அமானுஷ்ய கதை சொல்லி மிரட்ட வருகிறார் கேபிள் சங்கர்!

நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் 'அந்தாலஜி' வகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். அதில் இடம்பெறும் குறும்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியிருப்பார்கள்.. அந்தந்த குறும்படங்களின் க்ளைமாக்ஸ் அந்தந்த குறும்படங்களின் இறுதியிலேயே இடம்பெற்றிருக்கும். இதுதான் உலக சினிமாவிலும் வழக்கமாக இருந்து வருகிறது.
ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில், ஆனால் ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. இது உலக அளவில் முதல் முயற்சி என்றே சொல்லலாம்.
பிரபல எழுத்தாளரும், ’தொட்டால் தொடரும்’ பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். தவிர படத்தின் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.
இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார். எழுத்தாளர் மட்டுமல்லாமல் மனிதன், சென்னையில் ஒரு நாள், வனயுத்தம், வனமகன் ஆகிய படங்களின் மூலம் ஒரு வசனகர்த்தாவாகவும் அடையாளம் காணப்பட்டவர் இவர். தற்போது இதில் ஒர் அத்தியாயத்தை எழுதி, இயக்குவதன் மூலம் முதல் முறையாய் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.
இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.
பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத், பேபி, வீர சிவாஜி, நிசப்தம் படங்களில் நடித்த பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர். படத்தின் ப்ரோமோ சாங்கை சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். இவர் மாதவன் - விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ மற்றும் விரைவில் வெளிவரவுள்ள ’புரியாத புதிர்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து கவனம் ஈர்த்தவர். இந்தப்பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப்பாடல், நடனக்கலைஞர்களை கொண்டு படமாக்கப்பட்டு, 2டி அனிமேஷனாகவும் மாற்றப்பட்டுள்ளது இன்னொரு ஹைலைட்.
‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப்படத்தின் பாடல் மற்றும் டிரைலரை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் இலங்கையில் மிக பிரமாண்ட முறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் படத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் பஸ்ட் லுக் மோஷன் போஸ்ட்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் வெளியிட்டார். அது அனைத்து தரப்பு மக்களிடமும் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.