சினிமாவினால் தான் இளைஞர்கள் புகைப்பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் : அன்புமணி ராமதாஸ் காட்டம்
திரைப்படங்களைப் பார்த்து தான் இளைஞர்கள் புகைப்பழக்கத்தை கற்றுக்கொள்கிறார்கள், என்று பா.ம.க இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர்.அன்புமணி ராமதாஸ், கூறியுள்ளார்.
பதநிச கம்யூனிகேஷன்ஸ் தயாரிப்பில், ராம்போ நவகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் ‘ஏ ஸ்ட்ரோக் ஆஃப் டிஸ்ஸொனன்ஸ்’ (A Stroke of Disssonance). உலக சினிமா தரத்தில் எடுக்கப்பட்டுள்ள இக்குறும்படத்தில் நாயகனாக குணாநிதி என்பவர் நடித்திருக்கிறார். இவர் பா.மா.க நிறுவனர் ராமதாஸின் பேரன் ஆவார்.
இந்த குறும்படத்தின் சிறப்பு காட்சி சென்னை பிரசாத் லேபில் நேற்று திரையிடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொண்டார். மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் சீனு ராமசாமி, விக்ரமன், பதநிச தயாரிப்பாளர் சங்கமித்ரா, ட்ரெண்ட்லௌட் சிதம்பரம், தியேட்டர் லேப் நடிப்பு பள்ளியின் ஜெயராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
குறும்படத்தைப் பார்த்த பிறகு நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், “குணாநிதியை குழந்தையில் இருந்தே எனக்கு தெரியும். ஐந்து வயதில் லட்சக்கணக்கான மக்கள் முன் மேடை ஏறியவன் குணாநிதி. அவன் மிகப்பெரிய நகைச்சுவை கலைஞன். மருத்துவம் படித்து விட்டு வந்தாலும் கலையில் தான் அவனுக்கு ஆர்வம். ஒட்டு மொத்த குடும்பத்தையும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் சிரிக்க வைக்கும் திறமையானவன். இந்த குறும்படத்தில் புகை புடிக்கும் காட்சியை மட்டும் தவிர்த்திருக்கலாம். ஆனாலும் புகை பிடிப்பதை உயர்த்தி சொல்லவில்லை என்பது ஆறுதல்.
சினிமாவுக்கு நாங்கள் எதிரி என்பது போல சித்தரித்து விட்டார்கள். அப்படி கிடையாது, நான் வாரம் ஒரு படம் பார்ப்பேன், அப்பா மாதம் ஒரு படம் பார்ப்பார். என் குழந்தைகள் வாரம் இரண்டு மூன்று படம் பார்ப்பவர்கள்.
உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், சிகரெட் புகைப்பதை கற்றுக்கொள்ளும் இளைஞர்களில் 52 சதவீதம் பேர், திரைப்படங்களைப் பார்த்து அப்பழக்கத்தை ஆளாவதாக தெரிய வந்துள்ளது. 52 சதவீதம் என்றால் நினைத்து பாருங்கள், பாதிக்கு பாதி. இவர்கள் அனைவரும் சினிமாவினால் சிகரெட் பழக்கத்தை கற்றுக் கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதன் காரணமாகத்தான் திரைப்படங்களில் சிகரெட் புகைக்கும் காட்சிகளை வைக்காதீர்கள் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
சினிமா என்பது நல்ல மீடியம், பெரிய மீடியம், அதில் நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும். தமிழர்கள் சினிமாவை பொழுது போக்காக பார்க்கவில்லை, வாழ்க்கையாக பார்க்கிறார்கள். சினிமாவில் இருந்தவர்கள் தான் தமிழகத்தை 50 வருடங்களாக ஆண்டு வருகிறார்கள், எனவே நல்ல தரமான பொறுப்பான படங்களை தர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். சினிமாவை எப்போதும் நாங்கள் மதிக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் தாணு பேசும் போது, “இளைஞர்கள் இணைந்து உத்வேகத்தோடு இந்த குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு சினிமா இசை வெளியீட்டு விழாவில் தான் அன்புமணி ராமதாஸை சந்தித்தேன். அன்று தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்கிறது. அரசியலில் எதிர் துருவங்களில் இருந்தாலும் நட்பு தொடர்கிறது. ரஜினிகாந்துக்கும், பாமக இயக்கத்துக்கும் மோதல் நடந்த காலத்தில் ரஜினிக்கும், அன்புமணிக்கும் பாலமாக இருந்திருக்கிறேன். இன்றும் அவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்.
பெரிய இடத்து பிள்ளை என்றாலும் குணாநிதிக்கு தொழிலில் இருக்கும் டெடிகேஷன் பாராட்டுக்குரியது. இளையராஜா, ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்கு இந்த குறும்படத்தை போட்டுக் காட்ட நான் முயற்சி செய்வேன். ஆளவந்தான் போல ஒரு படைப்பை கொடுத்த கமல்ஹாசன் இந்த குறும்படத்தை பற்றி கணித்திருப்பது உண்மை. இந்த குழுவினர் என் நிறுவனத்திற்கு ஒரு படத்தை செய்து கொடுக்க வேண்டும் என்றார் கலைப்புலி எஸ் தாணு.” என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “மேற்கத்திய நாடுகளில் சொல்லப்படும் பல வித கதைகள், தமிழ் சினிமா கதை சொல்லலில் சாத்தியமில்லை. வணிக நோக்கத்தில் படங்கள் எடுக்கப்படுவதால், நேரடியாக நாங்கள் சொல்ல முடியாத விஷயங்களை குறும்படங்களில் சொல்ல முடியும். அந்த வகையில் மிகவும் டெடிகேஷனோடு இந்த குறும்படத்தை குணாநிதி மற்றும் குழுவினர் எடுத்திருக்கிறார்கள். இளையராஜா போன்ற இசை ஜாம்பவான் இந்த படத்தை நிச்சயம் பார்த்து பாராட்ட வேண்டும். அன்புமணி சார் தர்மதுரை படத்தை பார்த்து விட்டு பாராட்டினார், நல்ல சினிமாவை எப்போதும் ஆதரிப்பவர் அவர்.” என்றார்.
தியேட்டர் லேப் நடிப்பு பயிற்சி மையத்தின் ஜெயராஜ் பேசும் போது, “வெற்றிக்கு காரணம் குணாநிதி. என் சிறந்த மாணவன், நான் நினைத்த ரோமியோ ஜூலியட் நாடகத்தை அரங்கேற்ற முடியாமல் போனதை இந்த குறும்படத்தின் மூலம் நிறைவேற்றி இருக்கிறான் குணா. சினிமாவில் நிறைய சம்பாதிக்கலாம், புகழ் பெறலாம் என பலரும் சினிமாவுக்கு வருகிறார்கள். பணம், புகழை தாண்டி கலை ஆர்வத்தால் நடிக்க வந்திருக்கிறார் இந்த குணா. படத்தில் வெறுமனே மாஸுக்காக புகை பிடிக்காமல் கதாபாத்திரத்துக்காக புகை புடித்திருக்கிறார் குணா.” என்றார்.
இக்குறும்படத்தை முன்பே பிரத்யேகமாக பார்த்த கமல்ஹாசன், வீடியோ பதிவில் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். தான் உருவாக்க முயற்சி செய்த கிழக்கு ஐரோப்பிய பாணி திரைப்படங்களை இந்த இளம் குழுவினர் செய்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரிந்த இந்த இளைஞர்கள் மேலும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும். எங்களுக்கு போட்டியாக வர வேண்டும் என்று வாழ்த்தினார்.