Casting : Keerthy Suresh, M.S Bhaskar, Devadarshini, Ravindra Vijay, Anandsami
Directed By : Suman Kumar
Music By : Sean Roldan
Produced By : Hombale Films - Vijay Kiragandur
இந்தி எதிர்ப்பு காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. புனைப் பெயரில் கதைகள் எழுதும் எழுத்தாளராகவும், தீவிரமான இந்தி எதிர்ப்பாளருமான நாயகி கீர்த்தி சுரேஷ், எந்த வகையிலும் தனது ஊரான வள்ளுவன் பேட்டையில் இந்தி மொழி நுழைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக மக்களை திரட்டி பல போராட்டங்களையும் நடத்தி வருகிறார். ஆனால், சூழ்நிலை அவரை இந்தி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளுகிறது.
இந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராடுவதில் வீரமங்கையாக பலருக்கு முன்மாதிரியாக திகழும் கீர்த்தி சுரேஷ், தனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்காக இந்தி தேர்வில் வெற்றி பெற இந்தி மொழியை கற்றுக்கொண்டாரா அல்லது வீரமங்கையாக நின்று தொடர்ந்து இந்தி மொழியை எதிர்த்ததோடு, தனது பிரச்சனையில் இருந்தும் விடுபட்டாரா? என்பதை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘ரகு தாத்தா’.
1981 ஆம் ஆண்டு வெளியான கே.பாக்யராஜின் ‘இன்று போய் நாளை வா’ திரைப்படத்தில் ”ரகு தாத்தா” என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு இந்தி கற்றுக்கொடுக்கும் காட்சியின் மூலம் வயிறு வலிக்க சிரிக்க வைத்திருப்பார்கள். அந்த வார்த்தையை தலைப்பாக வைத்தாலும், அந்த காட்சியில் இருந்த நகைச்சுவை இந்த படத்தில் துளி கூட இல்லாதது பெரும் ஏமாற்றம்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் இந்தி திணிப்பை எதிர்ப்பதோடு, பெண்ணியம் பேசும் புரட்சிகரமான மங்கையாக வலம் வந்து, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். ஆனால், அவரால் நகைச்சுவை காட்சிகளில் சரியாக ஸ்கோர் செய்ய முடியவில்லை.
கீர்த்தி சுரேஷின் தாத்தாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், கூட்டமே இல்லாத பொதுக்கூட்டத்தில் தொண்டை வலிக்க பேசுபவரை போல் தன்னால் முடிந்தவரை ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சியினால் சில இடங்களில் ரசிகர்கள் சிரித்தாலும் பல இடங்களில் என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேவதர்சினி மற்றும் ஆனந்தசாமி இருவரை தவிர மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயம் இல்லாதவர்களாக இருப்பதும், அவர்களின் நடிப்பு திரைக்கதையோடு ஒட்ட மறுப்பதாலும், படமும் பார்வையாளர்களிடம் ஒட்டாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில் போல் விபத்தில் சிக்கி படத்தை சிதைத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் யாமினி யக்ஞமூர்த்தி, பீரியட் படம் என்பதற்காக கொஞ்சம் மெனக்கெட்டிருந்தாலும், அங்கும் சில லாஜிக் மீறல்கள் இருக்கத்தான் செய்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் சுமன் குமார், இந்தி திணிப்பு மற்றும் அதற்கு எதிரான போராட்டத்தை கதைக்களமாக எடுத்துக்கொண்டாலும் எந்த இடத்திலும் சர்ச்சையான விசயங்களை பேசாமல் மற்றும் காட்சிப்படுத்தாமல் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதற்கான வாய்ப்பு திரைக்கதையில் இருந்தாலும், அதில் கவனம் செலுத்தாமல் குறிப்பிட்ட பட்ஜெட்டில் படத்தை முடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி ரசிகர்களை சிரிக்க வைப்பதற்கு பதிலாக கடுபேற்றியிருக்கிறார்.
என்னதான் நடக்கிறது, என்ன சொல்ல வருகிறார்கள், என்று படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை எதுவுமே புரியாமல் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு படத்தின் இறுதிக் காட்சிக்கு முன்னதாக சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே ஆறுதல் அளிக்கும் வகையில் சற்று சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், இந்த ‘ரகு தாத்தா’ ரசிகர்களை கவரவில்லை.
ரேட்டிங் 2/5