Latest News :

’பூமர காத்து’ திரைப்பட விமர்சனம்

d5eb65856627150859e6569018aac119.jpg

Casting : Santhosh Saravanan, Vidhush, Manisha, Meena, Manobala, Devatharshini, Singampuli, Muthukalai, Sicer Manohar, Kadhal Arun, GS Mani

Directed By : Gnana Arokiya Raja

Music By : Aravind Sriram and Eshwar Anand

Produced By : Jesus Grace Cine Entertainment - Rani, Sharmila Devi, Vanitha, Pugazhenthi

 

12ம் வகுப்பு படிக்கும் நாயகன் சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார். அதே சமயம், மற்றொரு மாணவி மாணவனை ஒருதலையாக காதலிக்கிறார். பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டிய மாணவர்கள், தங்களது காதலை சொல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்க, பள்ளி பருவத்தில் படிப்பதில் கவனம் செலுத்தாமல் காதலில் கவனம் செலுத்துவது தவறு என்பதை புரிந்துக்கொண்டு தங்களது காதலை கைவிட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்கிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிக்கும் நாயகன், 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது காதலை தொடர்கிறார். ஆனால், பள்ளியில் படிக்கும் போது காதலித்த பெண் இல்லாமல் வேறு ஒரு பெண்ணை அவர் காதலிக்கிறார். அந்த பெண் யார்?, இந்த முறையாவது அவரது காதல் கைகூடியதா?, காதல் அவரது வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியது?, என்பதை காதலோடும், பலவிதமான அறிவுரைகளோடும் சொல்வது தான் ‘பூமர காத்து’.

 

பள்ளி மாணவராக நடித்திருக்கும் சந்தோஷ் சரவணன், தனது ஒருதலை காதலை சொல்ல முயற்சிக்கும் போதும், சக மாணவர்களுக்கு நல்ல விசயங்களை சொல்லும் போதும் நடிப்பில் மிளிர்கிறார்.

 

பள்ளி வாழ்க்கை முடிந்து 12 வருடங்களுக்குப் பிறகு நாயகன் வேடத்தில் நடித்திருக்கும் விதுஷ், பெற்றோர்களை எதிர்த்து காதல் திருமணம் செய்பவர்களின் நிலையை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். 

 

பள்ளி மாணவியாக நடித்திருக்கும் நாயகி மனிஷா குறைவான காட்சிகளில் வந்தாலும், தனது வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

 

மற்றொரு நாயகி மீனா, தன்னை காதலிக்கும் நாயகனுக்கு வைக்கும் பரிசோதனை மூலம் காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார். பிள்ளைகளுக்கு உணவு இல்லாமல் ரேஷன் கடையில் அரிசிக்காக கெஞ்சும் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிகர்களை கலங்க வைக்கிறது.

 

பள்ளி தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் மனோ பாலா மற்றும் ஆசிரியையாக நடித்திருக்கும் தேவதர்ஷினி ஜோடியின் காட்சிகள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.

 

சிங்கம்புலி, முத்துக்காளை, சிசர் மனோகர், சூப்பர் குட் லட்சுமணன், ஜி.எஸ்.மணி, காதல் அருண், தேனி முருகன், தீப்பெட்டி கணேசன், விஜய் கணேஷ், போண்டாமணி, நேல்லை சிவா, செவ்வாழை ஆகியோரது நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. அதிலும், தமிழ்நாட்டை காணவில்லை, என்று முத்துக்காளை போலீசில் புகார் அளிக்கும் காட்சியில் திரையரங்கே சிரிப்பு சத்தத்தால் அதிர்கிறது.

 

அரவிந்த் ஶ்ரீராம் மற்றும் ஈஸ்வர் ஆனந்த் ஆகியோரது இசையில், இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜாவின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் கருத்துள்ளவைகளாக இருப்பதோடு, திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. திரைக்கதை மூலம் மட்டும் இன்றி பாடல்கள் மூலமாகவும் மக்களுக்கு நல்ல விசயங்களை சொல்லியிருக்கும் இயக்குநரை இதற்காக தனியாக பாராட்டலாம். பின்னணி இசை அளவு.

 

ஒளிப்பதிவாளர் ஜோ, கதைக்கு ஏற்ப தனது கேமராவை பயன்படுத்தியிருப்பதோடு, பாடல் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஷார்ப் ஆனந்தின் படத்தொகுப்பு நேர்த்தி.

 

எழுதி இயக்கியிருக்கும் ஞான ஆரோக்கிய ராஜா, காதல் கதையாக இருந்தாலும், அதற்கான திரைக்கதையில் இளைஞர்களுக்கும், சமூகத்திற்கும் பல நல்ல விசயங்களை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

 

பள்ளி பருவத்தில் வரும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், என்ற விசயத்தை மிக அழகாக காட்சி மொழியில் சொல்லியிருக்கும் இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, இளைஞர்கள் கொண்டாடும் விதத்தில் காதல் கதையை நகர்த்தி சென்றாலும், அதன் மூலமாகவே இளைஞர்களுக்கு சொல்லியிருக்கும் அறிவுரைகள் அனைத்தும் திரைக்கதையை ஒட்டி பயணித்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

காதலிப்பது தவறில்லை ஆனால் பெற்றோர்கள் ஆசியுடன் காதலில் வெற்றி பெற்றால் தான், வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதை இரண்டாம் பாதியில் விளக்கியிருக்கும் இயக்குநர் இறுதியில் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது, என்ற விசயத்தை பதிவு செய்த விதம் கைதட்டல் பெறுகிறது.

 

இளைஞர்கள் ரசிக்கும்படியான காதல் கதையை, குடும்பத்தோடு பார்க்கும் நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, சமூகத்திற்கு பாடம் சொல்லும் ஒரு படமாகவும் கொடுத்து இயக்குநராக வெற்றி பெற்றிருக்கிறார் ஞான ஆரோக்கிய ராஜா.

 

மொத்தத்தில், இந்த ‘பூமர காத்து’ நம்மை இதமாக இளைப்பாற வைக்கிறது.

 

ரேட்டிங் 3/5