Latest News :

’பயமறியா பிரம்மை’ திரைப்பட விமர்சனம்

9e3859133ea7feeb318d9b89ae7a820b.jpg

Casting : JD, Guru Somasundaram, Harish Uthaman, John Vijay, Sai Priyanka Ruth, Vinoth Sagar, Vishwanth, Harish Raju, Jack Robin, AK, Divya Ganesh

Directed By : Rahul Kabali

Music By : K

Produced By : Rahul Kabali

 

சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளி ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கையை புத்தமாக எழுதுவதற்காக எழுத்தாளர் கபிலன் அவரை சிறையில் சந்திக்கிறார். இருவருக்குமான உரையாடலின் போது, “புத்தகங்கள் மனிதர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கபிலன் சொல்கிறார். அது எப்படி நடக்கும்? என்று ஜெகதீஷ் கேட்கிறார். ஜெகதீஷின் கேள்விக்கான பதிலாக, அவரது வாழ்க்கையையே புத்தக வாசகர்களின் கண்ணோட்டத்தில் திரையில் காட்சிகளாக விவரிப்பது தான் ‘பயமறியா பிரம்மை’.

 

படத்தின் முதன்மை கதாபாத்திரம் ஜெகதீஷ் என்றாலும், ஜே.டி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகிய ஆறு பேர் ஜெகதீஷ் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்கள். இந்த ஆறு பேரும் ஜெகதீஷ் என்ற கதபாத்திரத்தின் வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்களை திரையில் மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

 

மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் மற்றும் ஏ.கே, எழுத்தாளர் கபிலனாக நடித்திருக்கும் வினோத் சாகர், ஜெகதீஷின் மனைவியாக நடித்திருக்கும் திவ்யா கணேஷ் என படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் தங்களது வேலை என்னவென்று தெரியவில்லை என்றாலும், இயக்குநர் சொன்னதை கேட்டு அப்படியே நடித்திருக்கிறார்கள்.

 

பிரவின் மற்றும் நந்தா ஆகியோரது ஒளிப்பதிவும், கே -வின் இசையும் படத்தை ஓரளவு காப்பாற்றியிருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் ராகுல் கபாலி, வித்தியாசமான முறையில் கதை சொல்கிறேன் என்ற பெயரில், கொலையை கலையாக சித்தரித்து அதிர வைப்பவர், அதை புரியாதபடி சொல்லி ரசிகர்களை தூங்க வைக்கிறார்.

 

ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கையை பல நட்சத்திரங்களை கொண்டு விவரிக்கும் இயக்குநர், அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்க்க தவறியிருக்கிறார். புத்தகங்கள் மனிதர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை படைத்தைவை, என்ற நல்ல விசயத்தை சரியாக சொல்லாமல் திரைக்கதையை மட்டும் இன்றி ரசிகர்களையும் இயக்குநர் கொலை செய்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘பயமறியா பிரம்மை’ கெட்ட கனவு.

 

ரேட்டிங் 1.5/5