Casting : Nakul, Arthana Binu, KS Ravikumar, Vamsi Krishna, Anandaraj, Munishkanth, Reding Kingsly, Premkumar, Padawa Gopi, Sesu
Directed By : RGK
Music By : NV Arun
Produced By : Dato B.Subaskaran
பல்வேறு அறிவியல் முன்னேற்றங்களை கண்டு வரும் இவ்வுலகில் எதிர்காலத்தில் நல்ல செயல்களில் ஈடுபடும் மக்களை குற்றவாளிகளாகவும், தீய செயல்களில் ஈடுபடுபவர்களை உத்தமர்களாகவும் பார்க்கப்படலாம், என்ற கற்பனையை காமெடியாக சொல்வதே ‘வாஸ்கோடகாமா’ படத்தின் கதை.
நல்லது செய்தால் கைது செய்து வாஸ்கோடகாமா என்ற சிறையில் அடைக்கும் காவல்துறை, கெட்டது செய்பவர்களை விடுதலை செய்கிறது. இப்படிப்பட்ட மாறுபட்ட சமூகத்தில் தொடர்ந்து நல்லவனாகவே பயணிக்கும் நாயகன் நகுலும், கெட்டவராக இருந்துவிட்டு வாஸ்கோடகாமா சிறைக்குள் நுழைவதற்காக நல்லவராக நடிக்கும் வம்சி கிருஷ்ணாவும் கைதிகளாக சிறைக்குள் செல்கிறார்கள். அவர்கள் ஏன் அந்த சிறைக்கு செல்கிறார்கள், என்பதை பல கிளைக்கதைகளுடன் நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆர்.ஜி.கே.
காமெடி கதையில் லாஜிக் பார்க்க கூடாது என்று சொல்வதுண்டு, ஆனால் கதையையே பார்க்க கூடாது என்ற புதிய கண்ணோட்டத்தில் இயக்குநர் ஆர்.ஜி.கே, கண்டபடி கதை சொல்லி ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார். சரி கதை தான் இப்படி சோதிக்கிறது என்றால், காமெடி காட்சிகளாவது சிரிக்கும்படி இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை.
ஒருவரிக்கதையை வித்தியாசமாக யோசித்துவிட்டு, அதற்கான திரைக்கதையை பலவித குழப்பங்களோடு எழுதியிருக்கும் இயக்குநர் ஆர்.ஜி.கே, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, என்ன நடக்கிறது என்று புரிந்துக்கொள்ளாதபடி ரசிகர்களை குழப்பத்தோடு படம் பார்க்க வைத்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் நகுல், நாயகியாக நடித்திருக்கும் அர்த்தன பினு, வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், பிரேம்குமார், படவா கோபி, சேசு என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் என்.வி.அருணின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் தமிழ்குமரன் நிறைய கஷ்ட்டப்பட்டிருப்பார் என்பது காட்சிகளைப் பார்த்தாலே தெரிகிறது.
எதிர்காலத்தில் இந்த சமூகமும், மக்களின் வாழ்க்கையும் மாறுபட்டு இருக்கும், என்ற இயக்குநர் ஆர்.ஜி.கே-வின் கற்பனை வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தாலும், அதை முழு திரைப்படமாக அதே சுவாரஸ்யத்துடன் கொடுப்பதற்கு இயக்குநர் தவறியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
நடிகர் நகுல் தமிழ் சினிமாவில் தனக்கு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று இந்த வாஸ்கோடகாமா படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தார். அவரை மட்டும் இன்றி, ரசிகர்களையும் படம் ஏமாற்றிவிட்டது.
மொத்தத்தில், இந்த ‘வாஸ்கோடகாமா’ ரசிகர்களுக்கான தண்டனை.
ரேட்டிங் 2/5