Casting : Aju Varghese, Anarkali Marikar, Gokul Suresh, Ganesh Kumar
Directed By : Arun Chandu
Music By : Sankar Sharma
Produced By : Ajith Vinayaka Films
2050-ம் காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. மழை வெள்ளத்தில் நிலப்பரப்புகள் மூழ்குவதோடு, ஏலியன்களின் படையெடுப்பு, அரசின் அடக்குமுறை, பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை பயன்படுத்தும் கட்டாயம், உள்ளிட்டவைகளால் அச்சத்தோடு வாழும் மக்களை, கண்காணிக்க ஒவ்வொரு வீட்டிலும் அரசின் கருவி ஒன்று பொருத்தப்பட, அதை காவல்துறையும் கண்காணிக்கிறது. இப்படி ஒரு காலக்கட்டத்தில், ஏலியனை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார் எதிர்கால அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு உதவியாளர்களாக கோகுல் சுரேஷ் மற்றும் அஜு வர்க்கீஸ் இருக்கிறார்கள்.
ராணுவ வீரர் கணேஷ் குமார் பற்றி ஆவணப்படம் எடுப்பதற்காக சேனல் ஒன்று அவரை சந்திக்கிறது. அப்போது தனது வாழ்க்கைப் பற்றியும், தான் எதிர்கொண்ட ஏலியன் சம்பவங்கள் பற்றியும் கணேஷ் குமாரும், அவரது உதவியாளர்களும் விவரிக்கிறார்கள். ஆவணப்படம் எடுப்பதற்கான அவர்களின் உரையாடல்களையும், அதைச் சார்ந்த காட்சிகளும் ஆவணப்பட கோணத்தில் திரையில் விரிகிறது.
கடினமான சூழலில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த மூன்று ஆண் நபர்களுடன் ஒரு பெண் ஏலியன் இணைகிறது. 250 வயதாகும் அந்த ஏலியன் மீது, இதுவரை எந்த பெண்ணும் தன்னை திரும்பி கூட பார்க்கவில்லை என்று கவலைப்படும், 25 வயதாகும் கோகுல் சுரேஷுக்கு காதல் மலர்கிறது. அந்த காதல் காமெடியாக பயணித்தாலும், மறுபக்கம் செயற்கை நுண்ணறிவின் நன்மை மற்றும் தீமை, காலநிலை மாற்றத்தால் நாட்டில் அடிக்கடி ஏற்படும் மழை வெள்ள பாதிப்பு, பெட்ரோல் தட்டுப்பாடு, ஏலியன் உலகத்திற்கும் மனித இனத்திற்கும் உள்ள தொடர்பு என பல்வேறு விசயங்கள் பற்றி பேசும் இயக்குநர் இறுதியில், ஏலியன் பெண்ணுடனான காதல் என்ன ஆனது?, பூமியில் நடக்கும் ஏலியன் தாக்குதலுக்கு பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையை, ஆவணப்படத்தில் இருந்து வெளிவந்து திரைப்பட பாணியில் சொல்வது தான் ‘ககனாச்சாரி’.
கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ், கணேஷ் குமார் மற்றும் ஏலியனாக நடித்திருக்கும் அனார்கலி மரிகார் ஆகியோர் கதையின் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இதில், அனார்கலி மரிகார் வசனம் பேசாமல் பார்வையிலேயே பலவித உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். மற்ற மூவருமே மேடையில் ஸ்டண்டப் காமெடி செய்வது போல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் பேசுவதில் பல விசயங்கள் எதிர்காலத்தின் முக்கியமானவைகளாக இருந்தாலும், அதை முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் சொல்லி சிரிக்க வைக்கிறார்கள்.
ஏலியன்கள், காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு என அறிவியல் தொடர்பான பல விசயங்கள் இருப்பதால் இந்த படம் மொழியை தாண்டி சர்வதேச கதையாக இருந்தாலும், அவை காட்சி மொழியில் சொல்லாமல் முழுக்க முழுக்க பேச்சு மொழியில் சொல்லியிருப்பது, மலையாளம் மொழி தெரியாத ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. ஆங்கில சப் டைடில் போடப்பட்டாலும், ஒரு வசனத்தின் சப் டைடிலை படித்து முடிப்பதற்குள், மற்றொரு வசனத்தின் சப் டைடில் வந்துவிடுவதால், அதற்கு முன் பேசிய வசனமும் புரிவதில்லை, அதை தொடர்ந்து வரும் வசனமும் புரிவதில்லை. ஆகவே, சப் டைடில் படிப்பதற்காகவே தனியாக பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகு தான் இதுபோன்ற படங்களை பார்க்க வேண்டும் போல.
ஒளிப்பதிவாளர் சுர்ஜித் எஸ்.பய் கதைக்கான புதிய களத்தை மிக நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஆவணப்படம் பார்க்கும் உணர்வை கொடுக்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருப்பவர், கதை நடக்கும் கட்டிடம் மற்றும் அதன் பின்னணி, காட்சிகளுக்கு கொடுத்திருக்கும் வண்ணம் என அனைத்தும் கவனம் ஈர்க்கிறது.
சங்கர் சர்மாவின் இசையில் பின்னணி இசை வித்தியாசமாக இருக்கிறது. அவ்வபோது ஒலிக்கும் பீஜியம்கள் தனி கவனம் பெறுகிறது.
படத்தொகுப்பாளர் சீஜே அச்சு மற்றும் கலை இயக்குநர் எம்.பாவா இருவரது பணியும் படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. சாதாரண பொருட்களை கூட அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக காண்பித்து கவனிக்க வைக்கிறார்கள்.
படத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. ஹாலிவுட் படங்களில் பார்த்த பிரமாண்ட வி.எஃப்.எக்ஸ் காட்சிகளை மிக சாதாரண பட்ஜெட்டில் நிகழ்த்தி காட்டியிருக்கும் மெராகிக்கு மிகப்பெரிய பாராட்டுகள்.
எழுத்தாளர்கள் அருண் சந்து மற்றும் சிவ சாய் மிகப்பெரிய அறிவியல் கற்பனை கதையை நகைச்சுவை பாணியில் எழுதி ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்கு மிகப்பெரிய வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஏலியனாக இருந்தாலும், அவரது குரலை வயதான பெண்மணி குரலாக ஒலிக்கச் செய்திருக்கும் காட்சிகளில் ஒட்டுமொத்த திரையரங்கமே சிரிப்பு சத்தத்தால் அதிர்கிறது. அதே சமயம், அந்த குரல் மூலம் பெண்களின் குரலை உயரத்த செய்திருப்பது எழுத்தாளர்களின் வலிமையை காட்டுகிறது.
இயக்குநர் அருண் சந்துவின் முயற்சி வித்தியாசமாக இருப்பதோடு, அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும், காலநிலை மாற்றத்தினாலும் பூமியும், அதில் வாழும் மக்கள் இனம் எதிர்காலத்தில் எத்தகைய அச்சுறுத்தல்களை சந்திக்கப்போகிறது, என்ற கற்பனை, படம் பார்ப்பவர்கர்களுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தினாலும், அது தொடர்பாக இடம்பெறும் வசனங்கள் அனைத்து மக்களுக்கும் புரியும்படி இல்லாதது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
இத்தகைய கதை மொழிகளை தாண்டி சென்றடையக்கூடியது என்றாலும், அதை இயக்குநர் அருண் சந்து வசனங்கள் மூலமாகவே சொல்லி கதையை நகர்த்தி செல்வதால், மலையாள ரசிகர்களால் மட்டுமே இந்த படத்தை கொண்டாட முடியும்.
மொத்தத்தில், இந்த ‘ககனாச்சாரி’ மலையாளம் தெரிந்தவர்களுக்கும், ஆங்கில சப் டைடிலை அதீத வேகமாக படிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
ரேட்டிங் 3/5