்தாலும், இயக்குநர் ஆனந்த் நாராயண், அந்த பலவீனத்தை மறைத்து ரசிக்கும்படி முதல்பாதி படத்தை நகர்த்தி செல்கிறார்.
ஆனால், இரண்டாம் பாதியில் இடம்பெறும் காட்சிகளில் நகைச்சுவை இல்லாமல் இருப்பதும், தேவையில்லாத இடங்களில் கதாபாத்திரங்களை திணித்து ரசிகர்களை வலுக்கட்டாயமாக சிரிக்க வைக்க முயற்சித்திருப்பதும் ரசிகர்களை சோர்வடைய செய்துவிடுகிறது.
மொத்தத்தில், ‘இங்க நான் தான் கிங்கு’ கொஞ்சமாக சிரிக்க வைத்து, நிறைய கடுப்பேற்றுகிறது.
ரேட்டிங் 2.5/5