அஜித்திடம் கற்றுக் கொண்ட கபிலன் வைரமுத்து!
பாடலாசிரியர் வைரமுத்துவின் மகனான கபிலன் வைரமுத்து, கவிதை தொகுப்புகள், சிறு கதைகள் மற்றும் நாவல்கள் எழுதுவதுடன், பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது அனைவரும் அறிந்ததே. இதற்கிடையே, கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கவண்’ படத்தில் திரைக்கதை எழுத்தாளராக கபிலன் வைரமுத்து பணியாற்றினார். அப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து கதை விவாதம் மற்றும் திரைக்கதை எழுதுவது தொடர்பாக இவருக்கு பல வாய்ப்புகள் வருகின்றன.
அப்படி ஒரு வாய்ப்பாக கபிலன் வைரமுத்துக்கு கிடைத்த படம் தான் அஜித்தின் ‘விவேகம்’. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை விவாதம் மற்றும் திரைக்கதை எழுதுவதிலும் பணியாற்றியுள்ள கபிலன் வைரமுத்து, இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளார்.
ஆகஸ்ட் 24 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை தமிழகமே பெரும் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க, இப்படத்தில் பணியாற்றியது குறித்து கபிலன் வைரமுத்து கூறுகையில், “விவேகம் படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியிருப்பதோடு, கதை மற்றும் திரைக்கதையில் பணியாற்றியிருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் நான் திறம்பட பணிபுரிய இயக்குநர் சிவா என் மீது நம்பிக்கை வைத்து, வேண்டிய சுதந்திரத்தை வழங்கினார். அவரின் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லும்.
இந்த படத்தின் மூலம் அஜித் சாரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடன் உரையாடியது ஒரு நல்ல புத்தகத்தை படித்த உணர்வை தந்தது. அவரது தொலைநோக்கு பார்வை, தொழில் பக்தி, உணவு பழக்க வழக்கம், கடுமையான உடல் பயிற்சி ஆகியவை அவர் மேல் நான் கொண்டு உள்ள மரியாதையை மேலும் பெரிதாக்கியது. விவேகம் படத்தின் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது. நான் எதிர்ப்பார்த்ததை விட காட்சிகள் அமைப்புகள் அருமையாக அமைந்து உள்ளன. ரசிகர்களுடன் இணைந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்காக நானும் உற்சாகத்துடன் கார்த்திருக்கிறேன்.” என்றார்.