Latest News :

’சூரியனும் சூரியகாந்தியும்’ திரைப்பட விமர்சனம்

025d117ac46a06fed9a2ae587b5fa232.jpg

Casting : Sri Hari, Appukkutty, AL Raja, Vikram Sundar, Radhi Umaiyal, Sandhana Bharathi, Raja Simman, Mangala Kurukkal, Sachin, Sesu, Varsha, Revathi

Directed By : AL Raja

Music By : RS Ravi Priyan

Produced By : DD Cinema Studios

 

உதவி இயக்குநரான அப்புக்குட்டி, படம் இயக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட, மதுரையைச் சேர்ந்த தயாரிப்பாளர் சந்தான பாரதியிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி, சாதி வெறிப்பிடித்த சில சுயநலவாதிகளால் காதல் ஜோடிகள் எப்படி சீரழிக்கப்படுகிறார்கள், சாதியை தவறாக பயன்படுத்தி மக்களை பிளவுப்படுத்தி அதில் தங்கள் சுயலாபத்திற்காக சிலர் எப்படி செயல்படுகிறார்கள், என்ற கதையை அப்புக்குட்டி சொல்கிறார். 

 

நாயகன் சூரியன், செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகளான நாயகி சூரியகாந்தியை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு சாதியால் பிரச்சனை வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தங்களது சுயலாபத்திற்காக சாதியை பயன்படுத்திக் கொள்ளும் சாதி வெறிப்பித்த சிலர், சூரியகாந்தியை அடைய நினைக்கிறார்கள். இதற்கிடையே, தொலைந்து போன சூரியனின் கைப்பேசி மூலம் நண்பர்களாகும் கருப்பு மற்றும் அய்யனார், சூரியன் மற்றும் சூரியகாந்தியின் காதலுக்கு உதவ முன்வருவதோடு, அவர்களை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். இவர்களது முயற்சி வெற்றி பெற்றதா?, சூரியனும், சூரியகாந்தியும் ஒன்று சேர்ந்தார்களா?, இந்த கதை மூலம் அப்புக்குட்டியின் 20 வருட இயக்குநர் கனவு நினைவானதா? என்பதோடு இவை அனைத்திலும் தொடர்புடைய சாதி பாகுபாட்டினால் பலரது கனவு எப்படி சிதைக்கப்படுகிறது, என்பதை சொல்வது தான் ‘சூரியனும் சூரியகாந்தியும்’.

 

படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அப்புக்குட்டி, ஸ்ரீஹரி, இயக்குநர் ஏ.எல்.ராஜா, விக்ரம் சுந்தர் ஆகிய நான்கு பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

 

புதுமுக நடிகர் ஸ்ரீஹரி பார்ப்பதற்கு சாக்லெட் பாய் போல் இருந்தாலும், தென் மாவட்ட இளைஞராக பேச்சிலும், நடிப்பிலும் அய்யனாராக அசத்தியிருக்கிறார். கருப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் ஏ.எல்.ராஜா, குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, செண்டிமெண்ட் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

 

Sooriyanum Sooriyagandhiyum Movie Review

 

சினிமா கனவோடு பயணிப்பவர்களின் வலிகளை ரசிகர்களிடத்தில் கடத்தும் விதமாக இயல்பாக நடித்திருக்கும் அப்புக்குட்டி, பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.

 

கதையில் வரும் சூரியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் சுந்தர் மற்றும் சூரியகாந்தியாக நடித்திருக்கும் ரிதி உமையாள் இருவரது காதல் காட்சிகள் கலர்புல்லாகவும், இளசுகளை ஈர்க்கும் விதத்திலும் இருக்கிறது. 

 

வில்லனாக நடித்திருக்கும் ராஜசிம்மனின் அனுபவமான நடிப்பு மற்றும் திரை தோற்றம் சாதி வெறிப்பிடித்தவர்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது.

 

மங்களநாத குருக்கள், சச்சின், வர்ஷா, ரேவதி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். லொள்ளு சபா சேசு வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது.

 

இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ரவி பிரியனின் இசையில் பாடல்கள் அனைத்திலும் கிராமத்து மனம் வீசுகிறது. அதிலும், “அடியே அடி என்ன பெத்த ஆத்தா...” பாடல் திரும்ப திரும்ப கேட்க வைப்பதோடு, முனுமுனுக்கவும் வைக்கிறது.

 

திருவாரூர் ராஜாவின் ஒளிப்பதிவும், வீரசெந்தில்ராஜாவின் படத்தொகுப்பும்,  ஜெயசீலனின் கலை இயக்கமும் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.

 

காதல் கதை மற்றும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று போராடும் இளைஞனின் கதை, இவை இரண்டையும் சாதி பாகுபாடு என்ற களத்துடன் இணைத்து கமர்ஷியலாகவும், சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும் இயக்குநர் ஏ.எல்.ராஜா கொடுத்திருக்கிறார்.

 

சாதி பிரிவினை பற்றி பல படங்கள் வந்துக்கொண்டிருந்தாலும், சாதி பாகுபாடு  ஒருவரின் கனவையும், ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்தை எப்படி சிதைக்கிறது என்பதோடு, நட்பிலும் எப்படி நஞ்சாக கலந்து மக்களை அழிக்கிறது என்பதை மிக அழுத்தமாக இயக்குநர் ஏ.எல்.ராஜா பதிவு செய்திருக்கிறார்.

 

குறிப்பிட்ட ஒரு சாதி தலைவர்களை மட்டுமே குறை சொல்லாமல், அனைத்து சாதியிலும் சுயநலம் மிக்க தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களின் சுயலாபத்திற்காக சாதி எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது, அதன் மூலம் பல குடும்பங்கள் எப்படி பாதிக்கப்படுகிறது, என்பதை இயக்குநர் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

சாதியால் பாதிக்கப்படும் காதலர்கள் பற்றிய கதையை கேட்டதும் மகிச்சியடைந்து படம் தயாரிக்க முன்வரும் தயாரிப்பாளர், அடுத்த சில நிமிடங்களில் அப்புக்குட்டியிடம் கேட்கும் கேள்வியின் மூலம் சினிமாத்துறையிலும் சாதி வெறிப்பிடித்தவர்கள் இருக்கிறார்கள், என்பதை கோடிட்டி காட்டியதோடு, மக்களை மகிழ்விக்கும் கமர்ஷியல் படமாக மட்டும் அல்லாமல், சமூகத்திற்கு தேவையான ஒரு படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் ஏ.எல்.ராஜாவை மனதாரா பாராட்டலாம்.

 

மொத்தத்தில்,  ‘சூரியனும் சூரியகாந்தியும்’ பொழுதுபோக்கிற்கான படம் மட்டும் அல்ல, மக்களுக்கு தேவையான தரமான படைப்பு.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery