Casting : Yogi Babu, Gouri G Kishan, M.S.Baskar, Chinni Jeyandh, Madhumitha, Sha Ra, Jessi, Kullapuli Leela, Akshath
Directed By : Chimbudeven
Music By : Ghibran
Produced By : Maali and Maanvi Movie Makers & Chimbudeven Entertainment - Prabha Premkumar
உள்ளூர் அரசியலையும், உலக அரசியலையும் ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை கலந்து தனது படங்களில் பேசும் இயக்குநர் சிம்புதேவன், அதே பாணியில் பூர்வகுடிகளின் உரிமை மற்றும் அவர்களை அவர்களது இடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வியாபார நகரங்களின் முன்னேற்ற அரசியலை நடுக்கடலில் பேசியிருப்பது தான் ‘போட்’.
இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி செய்யும் நாடுகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தும் எதிரி படைகள், சென்னையிலும் குண்டு வீச திட்டமிடுகிறது. அதன்படி இந்த தகவல் மக்களிடையே பரவ, தப்பிப்பதற்காக பலர் சென்னையை விட்டு வெளியேறுகிறார்கள். மீனவர்கள் பலர் தங்களது படகுகள் மூலம் நடுக்கடலுக்கு சென்று தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன்படி, காசிமேடு பகுதி மீனவரான யோகி பாபு தனது பாட்டியுடன் தனது துடுப்பு படகில் நடுக்கடலுக்கு செல்ல முயற்சிக்கிறார். அவருடன் வெவ்வேறு மொழி பேசும் இந்தியர்களும் படகில் பயணிக்கிறார்கள். நடுக்கடலுக்கு சென்றதும் படகு பழுதடைந்து விடுகிறது. அதனால், தொடர்ந்து பயணிக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கும் படகை கரைக்கு செலுத்த வேண்டும் என்றால், படகில் இருப்பவர்களில் மூன்று பேர் வெளியேற வேண்டும், என்று படகின் உரிமையாளர் யோகி பாபு சொல்கிறார். நடுக்கடலில் இருக்கும் படகில் இருந்து எப்படி வெளியேற முடியும், என்று அனைவரும் யோசிக்க, அவர்களை சுற்றி மற்றொரு ஆபத்து உருவாகிறது. ஆபத்துகளில் இருந்து தப்பித்து இவர்கள் அனைவரும் கரைக்கு சென்றடைந்தார்களா? அல்லது அந்த மூன்று பேரை வெளியேற்றிவிட்டு மற்றவர்கள் தப்பித்தார்களா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
வெவ்வேறு மொழி பேசும் இந்தியர்கள் மற்றும் ஆங்கிலேயே காவல்துறை அதிகாரி ஆகியோர் இடையே நடைபெறும் விவாதங்கள் மூலமாக இந்திய சுதந்திரப் போரில் தமிழகத்தின் பங்கு, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி, தாழ்ந்தவன் - உயர்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வு, பூர்வக்குடிகளை விரட்டியடிக்கும் வந்தேரிகள், வியாபார நகரங்களில் வசிக்கும் பூர்வக்குடிகளின் முன்னேற்றத்தை தடுக்கும் குடிபெயர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல்களையும் அலசும் இயக்குநர் சிம்புதேவன், குறிப்பாக சென்னையின் பூர்வகுடிகளின் வறுமை நிலை மற்றும் அவர்கள் சென்னையை விட்டு படிபடியாக வெளியேற்றப்படுதல் ஆகியவற்றை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
கதையின் நாயகனாக காசிமேடு பகுதி மீனவராக நடித்திருக்கும் யோகி பாபு, தனது வழக்கமான உருவ கேலி நகைச்சுவை வசனங்களை தவிர்த்துவிட்டு, இயக்குநர் சிம்புதேவன் சொன்னதை மட்டுமே பேசி நடித்திருப்பது கதைக்கு பலமாகவும், ரசிகர்களுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது.
யோகி பாபுடன் படகில் பயணிக்கும் குல்லபுலி லீலா, கெளரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, சாரா, ஜெஸ்ஸி, அக்ஷத் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி வசனங்களை சரியாக உச்சரித்திருக்கிறார்கள். படகில் அமர்ந்தபடி நடித்திருந்தாலும் வசனங்களுக்கு ஏற்ப உடல்மொழியை வெளிப்படுத்தி கதபாத்திரங்களாக பயணிக்க முயற்சித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா படகை சுற்றி வலம் வந்தாலும், கடலின் வெவ்வேறு வண்ணங்களையும், அதன் இரமாண்டத்தையும் திரையில் கொண்டு வர அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.
படம் முழுவதும் கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருந்தாலும், தனது இசை மூலம் கதை சொல்ல முயற்சித்திருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறார்.
தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பும், டி.சந்தானத்தின் கலை இயக்கமும் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது.
கடல் பயணம் தொடங்கியது முதல் காட்சிகளுக்கு ஏற்ப தலைப்புகளை போட்டு நையாண்டி செய்யும் இயக்குநர் சிம்புதேவன், கடல் மூலமாக ஃபேண்டஸி அம்சங்களை திரைக்கதையில் புகுத்தியிருந்தாலும் அதில் சிலது திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. இருந்தாலும், சிம்புதேவன் பேச முயற்சித்திருக்கும் அரசியலும் அதைச் சார்ந்த வசனங்களும் கைதட்டல் பெறுகிறது.
கதபாத்திரங்கள் இடையே நிகழும் உரையாடல்கள் கவனம் ஈர்க்கும் அளவுக்கு படகு பயணம் கவனம் ஈர்க்கவில்லை. நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் குறுகிய வட்டத்திற்குள் பயணிப்பதால், திரைக்கதை தொய்வடைந்து விடுகிறது.
மொத்தத்தில், இந்த ‘போட்’ கவிழ்ந்துவிட்டது.
ரேட்டிங் 3/5