Latest News :

’மகாராஜா’ திரைப்பட விமர்சனம்

3fe9f48d3c176924387f529fec96783b.jpg

Casting : Vijay Sethupathi, Anurag Kashyap, Natraj, Abirami, Mamta Mohandas, Saingam Puli, Arul Das, Munishkanth, Sachana Nemidas, Boys Manikandan, Kalayan, Kalki

Directed By : Nithilan Swaminathan

Music By : B Ajaneesh Loknath

Produced By : Sudhan Sundaram, Jagadish Palanisamy

 

சலூன் கடை நடத்தி வரும் விஜய் சேதுபதி, பள்ளி படிக்கும் தனது மகளுடன் சென்னையின் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். அவரது மகள் விளையாட்டு முகாமுக்காக வெளியூர் சென்றிருக்கும் நிலையில், தனது வீட்டில் இருக்கும் லட்சுமி காணவில்லை, என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் விஜய் சேதுபதி, முகமூடி அணிந்த மூன்று பேர் தன்னை தாக்கிவிட்டு லட்சுமியை திருடிச் சென்றுவிட்டதாக சொல்கிறார்.

 

திருடப்பட்ட லட்சுமி யார்? என்பதை தெரிந்துக் கொண்டு கோபமடையும் ஒட்டுமொத்த காவல் நிலையமும் விஜய் சேதுபதியை கொல்லாத குறையாக விரட்டியடிக்கிறது. ஆனாலும், விடாபிடியாக லட்சுமியை கண்டுபிடித்து கொடுக்குமாறு தொல்லை கொடுக்கும் விஜய் சேதுபதி, தனது லட்சுமியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.7 லட்சம் கொடுப்பதாக சொல்கிறார். இப்படி ஒரு சாதாரண விசயத்துக்கு இவ்வளவு பணமா..! என்று ஆச்சரியப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி, விஜய் சேதுபதியின் லட்சுமியை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதே சமயம், லட்சுமிக்காக காவல் நிலையத்தை விட்டு நகராத விஜய் சேதுபதியின்  அடுத்தடுத்த செயல்கள், அவர் லட்சுமிகாக காவல் நிலையத்திற்கு வரவில்லை, வேறு எதற்காகவோ வந்திருக்கிறார், என்பதை புரிய வைத்து விடுகிறது. அது என்ன? என்பதை பலவிதமான திருப்பங்களுடன் சொல்வதே ‘மஹாராஜா’.

 

படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நிரம்பி வழிகின்ற அளவுக்கு திரையில் பல திருப்பங்கள் இருந்தாலும், முதல் திருப்பம், லட்சுமி யார்? என்பது தான். இந்த திருப்பம் கதையின் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டாலும், இப்படிப்பட்ட ஒரு பொருளுக்காகவா ஒரு மனுஷன் இப்படி கஷ்ட்டப்படுகிறார், அப்படி என்றால் அதில் வேறு ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கும், என்று அனைத்து காவலர்களும் எதிர்பார்ப்பது போல், ரசிகர்களும் எதிர்பார்த்தாலும், அந்த எதிர்பார்ப்பு சில நிமிடங்களில் ஒன்னும் இல்லாமல் போய்விடுகிறது. காரணம், விஜய் சேதுபதியின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இது தான் காரணமாக இருக்கும், என்று ரசிகர்கள் எளிதியில் யூகித்து விடுகிறார்கள். 

 

சரி, இதற்காக தான் விஜய் சேதுபதி இத்தனையும் செய்கிறார் என்றாலும், அங்கேயும் ஒரு சஸ்பென்ஸ், அதை தொடர்ந்து பயணிக்கும் அனுராக் காஷ்யப்பின் கதை, என்று காட்சிக்கு காட்சி சஸ்பென்ஸாக நகர்ந்தாலும், இறுதியில் என்ன நடக்கப் போகிறது?, விஜய் சேதுபதியின் மகள் யார்? உள்ளிட்ட அனைத்தையும் ரசிகர்களின் யூகங்களுக்கு ஏற்றபடியே இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் வடிவமைத்திருப்பதால், மஹாராஜா என்ற தலைப்பின் மீது இருந்த மாபெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களை ஏமாற்றி விடுகிறது.

 

மகள் மீது வெறித்தனமான பாசம் வைத்திருக்கும் தந்தையாக மகாராஜா என்ற கதாபாத்திரத்தில் இறுக்கமாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, தனது உடல் மொழி மூலமாகவே ஒட்டு மொத்த உணர்வுகளையும் வெளிப்படுத்தி கதாபாத்திரத்தை தாங்கி பிடித்திருக்கிறார். சிரிப்பு, அழுகை, கோபம் ஆகிய உணர்வுகளை உடல் மூலமாக அல்லாமல் கண்கள் மூலமாக வெளிப்படுத்தி சிறந்த நடிகராக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கும் விஜய் சேதுபதி, தனது 50 வது படத்தில் நட்சத்திரமாக ஜொலிக்க தவறியிருப்பது நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுக்கும்.

 

நாயகனுக்கு நிகரான கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமான தேர்வாக இருக்கும் அனுராக் காஷ்யப், அளவான நடிப்பு மூலம் கதபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நட்டி, ஆரம்பத்தில் கதையுடன் ஒட்டாமல் பயணித்தாலும், ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் விஸ்வரூபம் எடுப்பது திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

 

காமெடி வேடங்களில் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த சிங்கம் புலி, வேறு ஒரு முகத்தை காட்டி மிரட்டியிருக்கிறார். இதிலும் சில இடங்களில் தனது காமெடி முகத்தை காட்டினாலும் அதில் வில்லத்தனத்தைக் காட்டி ரசிகர்களை மிரள வைத்து விடுகிறார்.

 

பாரதிராஜா, அருள்தாஸ், முனீஷ்காந்த், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சச்சினா மெமிதாஸ், பாய்ஸ் மணிகண்டன், வினோத் சாகர் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் திரைக்கதையோட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்துவதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதனால் தான், சாதாரண கதாபாத்திரமாக இருந்தாலும் அவர்களுக்கு குளோஷப் வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சித்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் ”தாயே...தாயே..” பாடல் தந்தை - மகள் பாசத்தை கொண்டாட வைப்பதோடு, பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கும் பாடலாகவும் அமைந்திருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. 

 

படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், திணிக்கப்பட்ட திருப்பங்களுக்கு மிக தெளிவாக விளக்கம் கொடுத்து, எந்தவித குழப்பமும் இன்றி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

 

வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த திரைக்கதையாக இருந்தாலும், கதையில் பேசப்படும் தந்தை - மகள் செண்டிமெண்டை ரசிகர்கள் மனதில் மிக அழுத்தமாக பதிய வைக்கும் வகையில் படத்தை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், திரைக்கதையில் திருப்பங்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான்- லீனர் முறையில் கதை சொல்லியிருக்கிறார். 

 

படம் முழுவதிலும் வெவ்வேறு வடிவில் சஸ்பென்ஸ்கள் பயணிப்பதும், நான்-லீனர் முறையில் கதையை திறமையாக சொன்னதோடு, ரசிகர்களுக்கு புரியும்படி சொல்லியிருப்பதும் படத்திற்கு பலமாக இருந்தாலும், கதையின் மையப்புள்ளி மற்றும் இறுதி முடிவு ரசிகர்கள் யூகித்தது போல் நடப்பது படத்தை பலவீனப்படுத்தி விடுகிறது.

 

மொத்தத்தில், இந்த ‘மகாராஜா’ மக்கள் மனதில் இடம் பிடிக்க மாட்டார்.

 

ரேட்டிங் 3/5