Latest News :

’ராயன்’ திரைப்பட விமர்சனம்

589274ca1991773a648abdd57a6cf249.jpg

Casting : Dhanush, SJ Surya, Prakash Raj, Selvaraghavan, Sundeep Kishan, Kaalidas Jayaram, Dushara Vijayan, Aparna Balamurali, Varalakshmi Sarathkumar, Diliban, Saravanan

Directed By : Dhanu

Music By : AR Rahman

Produced By : Sun Pictures - M.Kalanithimaran

 

தாய், தந்தை இல்லாத தனுஷ், தனது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையை வளர்த்து வருகிறார். அவரது இருப்பிடம் சுற்றி ரவுடிசமும், அதில் அவர் ஈடுபடக்கூடிய சூழல் இருந்தாலும், அவற்றில் இருந்து ஒதுங்கியிருப்பதோடு, தனது தம்பிகளையும் அந்த பக்கம் செல்லவிடாமல் அவர்களை ஆளாக்க நினைக்கிறார். ஆனால், அவரது தம்பி செய்யும் தவறால், தனுஷ் கத்தி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கை என்னவானது, அவரது தம்பிகள் மற்றும் தங்கையின் வாழ்க்கை அவர் நினைத்தது போல் அமைந்ததா?, இல்லையா? என்பதை ரத்தமும், சதையுமாக சொல்வது தான் ‘ராயன்’.

 

50 வது படத்தில் நாயகனாக மட்டும் இன்றி இயக்குநராகவும் பயணித்திருக்கும் தனுஷ், தனது ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை மனதில் வைத்து திரைக்கதையை கையாண்டிருப்பதோடு, ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து விதமான உணர்வுகளையும் உள்ளடக்கிய படமாக கொடுத்திருக்கிறார்.

 

மொட்டை தலை மற்றும் பெரிய மீசையுடன் கம்பீரமான தோற்றத்தில் ராயன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ், தனது கதாபாத்திரத்தை மிக பக்குவமாக கையாண்டிருக்கிறார். ”இத்தனை பேரை கொலை செய்தது இவரா?” என்ற கேள்விக்கு தன் கண்கள் மூலமாகவே பதில் சொல்லும் தனுஷின் ஒவ்வொரு அசைவும், அவரது கதாபாத்திரத்தையும், அதன் வீரியத்தையும் மெய்ப்பிக்க வைக்கிறது. தம்பிகள் மீதான அக்கறை, தங்கையின் மீதான பாசம் ஆகியவற்றுடன், துரோகத்தின் வலியை வெளிப்படுத்தும் இடங்களில் நடிகராக கைதட்டல் பெறும் தனுஷ், ஆக்‌ஷன் காட்சிகளிலும், மாஸ் காட்சிகளிலும் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

 

தனுஷின் தம்பிகளாக நடித்திருக்கும் சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம், வயதுக்கு ஏற்ப துள்ளல் நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். தனுஷின் தங்கையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், தனக்கு நேர்த்த கொடுமையை காட்டிலும், தனது அண்ணனுக்கு நடந்த துரோகத்திற்கு எதிராக வெகுண்டெழுவது கவனம் ஈர்க்கிறது.

 

வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான அளப்பறை நடிப்பு மூலம் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார். 

 

செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன், திலீபன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

படத்தின் டைடில் இடம்பெறும் போதே பின்னணி இசை மூலம் கவனம் ஈர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், தனது பீஜியம் மூலம் காட்சிகளின் வேகத்தையும், விறுவிறுப்பையும் அதிகரிக்கச் செய்கிறார். பாடல்கள் ஏற்கனவே முனுமுனுக்க வைத்த நிலையில், அதை படமாக்கிய விதம் சிலிர்த்து எழ வைக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் கேமரா காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, தெறிக்கும் ரத்தத்தின் வண்ணம் திரையில் தெரியாமல் இருப்பதற்காக பல காட்சிகளில் சிவப்பு விளக்குகளின் வெளிச்சத்தை படரவிட்டிருக்கிறார்.

 

ராயனின் இளம் வயது கிராமத்து வீடு, சென்னை குடிசைப்பகுதி, கிளைமாக்ஸ் பாடல் காட்சியின் பிரமாண்ட அரங்கம் என்று கலை இயக்குநர் ஜாக்கியின் கைவண்ணம் படம் முழுவதும் தெரிகிறது.

 

ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்தும் விதத்தில் காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா .

 

அடித்தோம், வெட்டினோம், குத்தினோம் என்று இல்லாமல் சண்டைக்காட்சிகளை உணர்வுப்பூர்வமாக செய்து கவனம் ஈர்க்கிறார் சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன்.

 

50 வது படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பு, இயக்குநராக முதல் படத்தில் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் இரண்டாம் படத்தின் மீது ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களுக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு, என்று ஏகப்பட்ட பொறுப்புகளை சுமந்துகொண்டு பயணித்திருக்கும் தனுஷ், தனது ரசிகர்களை திருப்திப்படுத்தியிருப்பதோடு, சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்திருக்கிறார்.

 

தம்பிகள் மற்றும் தங்கை செண்டிமெண்ட்டோடு ஆரம்பித்து பாசக்கார அண்ணனான ராயனை அமைதியாக காட்டும் இயக்குநர் தனுஷ், இரண்டாம் பாதியில் அதிரடி ஆக்‌ஷன், கத்தி, கொலை என்று திரைகக்தையையும், காட்சிகளையும் வேகமாக நகர்த்தி மாஸ் காட்டுகிறார்.

 

வித்தியாசமான கதைக்களத்தில் இயக்குநராக அறிமுகமாகி முத்திரை பதித்த தனுஷ், இதில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் களத்தை, தங்கை செண்டிமெண்டோடு சேர்த்து, தனது ரசிகர்களை மட்டும் இன்றி பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமான படமாக கொடுத்து மீண்டும் இயக்குநராக முத்திரை பதித்திருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘ராயன்’ கமர்ஷியல் ரசிகர்களுக்காக.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery