Latest News :

’எமகாதகன்’ திரைப்பட விமர்சனம்

93f2208577a32ff84855653318ac22d0.jpg

Casting : Karthik Sriram, Rashmitha Hiwari, Sathish, Manoj

Directed By : Kishan Raj

Music By : Vignesh Raja

Produced By : Krishnamani Kannan (Singapore) and Kishan

 

முன்னொரு காலத்தில் பாஞ்சாயி என்ற பெண் விடுத்த சாபத்தால் குடும்பத்தின் மூத்த ஆண் பிள்ளைகள் திருமணம் செய்துக் கொண்டால் இறந்து விடுகிறார்கள். பாஞ்சாயின் சாபத்தில் இருந்து தப்பிப்பதற்காக அவரை கடவுளாகவும் ஊர் மக்கள் வழிபடுகிறார்கள். அப்படி இருந்தும் அவர்களின் சாபத்திற்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல், அவர்களின் நிலை அப்படியே தொடர்கிறது. அதே சமயம், சிலர் சாபத்தை நம்பாமல் திருமணம் செய்துக்கொண்டாலும் அவர்கள் சில நாட்களிலோ அல்லது  மாதங்களிலோ மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள். ஊர் கட்டுப்பாடு என்று கூறி இத்தகைய மரணங்கள் பற்றி காவல்துறையிடமும் சொல்லாத இந்த விசித்திர கிராமத்தைச் சேர்ந்த நாயகன் கார்த்திக் ஸ்ரீராம், தான் காதலித்த நாயகி ராஸ்மிதா ஹிவாரியை ஊர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துக்கொள்கிறார்.

 

சாபத்தை சட்டை செய்யாமல் திருமணம் செய்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழும் நாயகன் திடீரென்று ஊர் முச்சந்தியில் இறந்து கிடக்கிறார். அவரது மரணத்திற்கு பாஞ்சாயி சாபம் தான் காரணம், என்று ஊர் மக்கள் நம்பினாலும், நாயகி ராஸ்மிதா தனது கணவரின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை அறிந்துக்கொள்கிறார். அது பற்றி கண்டுபிடிப்பதற்காக களத்தில் இறங்கும் நாயகி அதில் வெற்றி பெற்றாரா?, சாமியின் பெயரால் நடக்கும் மர்ம மரணங்களின் பின்னணி என்ன? என்பதை பல திருப்பங்களுடன் சொல்வது தான் ‘எமகாதகன்’ படத்தின் கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் கார்த்திக் ஸ்ரீராம், நாயகியாக நடித்திருக்கும் ராஸ்மிதா ஹிவாரி, பூசாரியாக நடித்திருக்கும் தசரதன், நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மனோஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் அளவாக நடித்திருக்கிறார்கள். இவர்களை தவிர பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நபர், தனது பேச்சாலும், உடல் மொழியாலும் இறுக்கமாக பயணிக்கும் திரைக்கதையில் காமெடியை கலக்கச் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார்.

 

விக்னேஷ் ராஜா இசையில், ஹரிஹரசுப்ரமணியன் மற்றும் விஜே விஜய் ஆகியோரது வரிகளில் பாடல்கள் அனைத்தும் இனிமை ரகம். பின்னணி இசை சஸ்பென்ஸ் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பாஞ்சாயி பற்றிய காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெறும் போது ஒலிக்கும் பீஜியம் தனி கவனம் பெறுகிறது.

 

ஒளிப்பதிவாளர் எல்.டி-யின் கேமரா எளிமையான கிராமத்து இடங்களை அழகுமிகுந்தவைகளாக காட்டியிருக்கியிருப்பதோடு, நடிகர்களின் இயல்பான நடிப்பை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

 

குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களைச் சுற்றியே கதை நகர்வதால், மர்ம மரணங்களின் பின்னணியில் இருப்பவர் யார்? என்பதை ரசிகர்கள் யூகித்தாலும், சில காட்சிகளில் யூகங்களை உடைத்து காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராம்நாத்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் கிஷன் ராஜ், குலதெய்வங்களுக்கு பின்னணியில் இருக்கும் கதையை மையமாக வைத்துக்கொண்டு ஒரு எளிமையான சஸ்பென்ஸ் திரில்லரை மிக சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்.

 

படத்தில் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் மட்டுமே வருவதாலும், சிறு கிராமத்தில் கதை நடப்பதாலும், குற்றவாளி யார்? என்பதை நாம் யூகிப்பது எளிமையாக இருக்கிறது. ஆனால், சாபம் என்ற போர்வையில் குடும்பத்தின் மூத்த மகன்கள் கொல்லப்படுவது ஏன்? என்ற கேள்வி துவக்கம் முதல் முடிவு வரை படத்தை விறுவிறுப்பாகவும், அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடனும் பயணிக்க வைக்கிறது.

 

சில குறைகள் இருந்தாலும், கிராமத்து பின்னணியில், எளிமையான கதை சொல்லல் முறையில், கிராமத்து மனிதர்களை வைத்துக்கொண்டு ஒரு நேர்த்தியான சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்ததில் இயக்குநர் கிஷன் ராஜ் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ’எமகாதகன்’ ரசிகர்களை ஏமாற்றவில்லை.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery