Latest News :

‘ஹிட் லிஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

cb32aaebd84725d53b64d7c4d7204ead.jpg

Casting : Sarathkumar, Vijay Kanishka, Samuthirakani, Goutham Vasudev Menon, Shmiruthi Venkat, Aishwarya Dutta, Sidhara, Abi Nakshathra, Anupama Kumar, Ramachandra Raju, Munishkanth, Balasaravanan, Reding Kingsly

Directed By : Suryakathir Kakkallar - K.Karthikeyan

Music By : C.Sathya

Produced By : RK Celluloids - KS Ravikumar

 

சிறு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதால் சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற கொள்கை கொண்ட நாயகன் விஜய் கனிஷ்கா, தனது அம்மா சித்தாரா, தங்கை ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். விஜய் கனிஷ்காவின் வாழ்க்கையில் திடீரென்று நுழையும் முகமூடி அணிந்த நபர், அவரது அம்மா மற்றும் தங்கையை கடத்தி வைத்துக்கொண்டு, அவரை மிரட்டி இரண்டு கொலைகளை செய்யச் சொல்கிறார். அப்பாவியான விஜய் கனிஷ்காவை எதற்காக அவர் கொலை செய்யச் சொல்கிறார்?, முகமூடி மனிதரிடம் சிக்கிக்கொண்ட அம்மா, தங்கையை விஜய் கனிஷ்கா எப்படி மீட்கிறார்?, அந்த முகமூடி மனிதர் யார்? என்பதை காவல்துறை அதிகாரி சரத்குமார் கண்டுபிடித்தாரா? ஆகிய கேள்விகளுக்கான விடைகள் தான் ‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் கதை.

 

அறிமுக நாயகன் விஜய் கனிஷ்கா, முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரம் மட்டும் இன்றி நடிப்பில் வேறுபாட்டை காண்பிக்கும் வேடத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார். அப்பாவியான அவர் தனது அம்மா, தங்கையை காப்பாற்றுவதற்காக வில்லன்களிடம் மோதும் காட்சிகளிலும் சரி, காவல்துறை மற்றும் முகமூடி மனிதர் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சிகளிலும் சரி, நேர்த்தியான நடிப்பு மூலம் முழு படத்தையும் தாங்கி பிடித்திருக்கிறார்.

 

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சரத்குமார், படம் முழுவதும் வந்தாலும் முதல்பாதியில் பெரிய வேலை ஏதும் இன்றி பயணிக்கிறார். அதே சமயம் இரண்டாம் பாதியில் தனக்கான ஆக்‌ஷன் காட்சிகளோடு, முகமூடி மனிதர் யார்? என்பதை கண்டுபிடிப்பதன் மூலம் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார்.

 

விஜய் கனிஷ்காவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கு சிறிய வேடம் என்றாலும், வழக்கம் போல் நல்ல விசயங்களை பேசும், நல்ல மனம் கொண்ட வேடத்தில் நடித்திருக்கிறார்.

 

மருத்துவமனை டீனாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், வழக்கம் போல் தனது ஸ்டைலிஷான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

ஸ்மிருதி வெங்கட் சம்மந்தப்பட்டிருக்கும் பிரச்சனை மக்கள் எதிர்கொண்டவை என்பதால், அவரது காட்சிகள் மனதுக்கு நெருக்கமாக அமைந்திருப்பதோடு, அவரது நடிப்பு கண்கலங்க வைக்கிறது.

 

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சித்தாரா, தங்கையாக நடித்திருக்கும் அபி நக்‌ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, அனுபமா குமார், ராமச்சந்திரன் ஆகியோர் அளவான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

பாலசரவணன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி குறைவான காட்சிகள் வந்தாலும், அதில் ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுகிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கே.ராம்சரண் மற்றும் இசையமைப்பாளர் சி.சத்யா ஆகியோரது பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

முகமூடி மனிதர் யார்?, அவர் எதற்காக விஜய் கனிஷ்காவை கொலை செய்யச் சொல்கிறார்? என்ற இரண்டு கேள்விகள் தான் முழு படத்தையும் எதிர்பார்ப்புடன் பயணிக்க வைப்பதோடு, அந்த இரண்டு கேள்விகளுக்கான சஸ்பென்ஸை இறுதி வரை ரசிகர்கள் யூகிக்க முடியாதபடி இயக்குநர்கள் சூர்யகதிர் காக்கல்லர் - கே.கார்த்திகேயன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்கள்.

 

வில்லன் ராமச்சந்திரன் உடனான விஜய் கனிஷ்காவின் மோதல், கெளதம் வாசுதேவ் மேனன் கதாபாத்திரத்தின் எண்ட்ரி ஆகியவை படத்தை ரசிக்க வைப்பதோடு, நடப்பவை குறித்து முகமூடி மனிதர் கொடுக்கும் விளக்கம் சமூகத்திற்கும், மக்களுக்கும் நெருக்கமாக இருப்பதால் ரசிகர்களால் கதையுடன் ஒன்றி பயணிக்க முடிகிறது. 

 

மொத்தத்தில், இந்த ‘ஹிட் லிஸ்ட்’ நிச்சயம் ஹிட் படங்களின் பட்டியலில் இடம் பிடிக்கும்.

 

ரேட்டிங் 3/5