Latest News :

’லாந்தர்’ திரைப்பட விமர்சனம்

1a28ec1bd9ce9702d9f7e89cbea5fde0.jpg

Casting : Vidaarth, Swetha Dorathy, Vinin, Sahana, Pasupathi Raj, Gajaaj, Meena Pushparaj, Madhan Arjunan

Directed By : Saji Saleem

Music By : MS Prraveen

Produced By : Shri Vishnu

 

கோவையை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரியான விதார்த் நேர்மையானவர். அவரது மனைவி நாயகி ஸ்வேதா டோரதி இருட்டு மற்றும் அதீத சத்தம் கேட்டால் சட்டென்று பயந்து  மயக்கமடைந்து விடும் பாதிப்பு உடையவர். அவருடைய பயத்தை போக்க வேண்டும் என்பதற்காக கோவை நகரை விட்டு புறநகரில் உள்ள பெரிய வீடு ஒன்றில் விதார்த் தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். கோவை நகரத்தில் முகம் தெரியாத ஒரு நபர், எதிர்படும் நபர்களை கடுமையாக தாக்குவதாக புகார்கள் வருகிறது. அந்த நபரை தேடி செல்லும் காவலர்கள் சிலரும் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைகிறார்கள். விசயம் அறியும் விதார்த், அந்த மர்ம மனிதரை பிடிக்க தானே நேரடியாக களத்தில் இறங்குகிறார். அவரது மனைவி வீட்டில் தனியாக இருக்கிறார். அந்த மர்ம நபர் யார்?, அவரை விதார்த் தலைமையிலான குழுவினர் பிடித்தார்களா? என்பது ஒரு கதை.

 

மறுபக்கம் அதே கோவையில் ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தனது மனைவியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, வேலைக்கு செல்கிறார். அவரது மனைவி தன் வீட்டில் இருக்கும் மருத்துவ அறிக்கை ஒன்றை பார்த்துவிட்டு, அது குறித்து மருத்துவர் ஒருவரிடம் விசாரிக்கிறார். அவர் சொல்லும் தகவல்களை கேட்டு அதிர்ச்சியடைந்து அவசர அவசரமாக வீட்டுக்கு வருகிறார். அவரை மருத்துவமனையில்  இருந்து  அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்து வரும் அவரது கணவர், பதற்றத்துடன் வீட்டுக்குள் நுழைகிறார். அதன் பிறகு அந்த வீட்டுக்குள் நடந்தது என்ன?, மருத்துவர் என்ன சொன்னார்? என்பது மற்றொரு கதை.

 

ஒரு இரவில் நடக்கும் இந்த இரண்டு கதைகளுக்கும், படத்தின் மையத்திருப்பத்திற்கும் என்ன தொடர்பு? என்பதை  பல்வேறு திருப்பங்களுடன் சொல்வதே ‘லாந்தர்’.

 

முதல் முறையாக ஐ.பி.எஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் விதார்த், தனது நடிப்பில் கம்பீரத்தை காட்டாமல், மனிதத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது வீட்டு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலரிடம் உடல் நலம் விசாரிப்பது, தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு உத்தரவு போடாமல், தானே களத்தில் இறங்கி பணியாற்றுவது, என்று அவரது ஒவ்வொரு நடவடிக்கையும், ”இப்படியும் ஒரு உயர் அதிகாரியா..!” என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, இளம் தம்பதியாக நடித்திருக்கும் விபின் மற்றும் சஹானா, பசுபதிராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் என படத்தில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஞான சவும்தார் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதம் நம்மை படத்தோட கட்டிப்போடுகிறது. கதை முழுவதும் இரவு நேரத்தில் நடந்தாலும் எந்த ஒரு இடத்திலும் உறுத்தல் இல்லாத ஒளிப்பதிவின் மூலம் படத்தின் தரத்தை உயரத்தியிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் எம்.எஸ்.பிரவீனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு ஓரளவு மட்டுமே கைகொடுத்திருக்கிறது.

 

சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் என்றாலே பெரும்பாலான இயக்குநர்கள் லான் - லீனர் முறை அல்லது பேர்லர் ஸ்டோரி என்று சொல்லக் கூடிய ஒரே சமயத்தில் நடக்கும் இரண்டு கதைகள், போன்ற அம்சங்களை தங்களது திரைக்கதைக்கு பக்கபலமாக பயன்படுத்திக் கொள்வது வழக்கம். அத்தகைய ஒரு வழக்கமான பாதையில் தான் இந்த படத்தின் இயக்குநர் சாஜி சலீமும் பயணித்திருக்கிறார்.

 

சாலையில் நடந்து செல்லும் முகம் தெரியாத மர்ம நபர், எதிர்படுபவர்களை கடுமையாக தாக்குகிறார், அவர் யார்?, அவரது பின்னணி என்ன? என்பது தான் கதையின் மையப்புள்ளி. இந்த கருவை சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதையாக சொல்ல வேண்டும் என்பதற்காக இயக்குநர் திரைக்கதையில் சொல்லியிருக்கும் சில விசயங்கள், படத்தின் நாயகன் விதார்த்தையும், காவல்துறையின் செயல்பாடுகளையும் மட்டம் தட்டுவது போல் இருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. அதே சமயம், திரைக்கதையில் இடம்பெறும் மற்றொரு கதை மற்றும் அதன் கதாபாத்திர வடிவமைப்புகள் படத்திற்கு சற்று கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்தாலும், அதில் நடித்தவர்களால் அந்த பகுதியும் ரசிகர்கள் மனதில் நிற்காமல் போகிறது.

 

படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் சுவாரஸ்யம் மற்றும் சஸ்பென்ஸ் அடுத்தடுத்த காட்சிகளின் போது குறைவதால், எதாவது பெருசாக செய்து ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிட வேண்டும், என்று இயக்குநர் மேற்கொண்ட கிளைமாக்ஸ் முயற்சி பெரும் சோகத்தையும் தாண்டி ரசிகர்களை சிரிக்க வைப்பது, சோதனைக்கே வந்த சோதனை.

 

இரண்டாம் பாதியில் சில குறைபாடுகள் இருந்தாலும், முதல் பாதி படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொன்னதற்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

 

மொத்தத்தில், ‘லாந்தர்’ வெளிச்சம் இல்லை.

 

ரேட்டிங் 2.5/5